சிறப்புக் களம்

ரசாயன மீன்... கெட்டுப்போன ஆட்டிறைச்சி... உணவே விஷமா? கலக்கத்தில் அசைவ பிரியர்கள்!

webteam

ஞாயிறு விடுமுறை என்றாலே வீட்டில் அசைவம் மணக்க வேண்டுமென்று அசைவ பிரியர்கள் விரும்புவார்கள். பிறந்தநாளோ திருமண நாளோ ஏதோ ஒரு காரணத்தை காட்டி ட்ரீட் என்ற பெயரில் அசைவத்தை ஒரு பிடிபிடிக்கும் நண்பர்கள் கும்பலும் இங்குண்டு. இப்படி அசைவ உணவு என்பது பலருக்கும் மிகவும் பிடித்த ஒன்றோடு ஒன்றாக ஆகிவிட்ட நிலையில் சமீப நாட்களாக வரும் செய்திகள் அசைவ உணவுகள் மீது அச்சத்தை  ஏற்படுத்துகின்றன. பொதுவாக கோழி, ஆடு என்ற பொதுவான அசைவ உணவுகளை எல்லா வயதினரும் உட்கொள்வதில்லை.

உடல்நிலையை காரணம் காட்டி ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு கடல் உணவான மீனை மட்டுமே பலர் உண்பார்கள். மற்ற அசைவத்தைக் காட்டிலும் மீன் உடலுக்கு நல்லது. கண்களுக்கு நல்லது. அதிக அளவு கொழுப்பு இல்லாதது என மீன் உணவு வகைகளுக்கு பாசிட்டிவ் அதிகம். ஆனால் மதுரையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வு தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக மீன் பிரியர்கள் செய்வதறியாது உள்ளனர். மிகப்பெரிய மீன் சந்தையான மதுரை கரிமேடு மீன் சந்தையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அங்குள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில் சுமார் 2 டன் அளவிலான ரசாயனம் கலந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீண்ட நாட்களாக கெட்டுப்போகாமல் இருக்க மீன்களில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்கு நல்லது என்று வாங்கி உண்ணும் உணவில் ரசாயனமா என அதிர்ச்சியில் அமர்ந்திருக்கிறார்கள் மதுரை மக்கள். வெளிமாநிலங்களில் இருந்து வரும் மீன்களில் மட்டுமே ரசாயனம் கலக்கப்படுவதாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் மீன்களில் ரசாயனம் கலக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் ரசாயன மீன் செய்தி ஏற்படுத்திய அச்சத்தினால் தமிழகம் முழுவதும் விற்கப்படும் மீன் மீது சந்தேகப் பார்வையை பதிக்கின்றனர் மீன் விரும்பிகள். மீன் வேண்டாம், ஆட்டு இறைச்சியே சாப்பிடலாம் என்று முடிவெடுத்தாலும் அதற்கும் ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் சுகாதாரமற்ற முறையில் நோய்வாய்ப்பட்ட ஆடுகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் விற்பனை செய்யப்படுவது கெட்டுப்போன இறைச்சி எனத் தெரியவந்தது. இதனை அடுத்து 500 கிலோ அளவிலான ஆட்டு இறைச்சி மற்றும் 3 நோய்வாய்ப்பட்ட ஆடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒரு புறம் பிராய்லர் கோழிகள் மீது உறுதிப்படுத்தப்படாத கதைகள் அதிகம் கூறப்பட்ட நிலையில் மக்கள் மீன்கள் பக்கமும், ஆடுகள் பக்கமும் திரும்பினர். ஆனால் தற்போது மீனில் ரசாயனம், நோய்வாய்ப்பட்ட ஆடு என அசைவம் மீதே அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அசைவ பிரியர்கள் கவலையடைந்துள்ளனர். பொதுவாக உணவகங்களில் சமைக்கப்படும் அசைவம் மீது தரம் சார்ந்த நம்பிக்கை இல்லாமல் பலரும் வீடுகளில் மட்டுமே அசைவம் உண்பார்கள். ஆனால் வாங்கப்படும் மீனோ, இறைச்சியோ தரம் குறைந்து உடலுக்கு விஷமாக இருந்தால் என்னதான் செய்வது என புலம்புகின்றனர் பலர்.

உணவே மருந்து என்ற காலம் போய், இன்று உணவே விஷமாகி வருகிறது. அசைவம் என்றில்லை, காய்கறிகள், பழங்கள் என உண்ணும் அனைத்திலும் ரசாயனம், கலப்படம். நம்பி வருபவர்களை லாபத்திற்காக வியாபாரிகள் ஏமாற்றக்கூடாது என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேவேளையில் அரசும் அதிகாரிகளும் உணவு விஷயத்தில் தீவிரமாக செயல்பட வேண்டுமென்றும், அதிரடி ஆய்வுகள், அபராதம் விதித்தல் போன்ற செயல்களால் உணவை விஷமாக்கும் வியாபாரிகளை கண்டு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.