“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
"நமது மீட்சிக்கும் விடுதலைக்கும் வெளியில் இருந்து எவரும் உதவிட முடியாது, நமக்கான வலிமையை சமகாலத்தில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் நாமே திரட்டிக்கொண்டு, அணியாக எழுவதின் மூலம் தான் சாதித்துக் கொள்ள முடியும்" என்று அறைகூவல் விடுத்தவர்...
"சாதி பேதமற்ற கிறிஸ்துவமிஷனரி துறைமகன் ஒருவனுக்கு சாதி மதம் பார்க்கும் சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஆயிரம் பேர் கொண்டவர்கள் ஈடாக மாட்டார்கள்” என்று கொதித்தவர்...
அன்றைய காங்கிரஸ் கட்சியின் நடைமுறையை இந்து காங்கிரஸ் என்று துணிந்து சாடியவர்...
திராவிட கருத்துகளின் திராவிட அரசியல் முன்னோடி பண்டிதமணி கா.அயோத்திதாசர். அவரின் பிறந்த தினம் இன்று!
சென்னை தேனாம்பேட்டை 1845 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாளில் பிறந்தார் அயோத்திதாசர். அவரின் இயற்பெயர் காத்தவராயன். இளமைப் பருவத்தில் நீலகிரியிலும் முதுமை பருவத்தில் சென்னை ராயப்பேட்டையிலும் வசித்து வந்தார். தமக்கு கற்பித்த தமிழ் அறிஞர் “வல்லகாலத்தி அயோத்திதாசன்” மேல் கொண்டிருந்த பற்றினால் அவரது பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டார்.
கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி, அரசியல் சிந்தனையாளர், மருத்துவர், படைப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகப் பண்டிதராக இருந்தார் அயோத்திதாசர்.
தமிழ் தென்றல் திருவிக அவர்களின் குடும்ப மருத்துவராக இருந்திருக்கிறார். திருவிக-வின் முடக்குவாதத்தை நீக்கி அவரை எழுந்து நடமாட செய்தவர் அயோத்திதாசர். திருவிக அவர்கள் தன் வாழ்க்கை குறிப்புகளில் , அயோத்திதாசரை ஒரு மருத்துவராக அவ்வளவு உயர்வாக எழுதி இருக்கிறார். “ஒரு மருந்தா இரு மருந்தா?... ரசாயனம், செந்தூரம், பசுமம், க்ரதம், சூரணம் என்று பல மருந்து கொடுத்து முடங்கி கிடந்த திருவிக அவர்களை எழுந்து நடக்க செய்த மாமருந்து இவர்” என்று கூறுகிறார்.
“அண்டம் பிண்டம் என இரண்டென்று ஏதுமில்லை அனைத்தும் ஒன்றே” என ஆதிசங்கரர் நிறுவிய அத்வைத தத்துவ நூல்களை படித்ததால், 1870 இல் (தனது 25 வது வயதில்) அத்வைதானந்த சபை என்ற அமைப்பை நிறுவினார். அதன் மூலம் பழங்குடி மக்களுக்காக பணியாற்றினார். ஆனால் அத்வைதத்தின் பிற்காலப் போக்குகள் சனாதன தர்மத்தின் மீது காலூன்றி நிற்பதாக கருதி, அதை கைவிட்டார்.
பழங்குடியினரான தமிழர்கள் தாழ்த்தப்படுவதை, புறக்கணிக்கப்படுவதை, ஒடுக்கப்படுவதை கண்டு துடித்தார். ‘தங்களை தாங்களே தெரிந்து கொள்ளாதவர்கள், தனது இனத்தை எவ்வாறு தெரிந்து கொள்வார்கள்’ என்று வேதனையுற்றார். இந்து மதத்தின் அடுக்கு சமூகம் முறையின் கொடும் வழமையை கேள்விக்கு உட்படுத்தினார். மதத்தாலும் வர்ண வேறுபாட்டாலும் ஆதிதிராவிடருக்கு ஏற்பட்ட அவல நிலையை தனது பேச்சின் மூலமாகவும் எழுத்தின் மூலமாகவும் வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு கொண்டு போய் சேர்த்து, அவர்கள் மீது வெளிச்சத்தை பாய்ச்சினார். அதுவரை இலை மறை காயாக இருந்தவையாவும், அயோத்திதாசரின் பேச்சால் வெளிவரத்தொடங்கியது.
திட்டமிட்டு அழிக்கப்பட்ட இம்மண்ணின் மைந்தர்களின் பண்பாட்டுடைய ஒத்த கூறுகளை மீட்டெடுத்து, மக்களின் பயன்பாட்டிற்கு வைத்தார்.
”பறையர் என்போர் கடும் உழைப்பாளிகள். மட்டுமல்லாமல் பௌத்த மதத்தை தழுவினர். இதனால்தான் அவர்களை மூர்க்கமாக தாழ்நிலைக்கு தள்ளிவிட்டனர்” என்றவர் அயோத்திதாசர். தமிழ்நாட்டில் ஆதி திராவிட முன்னேற்றத்திற்காக அயோத்திதாசரோடு இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, ஜான் ரத்தினம், மதுரை பிள்ளை போன்றவர்கள் எல்லாம் இணைந்து பணியாற்றினர்.
1881 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்ட பொழுது தாழ்த்தப்பட்டவரை ”பூர்வ தமிழர்” என்ற பெயரால் குறிப்பிட வேண்டும் என்று கோரிக்கையை அரசிடம் வைத்தார்.
1882 ஆதிதிராவிடர் ஜன சபையை உருவாக்கினார்.
1885 இல் தனது கொள்கைகளை பரப்புவதற்காக “திராவிட பாண்டியன்” என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். ஜான் ரத்தினம் அதன் ஆசிரியராக பணியாற்றினார்.
1886 பழங்குடி மக்களான பூர்வ தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று அறிவித்தார். அன்றைய ஆதிக்க சமூகங்கள் அதைக்கேட்டு அதிர்ந்து நின்றன.
1890 திராவிட மகா ஜன சபை தோற்றுவிக்கப்பட்டது. அதன் முதல் மாநாடு 1891ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியில் நீலகிரியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தான் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வி உரிமைக்காக தனி பள்ளிகள், அரசு பணிகள், பொதுக் குளங்களில் நீர் எடுக்கும் உரிமை, அரசு அலுவலகங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் செல்லவும், அமரவும் சம உரிமை, கிராம அதிகாரிகளாக அவர்கள் அமர்த்தப்படுதல், கோவில் நுழைவு என்பன போன்ற வரலாறு சிறப்பு வாய்ந்த பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1892 இல் சென்னை மாகாண சங்கத்தின் வாயிலாக அரசுக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார். ஒன்று கல்வி உரிமை, இரண்டு இட ஒதுக்கீடு
இதனால் 1893 பிப்ரவரி முதல் நாளில் தாழ்த்தப்பட்டவர்களிடம் கல்வி பரவலாகப்பட வேண்டும் என்ற அரசாணை உறுதி ஆயிற்று.
மேலும் 1894 நிலம் அளிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஆணையிடப்பட்டது. இதுதான் பின்பு பஞ்சமி நிலங்கள் பெற காரணமாயிற்று. ‘அடிப்படை உரிமைகளான கல்வி உரிமை, நிலை உரிமை போன்றவை பெறுவதற்கு தாழ்த்தப்பட்டவர்கள் தாங்களாகவே முயற்சி செய்ததுதான் காரணம்’ என்றுகூறினார். இவையே அவர்கள் அரசியல் உரிமை பெறுவதற்கும் அடிப்படை காரணமாக அமைந்தது.
அனைத்து சமய கோட்பாடுகளின் சாரங்கைளையும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்காக தொடங்கப்பட்ட பிரம்ம ஞான சபை நிறுவனங்களில் ஒருவரான ஆல்காற்றுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார் அயோத்திதாசர். அவரின் உதவியோடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு என பல பள்ளிகளையும் நிறுவினார்.
பௌத்த மதத்தில் ஈடுபாடு கொண்ட அயோத்திதாசர் 1900-ஆம் ஆண்டில் நண்பர் கிருஷ்ணசாமி என்பவரோடு சேர்த்துக்கொண்டு ஆல்காற்றுடன் இலங்கைக்குச் சென்றார். அங்கு மலிங்ககண் விகாரையில் சுமங்கல மகாராணாரிடம் பஞ்சசீலத்தைப் பெற்று பௌத்தர் ஆனார்.
1902 இல் தென்னிந்தியாவில் பௌத்த சங்க சாக்கிய சங்கம் என்ற அமைப்பை ராயப்பேட்டையில் நிறுவி பௌத்த மத கொள்கைகளான பரப்பத் தொடங்கினார்.
இந்திய பௌத்த மதத்தின் மறுமலர்ச்சியாளர் என்றும் அழைக்கப்பட்டார். பின்னர் சங்கம் தென்னிந்திய பௌத்த சங்கம் என்று மாற்றப்பட்டது. சங்கம் தொடர்ந்து இயங்குவதற்கு அண்ணி பெசண்ட் அம்மையார் மாதம் 10 ரூபாய் தானாக வழங்கி இருந்தார். பின் அயோத்திதாசர், ‘சிந்தனை சிற்பி’ மா சிங்காரவேலன், லட்சுமிநரசு ஆகியோரோடு இணைந்து பௌத்த மத கருத்துகளை பரப்பினர்.
தனது வாழ்நாள் முழுவதும் கடுமையான பிராமின எதிர்புகளுக்கிடையே “திராவிட பாண்டியன்- தமிழன்” என்ற இதழை நடத்தினர். பின் பெயர் மாற்றப்பட்டு, “ஒரு பைசா தமிழன்” என்ற இதழானது. பின் சங்கத்தின் வாயிலாக பௌத்த தர்மத்தை தமிழக பூர்வ குடியினரான ஜாதி பேதமற்ற திராவிடர்களின் மதமாகவும், பிராமணியத்திற்கு எதிர்மதமாகவும் கட்டி எழுப்ப அரும்பாடு பட்டார்.
மராட்டியத்தில் அம்பேத்கர் தொடங்கிய ”நவயான பௌத்த” இயக்கம் தொடங்க்ப்படுவதற்கு சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே இங்கு அயோத்திதாசர் அதற்கான பணிகளை தொடங்கி விட்டார். அதனாலேயே “நவயான பௌத்தத்திற்கு” முன்னோடி என அயோத்திதாசர் அழைக்கப்படுகிறார். இருபதாம் நூற்றாண்டில் பௌத்த தர்மத்தை ஆதி வேதம் என்று அழைத்தார் அவர். சாதியை எதிர்ப்பதற்காக, சமத்துவத்திற்காக, ஒழுக்கமான நவீன வாழ்வுக்காக அவர் கட்டியை எழுப்பப்பட்டது பௌத்தமென சொல்லப்பட்டது.
அயோத்திதாசர் பௌத்தத்தை ஏன் முன்னெடுத்தார்? என்ற கேள்வி எழுப்பப்பட்ட பொழுது அவர் மறுமலர்ச்சி வழியை பின்பற்றிய பல அறிஞர்களும் பல அரசியல் தலைவர்களும் ஒரே பதிலை தான் அளித்தனர். அது, “காந்தியும் பாரதியும் திலகரும் வினோபாரும் கீதையை ஏன் முன்னெடுத்தனர் என்ற வினாவை எழுப்புவோமேயானால், இதற்கு எளிதில் முறை கிடைக்கும்....” என்பதே.
அயோத்திதாசரின் நோக்கம் எல்லாம் ஜாதிபேதங்களை தவிடுபொடியாக்குவதும் ஒடுக்கப்பட்டோர் தங்கள் உயர்ந்த வரலாற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதும்தான். இவ்விரண்டு இயக்கங்களும் சேர்ந்து அவரது சொற்களில் எழுத்துக்களிலும் அனலாக தகித்தன.
அக்கால கூத்து மேடைகளில் நகைச்சுவை என்ற பெயரில் பறையர்களை அவமானப்படுத்திய காட்சிகளையும் பாடல்களையும் கண்டு சகிக்க முடியாத அயோத்திதாச பண்டிதர், ‘நூறு குடிகளை கெடுத்து தங்களின் ஒரு குடி சுகம் அடைய கூறும் சாதி தலைவர்களின் கொடுஞ்செயல்’களை அடக்க, “அரக்கருணையம் செங்கோல் மட்டும் உதவாது.... மரக்கருணையாம் கொடுங்கோலும் கிஞ்சித்து இருந்தே தீர வேண்டும்” என்று எழுதினார்.
வேறு மதத்தை சார்ந்த பிறகும் சாதி ஆச்சாரத்தை விட்டு விடாதவர்களை கடுமையாக சாடினார். இந்து மதமும் சாதி பிரிவுகளும் ஒன்றை ஒன்று தாங்க பிடித்து கொண்டிருக்கையில் ‘சுயராஜ் கோரிக்கைகள் எல்லாம் கிடக்கட்டும்... முதலில் தேவைப்படுவது சாதி மத கசிமலங்களை அகற்றுவதுதான்’ என்று முழங்கினார். இப்படி எல்லாம் இவர் பேச கண்டு , “சுயராஜ்ய கோரிக்கை கிளர்ச்சியில் திசை திருப்புவதற்கான ஆங்கிலேயரின் சதி” என்றனர் சிலர். அப்படி நினைத்தவர்களில் பாரதியாரும் ஒருவர். ‘ஆச்சார சீர்திருத்தம் எல்லாம் பின்னர் தான் அரசியல் மாற்றம் தான் முதலில்’ என்று அவர் எழுதினார். ஆனால் ‘சாதி - குல பேதங்களை முற்றிலும் அகற்றிய பிறகு தான் சகலருக்கும் சம உரிமை தரும் சுயராஜ்யம் வேண்டும்’ என்ற தன் நிலைப்பாட்டில் அயோத்திதாசர் உறுதியாக நின்றார்.
‘ஐரோப்பியருக்கு உள்ள சுகங்களெல்லாம் இந்துக்களும் அடைய வேண்டும்’ என்று முயன்றோருக்கு மத்தியில், “பார்ப்பானுக்கு உள்ள சுகம் பறையனுக்கும் வேண்டும் என்ற கருணை இல்லையோ?...” என்ற வேதனை பட்டார் தாசர், மேலும் ”ஒற்றுமை பற்றி பேசும் சுதேசி காங்கிரஸ் கமிட்டியாருக்கு பிராமணர் ஓட்டல்கள் முன் கிறிஸ்தவர், பஞ்சமர், முகமதியர் நுழையக் கூடாது என்று பலகையில் எழுதி தொங்கவிடப்பட்டிருப்பது தெரியவில்லையோ?” என்று உரத்து கேட்டார்.
அயோத்திதாசருக்கு என்ற ஒரு கொள்கை உண்டு. போலவே ஒரு மதம் உண்டு. ஓர் அறிவியல் கோட்பாடும் உண்டு. ஒரு வரலாற்று கோட்பாடும் உண்டு அனைத்து இருக்கும். ஆனால் அனைத்திற்கும் அடிப்படை பேதமின்மையே...!
பிராமணரின் ஆதிக்கத்தையே எதிர்த்து கிளம்பிய பிராமண அல்லாத சங்கத்தினரை பார்த்து அயோத்திதாசர் கேட்ட முதல் கேள்வி “பிராமணர் வகுத்த சாதி மத, ஆச்சாரத்தை ஒழித்து விட்டீர்களா? அப்படி இல்லை என்றால் பிராமணர் அல்லாதார் என்று கூறிக் கொள்ளாதீர்கள். அது வீண்” என்பது. மனுதர்மசாஸ்திரத்தை குறிப்பிடும் போதெல்லாம் மனு அதர்மசாஸ்திரம் என்று எழுதுவார் அயோத்திதாசர். வேண்டும் என்றே இவ்வாறு பிழை போட்டு எழுதுவதன் மூலம் வைதீக ப்ரதிகளையும் ஆயுர்திகளையும் சாய்ப்பது அயோத்திதாசரின் பாணி .
1907ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதியில் இருந்து 1914 ஆம் ஆண்டு தான் இறக்கும் வரை ‘ஒரு பைசா தமிழன்’ என்றும் பின் ‘தமிழன்’ என்றும் வார ஏட்டை நடத்தி வந்தார். அதன் அன்றைய விலையை காலணா. கோலார் தங்க வயல் பௌத்தர்கள் கூடி ஒரு சிறிய அச்சு இயந்திரத்தை வாங்கி தந்தார்கள். தமிழ்நாடு, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா என்று பல நாடுகளில் இது விரும்பி படிக்கப்பட்டது. சுதேசமித்திரன் போன்ற இதழ்களில் வெளியாகும் கருத்துக்களுக்கு தான் நடத்தும் இதழ்கள் வாயிலாக எதிர்க்கருத்துகளை வலுவாக சேர்த்து வந்தார்.
1908 மே 16 நாளைய சுதேசமித்திரன் இதழில் வாசகர் ஒருவர், சுதேசிகளான இந்துக்கள் சிறையில் தங்களுடைய மல மூத்திரங்களை தாங்களே எடுத்து கொடுக்குமாறு கூறப்படுவதாக புகார் கூறியிருந்தார் . இதற்கு அயோத்தி தாசர் “கிழக்கு இந்திய கம்பெனிகளில் ஆட்சியில் சிறையில் கழிவுகளை பறையர்களே அகற்ற வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் நேரடி ஆட்சியில் இன்று யாராக இருந்தாலும் அவரவர் கழிவுகளை அவரவரே சிறையில் எடுக்க வேண்டும் என்று நிலை வந்துவிட்டது. அன்று பறையர் எடுக்கும்போது மகிழ்ந்த இந்துக்கள் என்று புகார் கூறுகிறீர்களோ?” என்று கூறினார்.
மறைந்த பொழுது சில ஆண்டுகள் அவர் புதல்வர் காப்பர் அபிராமர் அந்த இதழை நடத்தினார். 1922 வரை மற்றொருவரால் நடத்தப்பட்டு அது நின்று விட்டதாக தெரிகிறது. பிறகு பன்மொழி புலவர் ஜி அண்ணாதுரையை ஆசிரியராக கொண்டு, 1926 முதல் 35 வரை வெளிவந்து இருக்கிறது. அயோத்திதாசபண்டிதரின் தமிழ் நடை அக்கால தமிழ் அறிஞர்களான செல்வகேசவராயர், தமிழ் தாத்தா உவேச, ஸ்ரீவை தாமோதரதாரர் இரட்டைமலை ஸ்ரீனிவாசன், சிங்காரவேலனார் நடையில் நின்றது மாறுபட்டதாகும். காரணம் பண்டிதரின் பன்மொழி அறிவு பன்னூல் பயிற்சி லட்சிய பிடிப்பு என்பார்கள். பண்டிதரை போன்ற நடையை பின்னாளில் ஓரளவிற்கு மறைமலை அடிகளிடமும் தேவநேய பாவானையிடமும் காணலாம் என கூறுவார்கள். கம்பனின் இடைச்செல்களை அகற்றி எதிர்ப்புகளை கண்ட டி கே சிதம்பரனாரும் நம் நினைவில் நிற்பவர். அவருக்கு முன்பே அயோத்திதாச பண்டிதர் திருவள்ளுவரைப் பற்றிய புனைவுகள் எவ்வாறு இடைச்செல்களாக நுழைக்கப்பட்டன என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டார்.
அயோத்திதாசர் ஆங்கிலத்திலும் புலம்பிப் பெற்றவராக திகழ்ந்தார். எவ்வாறு தனித்தமிழ் தமிழர் என்ற அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மொழி ஞாயிறு தேவநேய பாவங்களுடன் சொற்களை ஆராய்ச்சி செய்தாரோ அவ்வாறே பண்டிதரும் அவருக்கு முன்பே பௌத்தத்தின் சாது வேதம் மரபு என்ற அரசியலின் சொற்களை ஆராய்ந்தார். மாமன்னர் எப்படி சொற்களின் வேர்களை ஆரிய கலப்பின்றி தூய நிலைக்கே விட்டு சென்றாரோ அவ்வாறே அவருக்கு முன்பாக அயோத்திதாசாரம் தனது சொற்களை வைதீக சாதிவேத கலப்பு இல்லாமல் திராவிட பௌத்தத்திற்கு உந்தி சென்றார் என்று கூறலாம்.
புத்தரின் வாழ்வையும் போதனைகளையும் எடுத்து உரைக்கும் ‘பூர்வ தமிழ் ஒளி’ என்ற புத்தரது ஆதி வேதம், விபூதி ஆராய்ச்சி, கபாலீஸ்வரர் சரித்திர ஆராய்ச்சி, அரிசந்திரனின் பொய்கள், திருவள்ளுவரின் வரலாறு, முற்றிலும் புதிய முறையில் திருக்குறள் (திருக்குறள் உரை), புத்த மார்க்க வினா விடை, இந்திர தேசத்து சரித்திரம், விசேஷ சங்கு தெளிவு ,விவேக விளக்கம், எதார்த்த பிராமணர் வேஷபிராமணர் வேதாந்த பிராமணரின் விவரம் ஆகியன அயோத்திதாசரின் படைப்புகளில் சில.
இவ்வாறாக இதழ்களின் மூலமாக அயோத்திதாசர் தமிழ் தேசிய உணர்விக்கு வித்திட்டார். தன் 70 ஆண்டு கால வாழ்நாளில் இளமை பருவம் தொட்டு மறையும் வரை சமூகத்திற்காக போராடிய வீரர் தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்காகவும் முன்னோடியாக திகழ்ந்த வீரர் இவர்!
அயோத்திதாசர், 1914 ஆம் ஆண்டு மே ஐந்தாம் நாளில் மறைந்தார். தமிழ்த்தென்றல் திருவிக ஈமம் வரை சென்று மரியாதை செலுத்தினார். இப்படிப்பட்ட பண்டிட் அயோத்தி தாசரின் பெருமையை இன்றைய அவர் பிறந்த தினமான இன்று நினைவுகூர்வோம்