வாழ்க்கை முழுவதும் வாடகை வீட்டிலேயே வாழ்ந்துவிடலாம் என்று நினைப்பவர்கள்கூட இருந்தார்கள். ஆனால், கொரோனா பேரிடர் காலம் சொந்த வீட்டுக்கான தேவையை உருவாக்கி இருக்கிறது. தவிர, வீட்டிலே அலுவலக வேலைகளை செய்வதற்கான சூழல் இருக்க வேண்டும் என்பதால் வீடு முக்கியமானதாகிவிட்டது. கொரோனாவுக்குப் பிறகுவீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரந்திருக்கிறது.
அதேசமயம், வங்கிகளுக்கும் வீட்டுக் கடன் பிரிவு என்பது முக்கியமானதாக இருக்கிறது. மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது வீட்டுக் கடன் பிரிவில் வாராக்கடன் என்பது மிகவும் குறைவு என்பதால் வீட்டுக் கடனுக்காக பல சலுகைகளை வங்கிகள் வழங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் மாற்றப்படவில்லை என்றாலும், வங்கிகள் போட்டாபோட்டி போட்டு வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்து வருகின்றன. எஸ்பிஐ, கோடக் மஹிந்திரா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்திருக்கின்றன. விழாக்காலம் நெருங்கி வருவதால் மேலும் சில வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கலாம். ஆக, இதுவே வீடு வாங்குவதற்கான சரியான தருணம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு குறைந்தபட்ச வட்டியே 10 சதவீதம் என்று இருந்தது. ஆனால், தற்போது அதிகபட்ச வட்டி கூட 10 சதவீதம் கிடையாது. (ஐடிபிஐ, சவுத் இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் சுய தொழில்புரிபவர்களுக்கு சமயங்களில் 10 சதவீத வட்டி வசூலிக்கின்றன). நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு குறைந்தபட்சம் 6.50 சதவீத வட்டியில் இருந்து வீட்டுக்கடன் கிடைக்கிறது.
எஸ்பிஐ: இந்தியாவில் வீட்டுக் கடன் பிரிவில் முக்கியமான வங்கி எஸ்பிஐ. இந்த வங்கி ரூ.5.05 லட்சம் கோடி அளவுக்கு வீட்டுக் கடன் வழங்கி இருக்கிறது. சிபில் ஸ்கோர் சிறப்பாக இருப்பவர்களுக்கு 6.7 சதவீத வட்டியில் கடன் வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. கடன் தொகையை எவ்வளவு இருந்தாலும் இதே வட்டியில் கடன் கிடைக்கும் என எஸ்பிஐ அறிவித்திருக்கிறது.
கோடக்: வீட்டுக் கடன் பிரிவில் கோடக் மஹிந்திரா வங்கி மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. ரூ.75 லட்சத்துக்கான கடன் எனில் 6.5 சதவீத வட்டிக்கே கடன் கிடைக்கும் என வங்கி அறிவித்திருக்கிறது. ஒருவேளை ஏற்கெனவே அதிக வட்டிக்கு வாங்கி இருந்தாலும், அதனைப் புதிய வட்டி விகிதத்துக்கு குறைத்துக்கொள்ளலாம் என்றும் வங்கி தெரிவித்திருக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி: மற்றொரு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியும் 6.60 சதவீத வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்குகிறது. 6.75 சதவீத வட்டியில் பல வங்கிகள் வீட்டுக் கடன் வழங்குகின்றன.
பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி உள்ளிட்ட வங்கிகளும் வங்கிக் கடன் வழங்குகின்றன.
நீங்கள் மாத சம்பளம் பெறுபவராக இருந்தால், பெரும்பாலான வங்கிகள் 7 சதவீதத்துக்குள் வீட்டுக் கடன் வழங்குகின்றன. 7 சதவீதத்துக்குள்ளான வட்டியே சிறப்பான வட்டி விகிதமாகும்.
இதுதவிர, சில வங்கிகள் பரிசீலனைக் கட்டணத்தை ரத்து செய்திருக்கின்றன. சில வங்கிகள் பெண் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகையை அறிவித்துள்ளன. பட்ஜெட் வீடு என்றால் பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் மானியம் உள்ளிட்ட சலுகைகளும் உண்டு.
ஒரு சதவீத வட்டி: வீட்டுக் கடன் வாங்குபவர்கள் குறைந்த வட்டி விகிதத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகின்றனர். 15 ஆண்டுகளுக்கு கடன் வாங்குகிறீர்கள் எனில், ஒரு சதவீத குறைந்த வட்டியே ஒட்டுமொத்த காலத்தில் சில லட்ச ரூபாயை சேமிக்கும்.
இதுதவிர வரிச்சலுகை பெற்றுக்கொள்ள முடியும். முதல் முறை வீடு வாங்குபவராக இருந்தால், ஒரு நிதி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை அதிகபட்சம் சலுகை பெற முடியும். 80 சி பிரிவின் கீழ் வீட்டுக் கடனுக்கான அசலில் ரூ.1.5 லட்சம் வரை சலுகை பெற்றுக்கொள்ள முடியும்.
பிரிவு 24-ன் கீழ் வீட்டுக்கடனுக்கான வட்டி செலுத்துவன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை சலுகை பெற்றுக்கொள்ள முடியும்.
பிரிவு 80இஇஏ-ன் கீழ் அதிகபட்சம் 1.5 லட்சம் சலுகை பெற முடியும். ஆனால், முதல் முறை வீடு வாங்குபவர்கள், வீட்டின் அதிகபட்ச மதிப்பு ரூ.45 லட்சம் மற்றும் ஏப்ரல் 1,2019 முதல் மார்ச் 31,2022 வரை வாங்குபவர்களுக்கே இந்த சலுகை கிடைக்கும்.
டேர்ம் இன்ஷூரன்ஸ்: குறைவான வட்டியில் கடன் கிடைக்கிறது. ஆனால், அந்த வீட்டுக்கு யார் கடனை செலுத்துகிறாரோ, அவர் 'டேர்ம் இன்ஷூரன்ஸ்' எடுத்துக்கொள்வது நல்லது. வீட்டுக் கடனை எடுத்து அடுத்த சில ஆண்டுகளுக்குள் வீட்டுக் கடன் செலுத்துபவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரும் பட்சத்தில், வீட்டுக் கடனையும் செலுத்த முடியாது, சொந்த வீட்டில் வாழ முடியாது என்னும் சூழலில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அதனால், வீட்டுக் கடன் வாங்கும்போதே அதற்கு ஏற்ப 'டேர்ம் இன்ஷூரன்ஸ்' எடுத்துக்கொள்வது நல்லது.
வீட்டுக்கான தேவை உருவாகி இருக்கும் சூழலில், இதுவரை இல்லாத அளவுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி குறைந்திருப்பதை வாடிக்கையாளர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.