பாட்டுத்தலைவன் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு, இன்று முதலாம் ஆண்டு நினைவஞ்சலில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி தன்னுடைய குரலால் ரசிகர்களை மகிழ்வித்ததுடன், கின்னஸ் சாதனையும் நிகழ்த்தியுள்ள எஸ்.பி.பி. பெற்ற விருதுகள் பற்றி நாம் அறியாத அல்லது அவசியம் அறிய வேண்டிய சில தகவல்கள் இங்கே!
திரைத்துறை கலைஞர்களுக்கு மக்களின் பாராட்டும் கைதட்டல்களும் மகிழ்ச்சியை கொடுத்தாலும், தங்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளையே அவர்கள் அங்கீகாரமாக கருதுவார்கள். அதிலும், இந்திய அரசால் கொடுக்கப்படும் திரை விருதுக்கு கலைஞர்கள் மத்தியில் பெரும் மதிப்புண்டு. ஆனால், அது பலருக்கு கனவாகவே கடந்துவிடும். ஆனால், அந்த தேசிய விருதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் 6 முறை வென்றுள்ளார். சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 6 முறை வென்றுள்ள எஸ்.பி.பி.-யின் திறமையை பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளால் அங்கீகரித்துள்ளது மத்திய அரசு. மேலும் அவருக்கு 25 நந்தி விருது, ஏராளமான தமிழக அரசு விருதுகளும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
1979-ம் ஆண்டு கே.விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான சங்கராபரணம் படத்தில் இடம்பெற்ற 'ஓம்கார நாதானு' பாடலை பாடியதற்காக முதன் முறையாக தேசிய விருதை வென்றார் எஸ்.பி.பி. இதன் பின் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான 'ஏக் துஜே கே லியே' படத்தின் பாடலான 'தேரே மேரே' பாடலுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது வென்றார். இதன் பிறகு 'சகார சங்கமம்' மற்றும் ‘ருத்ரவீணா’ ஆகிய தெலுங்கு படங்க்ளின் பாடல்களுக்காக தேசிய விருது வென்றார். இப்படியாக தெலுங்கில் மூன்று பாடல்களுக்கும், இந்தியில் ஒரு பாடலுக்கும் தேசிய விருது வென்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஐந்தாவது முறை கன்னடத்தில் வெளியான ஒரு பாடலுக்கு விருது வென்றார்.
தமிழ்த் திரையில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், தமிழ் பாடலுக்கு வெகுகாலத்துக்கு அவரால் தேசிய விருதை வெல்ல முடியவில்லை. இருப்பினும் பல பாடல்களுக்கு அவருக்கு விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து நிலவியது. அந்தச் சமயத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மின்சார கனவு' படத்தில் அவர் பாடிய 'தங்கத் தாமரை' பாடலுக்கு வெளியாகவே, அதற்காக அவர் இறுதியாக தேசிய விருது வென்றார்.
பல ஆயிரம் பாடல்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் இது போன்ற இன்னும் பல விருதுகளாலும், ரசிகர்களின் பாராட்டாலும் பலமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.