சிறப்புக் களம்

‘அன்று ரஜினி; இன்று ஜிவி.பிரகாஷ்’ சினிமாவில் காமம் பேசக்கூடாத ஒன்றா?-‘பேச்சுலர்’ திறனாய்வு

‘அன்று ரஜினி; இன்று ஜிவி.பிரகாஷ்’ சினிமாவில் காமம் பேசக்கூடாத ஒன்றா?-‘பேச்சுலர்’ திறனாய்வு

subramani

இந்தியப் பெருங் கலாசாரத்தில் சமகால கலைவடிவங்களுக்குள் காமம் எப்போதும் சர்ச்சைக்குறியதாகவே பார்க்கப்படுகிறது. இது உண்மையில் நல்ல விசயமே அல்ல. மனித வாழ்வில் காதலுக்கு இருக்கும் அதே வெளி காமத்திற்கும் உண்டு. இதில் உயர்வு குறைவு என்று பிரிக்க எதுவுமே இல்லை. ஜிவி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் பேச்சுலர் என்ற சினிமா வெளியானது. தற்போது சோனி லைவில் காணக் கிடைக்கும் இந்த சினிமா குறித்து விமர்சித்த பலரும் அப்படத்தில் பொங்கி வழியும் காமம் குறித்தே அதிகம் சாடுகின்றனர்.

கதைப்படி கோயம்புத்தூர் இளைஞர் ஜிவி. பெங்களூருக்கு ஐடி வேலைக்காக செல்கிறார். அங்கு தனது நண்பர்களுடன் ஜாலியான நாள்களைக் கழிக்கும் அவருக்கும் திவ்யா பாரதிக்கும் இடையே நெருக்கம் உருவாகிறது. இருவரும் ஒரே வீட்டில் லிவ் இன் உறவுமுறையில் வாழ்கிறார்கள். ஒரு கட்டத்தில் திவ்யா பாரதி கருவுறவே நீளும் நடைமுறைச் சிக்கலிலிருந்து ஜிவி தப்பித்துக் கொள்ள நினைக்கிறார். அதற்காக அவர் எந்த எல்லை வரை போனார் என்பதே திரைக்கதை. சினிமாவாக ஒரு நல்ல திரைக்கதை அனுபவத்தை பேச்சுலர் கொடுக்கத் தவறியிருக்கலாம். ஆனால் திரைக்கதை குறித்து பேசும் பலரும் படம் ரொம்ப ஸ்லோ என்கிறார்கள். உண்மையில் ஒரு சினிமாவின் திரைக்கதை ஜெட்வேகத்தில் தான் இருக்க வேண்டும் என்ற முன்முடிவோடு படம் பார்த்தால் இயக்குநர் ஹரி படங்களைத் தவிர நமக்கு வேறு எந்த சினிமாவும் பிடிக்காது.

ஒரு சினிமாவை ரசிகராக எப்படி அணுக வேண்டும் என்பதை அனைவரும் கற்றுக் கொள்வது முக்கியம். ஒரு சினிமா பேசும் கதைக் கரு அதற்கு நியாயம் செய்யும் காட்சிகள் இவையே நல்ல சினிமாவிற்கு முக்கிய அடையாளங்கள். அந்த கதைக் கரு பொது நியாயத்துடன் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து நாம் பலமுனைகளில் விவாதிக்கலாம். ஆனால், இந்தக் கதையை விறுவிறு காட்சிகளுடன் எடுத்திருக்கலாம் எனச் சொல்வது சரியானது அல்ல.

சரி பேச்சுலர் என்ன பேசுகிறது...? திவ்யா பாரதி கருவுற்றதை அறிந்த ஜிவி அதனை ஏற்க மறுக்கிறார். கருவை களைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார். ஜிவி நழுவிச் செல்வதை ஏற்க முடியாத திவ்யா பாரதி தன் பிரச்னையை சட்ட ரீதியாக அணுக முயல்கிறார். அப்போதும் கூட ஜிவிக்கு தனது இணையின் மீது பாசமோ அன்போ ஏற்படவில்லை மாறாக தான் ஆண்மையற்றவர் இந்தக் கருவுக்கு தான்காரணம் இல்லை என்பதை நோக்கியே நகர்கிறார் அவர்.

சரி ஒரு கேள்வி ஒரு ஹீரோ இப்படி இருக்கலாமா...? தன்னால் கருவுற்ற பெண்ணைக் கைவிடலாமா...? கூடாது. ஆனால், இக்கதையில் ஜிவி ஒரு ஹீரோவே அல்ல. சராசரிக்கும் கீழ் உள்ள இளைஞன் அவ்வளவுதான். இது நாயகிக்கான சினிமா. வழக்கமாக காதலில் துவங்கி காமத்தில் முடியும் இந்திய சினிமாக்களைப் பார்த்த நமக்கு இப்படத்தில் ஆணும் பெண்ணும் காமத்தில் புதிய உறவைத் துவங்குவதை ஏற்பதில் இருக்கும் உளவியல் சிக்கலை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதுவே சமகால எதார்த்தம். இந்திய ஏற்பாட்டுத் திருமணச் சூழல் இப்படித்தானே இருக்கிறது. காலம் காலமாக அப்படியொரு சிஸ்டமை நாம் ஏற்றுக் கொள்ளும் போது லிவ் இன் உறவு முறையை நாம் ஏற்க மறுப்பது எப்படி...?

காட்சி அணுபவமாகப் பார்த்தாலும் கூட சுவாரஸ்யமான சினிமாவாக பேச்சுலர் பல இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறது. மருத்துவமனையில் பரிசோதனைகளுக்குப் பிறகு திவ்யா பாரதி ஜிவி.பிரகாஷின் அருகில் அமர்ந்து கருவுற்ற உணர்வை விவரிக்கும் காட்சி இதம். அது போல, ஜிவி. பிரகாஷின் நண்பன் ஜிவியிடம் “டேய் அவளுக்கு உன்ன விட்டா ஆள் இல்லைனு நினச்சியா...? அவ நினச்சிருந்தா ஒரு டேப்லட்ல முடியக் கூடிய விசயம்டா இது. அவளுக்கு அந்த குழந்தை வேணும்னு நினைக்கிறான்னா, நீ வேணும்னு அர்த்தம்.” எனப் பேசும் காட்சி முக்கியமானது. இக்காட்சி நடப்பதாகக் காட்டும் லொகேசன், அதனை இரவில் பத்து பதினைந்து நண்பர்களுடன் கம்போஸ் செய்த விதம் என ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் பிரமாதப் படுத்தியிருக்கிறார். ஜிவி.பிரகாஷின் நண்பர்கள், முனீஷ் காந்த், பக்ஸ், மிஸ்கின் உள்ளிட்டோர் கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகளால் நம்மை சிரிக்க வைக்கிறார்கள். “பச்சிகளாம் பறவைகளாம்” பாடலும் சூப்பர் ஹிட். சினிமாவாக வேறு என்ன வேண்டும். படத்திற்கு ஏ சான்றிதல்தான் வழங்கப்பட்டிருக்கிறது பிறகு அதில் காமம் தூக்கல், இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளன என விவாதிப்பதில் அர்த்தமில்லை.

சரியாகச் சொன்னால் சதீஷ் செல்வகுமார் சமகாலத்தில் மனித உறவுகள் குறித்த மிக முக்கிய விவாதத்தை பேச்சுலர் மூலம் முன்வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் கருவுறுவதை வெறுப்புடன் அணுகும் இந்திய மனநிலையிலிருந்து மெல்ல வெளியேற இதுபோன்ற கதைகள் துவக்கமாகவேணும் இருக்கட்டும்., காமம், காதல், குழந்தை பெற்றுக் கொள்வது இவை எல்லாம் இயற்கையின் நியதிப் படி தனி மனிதர்கள் நிகழ்த்தும் அந்தரங்க விசயமே தவிர. சமூகம் தரும் புற அழுத்தங்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. இப்படியாக சமூகம் தரும் புற அழுத்தங்களால் வளர்க்கப்பட்ட கதாபாத்திரம்தான் பேச்சுலரில் ஜிவி.பிரகாஷ். அதற்கு எதிர் முனையில் நிற்கும் துணிச்சலான பெண்ணே திவ்யா பாரதி கதாபாத்திரம். அவள் ஒரு கட்டத்திற்கு மேல் என்னை கைவிட்றாத என தன் இணையிடம் கெஞ்சவில்லை. மாறாக தன்னை நிராகரிக்க தான் ஒரு ஆண்மையற்றவன் என்றுகூட சொல்லத் துணியும் ஜிவி.பிரகாஷை தூக்கி எறிந்துவிட்டுப் போகிறார். இந்த க்ளைமேக்ஸ்தான் படத்திற்கு நல்ல நிறைவைத் தருகிறது.

படத்தின் கதை குறித்த விவாதங்கள் இப்படி என்றால்., தற்கால தமிழ் சினிமாவில் சொல்லத்தகுந்த நாயகனாக இருக்கும் ஜிவி.பிரகாஷ் இப்படி ஒரு நெகட்டிவ் ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு நிச்சயம் பாராட்ட வேண்டும். காரணம் 70 - 80 கால கட்ட சினிமாக்களில் பெண்களை “அவ மலடி” என நேரடியாக வசைபாடும் வசனங்களுடன் நிறைய சினிமாக்கள் வந்தன. அந்தப் புள்ளியிலிருந்து பேச்சுலரை நாம் வந்தடைந்திருப்பது ஆரோக்கியமானதே. 1993’ல் வெளியான எஜமான் திரைப்படத்தில் ரஜினியை ஆண்மையற்றவர் என விவாதிக்கும் காட்சிகள் இருந்தன. அந்நாள்களில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த ரஜினி அந்த கதாபாத்திரத்தினை தயக்கமின்றி ஏற்று நடித்தார். பிறகு நெடுங்காலத்திற்குப் பிறகு 2008ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் பூ திரைப்படம் வெளியானது. சொந்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொள்வதால் இனப்பெருக்க சிக்கல் உருவாகலாம் எனப் பேசிய அப்படத்தில் நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். தற்போது பேச்சுலரில் நாயகன் ஆண்மையற்றவர் என விவாதிக்க வேறொரு காரணம் முன்வைக்கப்படுகிறது.

காமம், காதல், குழந்தை பெற்றுக் கொள்வது போன்ற விசயங்களை நார்மலைஸ் செய்ய வேண்டும். அதுபோலவே ஆண்மையற்றவர், பெண் தன்மை இல்லாதவர் போன்ற விசயங்களையுமே கூட இயற்கையின் நியதிக்குட்பட்டு நிகழும் சாதாரண விசயங்கள் என ஏற்றுக் கொள்ளும் புள்ளியை நோக்கி பொது சமூகம் நகரவேண்டும். அப்படி நகரும் போது. காமம், காதல், லிவ் இன் உறவு முறை என எல்லாமே எந்த உருத்தலுமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும்.