இருசக்கர வாகனங்களை 3 வருடங்களுக்கு மேலாக ஓட்டுபவர்களில் பெரும்பாலானோருக்கு முதுகுவலி பிரச்சனைகள் இருக்கும். நீண்ட தூரம் பைக் ஓட்டுவது, கரடுமுரடான சாலைகளில் பைக் ஓட்டுவது போன்ற காரணங்களால் இதுபோன்ற முதுகுவலி ஏற்படுகின்றது. பைக் ஓட்டுவது மட்டுமின்றி கணினி முன்பு உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கு இதுபோன்ற முதுகுவலி பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
இவற்றை தவிர்ப்பதற்கும், வலியை குறைப்பதற்கும் நம் அன்றாட வாழ்வில் சில சிறு மாற்றங்களை மேற்கொண்டாலே போதும் என மருத்துவ வல்லுநர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி பைக் ஓட்டுபவர்கள் தங்களது பர்ஸ்-ஐ பேண்ட்டின் பின்புறப் பாக்கெட்டில் வைப்பது, இறுக்கமான பேண்ட்-ஐ அணிந்து கொண்டு நீண்ட தூரம் பைக் ஓட்டுவது, சரியான முறையில் அமராமல் பைக் ஓட்டுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சென்னை போன்ற போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் பைக் ஓட்டும் போது 20 கி.மீ தூரத்திற்கு ஒரு முறை சிறிது நேரம் முதுகிற்கு ஓய்வளிக்க வேண்டும்.
சாலையில் செல்லும் போது சிறு பள்ளத்தில் இறங்கினாலே குலுங்கும் பைக்குகளை தவிர்த்து, கனமான பைக்குகளை பயன்படுத்தினால் அது முதுகுகிற்கு செல்லும் அழுத்தத்தை குறைத்து வலி ஏற்படுவதை தவிர்க்கும்.
அலுவலகங்களில் கணினி முன் உட்கார்ந்து பணிபுரிபவர்கள் ஒருபுறமாக சாய்ந்து உட்காராமல், சரியான முறையில் உட்கார்ந்து பழக வேண்டும்.
நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரியாமல் மணிக்கு ஒரு முறை சிறிது தூரம் நடந்து விட்டு உட்காருவது முதுகின் அழுத்தத்தை குறைக்கும்.
முதுகிற்கு பலம் சேர்க்கும் யோகா முறைகள், தினமும் காலையில் அரை மணி நேரம் நடப்பது,
முதுகிற்கு தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவற்றையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் மருத்துவத்திற்கு செலவிடும் பெரும் தொகையும், தேவையற்ற வலிகளையும் நாமே எளிதில் தவிர்க்கலாம்.