சிறப்புக் களம்

'1 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு' - கார் நிறுவனங்களை அலறவிடும் 'சிப்' பற்றாக்குறை!

'1 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு' - கார் நிறுவனங்களை அலறவிடும் 'சிப்' பற்றாக்குறை!

webteam

தொழில்துறைகள் சிலவற்றில் தேவை குறைவாக இருப்பதால் இழப்பு உருவாகும். ஆனால், ஆட்டோமொபைல் துறையிலோ தேவை அதிகமாக இருந்தும், இப்போதைய சூழலில் வருமான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டிருகிறது. 'சிப்' (Chip) பற்றாக்குறை காரணமாக இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே 1 பில்லியன் டாலர் அளவுக்கு வருமான இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தியில் ஒரு லட்சம் வாகனங்கள் அளவுக்கு குறையக்கூடும் என தெரிகிறது.

'சிப்' பற்றாக்குறை ஏன்? - ஆட்டோமொபைல் துறைகளில் எலெக்ட்ரானிக்ஸ் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயர ரக மாடல்களில் எலெக்ட்ரானிக்ஸ் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதுதவிர, கொரோனா காரணமாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான தேவையும் அதிகரித்து வருவதால் 'சிப்' தேவை உயர்ந்திருக்கிறது. தேவை உயர்ந்திருக்கும் அதே சூழலில், உற்பத்தியோ மிகவும் சரிந்திருக்கிறது. சிப் தயாரிப்பதற்கு அதிக நீர் தேவை. சிப் தயாரிப்பில் முக்கிய நாடான தைவானில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவுவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், சிப் பற்றாக்குறை ஆட்டோமொபைல் துறையை மட்டுமல்லாமல் எலெக்ட்ரானிக்ஸ் துறையையும் வெகுவாக பாதித்திருக்கிறது.

குறையும் கார் உற்பத்தி: நடப்பு செப்டம்பர் மாதத்தில் மொத்த கார் விற்பனை 1.80 லட்சம் முதல் 2.15 லட்சம் வரை மட்டுமே இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்திருக்கின்றன. 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 2.15 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டதே இதுவரையில் குறைவான உற்பத்தியாகும். அதன் பிறகு தற்போதுதான் குறைவான உற்பத்தி இருக்கும் எனத் தெரிகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக 2.78 லட்சம் முதல் 3.43 லட்சம் வரையில் செப்டம்பரில் கார் உற்பத்தி இருந்தது. ஆனால், தற்போது அதிகபட்சம் 2.15 லட்சம் வரையே இருக்கக் கூடும்.

விழாக் காலம் நெருங்கி வருவதால் இதுவரை இல்லாத அளவுக்கு முன்பதிவு நெருங்கி இருக்கிறது. 4 லட்சத்துக்கு மேலான கார்கள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

நாட்டின் முக்கிய கார் உற்பத்தி நிறுவனம் மாருதி. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் மாருதிதான். ஆனால், இந்த நிறுவனம் செப்டம்பரில் 60 சதவீத உற்பத்தியை குறைத்திருப்பதால் மொத்த உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட சில நிறுவனங்களும் உற்பத்தியை குறைக்க முடிவெடுத்திருக்கின்றன.

சிறிய கார்களை விட விலை அதிகமுள்ள பெரிய கார்களிலே சிப்களின் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், சிறிய கார்களுக்கான தேவை குறைந்து வருவதையும் நாம் சேர்த்தே பார்க்கவேண்டும்

ரூ.5 லட்சத்துக்கு கீழே: சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கார்களுக்கு தேவை அதிகமாக இருக்கும். அதாவது, 5 லட்ச ரூபாய்க்குள் இருக்கும் கார்களுக்கு. ஆனால், தற்போது இந்தப் பிரிவில் தேவை குறைந்து ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரையிலான கார்களுக்கு தேவை உயர்ந்திருக்கிறது. ஏற்கெனவே டாடா நானோ மற்றும் ஹூண்டாய் இயான் (eon) நிறுத்தப்பட்டிருக்கிறது. நிஸான் நிறுவனமும் டட்சன் மாடலை நிறுத்த திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

2016-ம் ஆண்டு ரூ.5 லட்சத்துக்கும் குறைவான கார்கள் 10 லட்சம் என்னும் எண்ணிக்கையில் விற்பனையானது. ஆனால், கடந்த ஆண்டில் 4.16 லட்சம் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது. ஆல்டோ, க்விட் உள்ளிட்ட சில மாடலைகளை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் 5 லட்ச ரூபாய்க்கு மேலே உள்ள பிரிவில் கவனம் செலுத்துகின்றன.

இதனால், சிறிய ரக பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு (யூஸ்டு கார்) சந்தையில் புதிய தேவை உருவாகி இருக்கிறது. அதேபோல 5 லட்ச ரூபாய்க்கு மேல் இருந்த பயன்படுத்தப்பட்ட கார்கள் (சுமார் மூன்று ஆண்டு பழைய வாகனம்) தற்போது விலை குறைந்திருப்பதால் பயன்படுத்தப்பட்ட பிரிவில் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது.

கார்ஸ் 24, ட்ரூம், கார்டெகோ, கார் ட்ரேட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் இந்தச் சந்தையில் இருந்தாலும், ஓலா நிறுவனமும் இந்த பிரிவில் களம் இறங்கியுள்ளது. ஓலா கார்ஸ் என்னும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் காரினை ஓட்டிப் பார்த்து வாங்கும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.

ரூ.5 லட்சத்துக்கு மேலே உள்ள பிரிவில் வாய்ப்புகள் உருவாகி இருந்தாலும், சிப் பற்றாக்குறை குறுகிய காலத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

- வாசு கார்த்தி