சிறப்புக் களம்

மொபைல் ஆப்களில் பரவுகிறதா ஆபாசம்.. இணையதளங்களுக்கு மட்டும் தடை போதுமா..?

மொபைல் ஆப்களில் பரவுகிறதா ஆபாசம்.. இணையதளங்களுக்கு மட்டும் தடை போதுமா..?

jagadeesh

இந்தியாவில் ஆபாச இணையதளங்களுக்கு கடந்தாண்டு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டினர். ஆனால், இணையதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை "ஆப்"களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. ஆம், ஆபாசங்கள் நமது செல்போன்களுக்கே நேரடியாக வந்துவிடுகிறது. பெரும்பாலும் இதுபோன்ற செயலிகள் நடிகைகளும், மாடல்களும் நடத்துகின்றனர்.

இதுபோன்ற ஆப்களை முதலில் அறிமுகப்படுத்தியவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. பாலிவுட்டில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்த இவர், பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியவர். இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர். இதன் காரணமாக "பூனம் பாண்டே ஆப்" என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இதனால் நல்ல வருமானமும் வந்தது. இதற்கு அடுத்தகட்டமாக தன்னுடைய ஆபாச வீடியோவைவும் வெளியிட்டார்.

ஆனால், இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு செயலியை பதிவிறக்கம் செய்தவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். ஏறக்குறைய ஆபாச விடீயோவை பார்க்க ரூ.1000 செலுத்த வேண்டும். ஏறக்குறைய 10 லட்சம் பேர் பூனம் பாண்டேவின் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால் ஆபாசங்களின் உச்சக்கட்டமாக சென்றுக்கொண்டு இருக்கிறார் பூனம் பாண்டே. இவர் தொடங்கி வைத்த புள்ளிதான், இப்போது ஏராளமான மாடல்களும், நடிகைகளும் தங்கள் பெயர்களில் செயலிகளை உருவாக்கி ஆபாச வீடியோக்களை பதிவிட்டு அதன்மூலம் வருமானம் பெற்று வருகின்றனர்.

இதுவொறு புறம் இருக்க மற்றொறு புறம் வெப்சீரிஸ்கள். இதில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் முதலிடம் பெற்று இருந்தாலும் இந்திய அளவில் வூட், ஆல்ட்பாலாஜி, ஜீ5, உல்லு ஆப்கள் இப்போது மிகப் பிரபலமானவையாக இருக்கின்றன. சினிமாவாக பெரிய திரைக்கு வருவதற்கு பதிலாக மொபைலின் சின்னத் துறையில் பிரகாசமாக பவனி வருகிறது வெப் சீரிஸ்கள். வித்தியாசமான களம், விறுவிறுப்பான திரைக்கதை, சென்சார் செய்யப்படாத காட்சிகள் என இளைய சமுதாயத்தை கட்டிப்போடுகிறது. மேலும், பயணங்களின் போது மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கிறது இன்றைய வெப் சீரிஸ்கள். ஆனால் இப்போது ஆபாச கதைகள், காட்சிகளை மட்டுமே வைத்து வெப்சீரிஸ்கள் செயலிகள் மூலம் ஊடுருவ தொடங்கி இருக்கிறது.

பாலிவுட்டில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஏக்தா கபூரின் ஆல்ட் பாலாஜி ஆப்பில் வெளியான கண்டி பாட், ராகினி எம்எம்எஸ் ரிட்டர்ன், xxx அன்சென்சார்டு ஆகியவை ஆபாசம் தொடர்பான கதைகளை அப்பட்டமாக காட்சிப்படுத்தியுள்ளன. அதிலும் "கண்டி பாட்" சீரிஸில், பாலின புத்தகங்களில் வந்த கதைகள் உள்ளன.. இதில் ஆபாச காட்சிகள் ஏராளம் என்பதால் மிகவும் பிரபலான செயலியாக ஆல்ட் பாலாஜி இருக்கிறது, வெப் சீரிஸ்க்கு, ஆப் வீடியோக்களுக்கு சென்சார் இல்லை என்பதால் இத்தகைய ஆபாசங்கள் உச்சத்துக்கு சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் வெப்சீரிஸ்க்கு சென்சார் தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. 

அமேசான், நெட் பிளிக்ஸ் போன்ற இணைய வீடியோ தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாததால் ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளும் இடம்பெறுவதால் இவற்றைத் தயாரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆன்லைன் நிறுவனம் தயாரிக்கும் நிகழ்ச்சிகளுக்கு, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சக அனுமதி தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து இம்மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு விதிமுறைகள் விதிப்பது தொடர்பாக, மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இப்போது நடைபெற்று வருகிறது. ஆபாச இணையதளங்களுக்கு தடை விதித்த மத்திய அரசு, இதுபோன்ற ஆபாச செயலிகளையும், வெப்சீரிஸ்களுக்கும் கடுமையான விதிமுறைகளை வகுத்த கண்காணிக்க வேண்டும்.