சிறப்புக் களம்

’ராக்கி’ படத்தை தியாகராஜன் குமாரராஜாதான் தயாரிப்பதாக இருந்தது - அருண் மாதேஸ்வரன் பேட்டி

’ராக்கி’ படத்தை தியாகராஜன் குமாரராஜாதான் தயாரிப்பதாக இருந்தது - அருண் மாதேஸ்வரன் பேட்டி

sharpana

அறிமுக இயக்குநர்தான். ஆனால், தனது முதல் படமான ‘ராக்கி’ வெளியாவதற்கு முன்னரே, செல்வராகவனின் ‘சாணிக்காயிதம்’படத்தையும் இயக்கி முடித்து தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்புகளை எகிறவைத்துள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். தியாகராஜன் குமாரராஜாவின் உதவி இயக்குநர், ‘இறுதிச்சுற்று’ படத்தின் டயலாக் போர்ஷன்கள் எழுதியவர் உள்ளிட்ட பின்னணி அடையாளங்கள் இருந்தாலும் டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாகும் ‘ராக்கி’ படத்தின் ட்ரெய்லர் காட்சிகளால் ’செம்ம திரில்லர்’ இயக்குநர் என்ற மிரட்டலுடன் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அடுத்து, தனுஷுடன் இணைகிறார் என்று சொல்லப்படும் நிலையில், இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் உரையாடினோம்…

உங்களைப் பற்றி?

“எனக்கு சொந்த ஊர் சென்னை. ஆனால், என் அப்பா மாதேஸ்வரன் நைஜீரியாவில் பணிபுரிந்ததால் 13 வயதுவரை நைஜீரியாவில்தான் தொடக்கக் கல்வியைப் படித்தேன். பின்புதான் சென்னை வந்து உயர்கல்வி, கல்லூரி படிப்பையெல்லாம் முடித்தேன். பி.காம் டிகிரியோடு சினிமா ஆர்வத்தில் முதலில் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று ’டிஜிட்டல் ஃபிலிம் மேக்கிங்’ படித்தேன். அது முடித்தவுடன்‘ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அப்படியே, இயக்குநர் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ’ஆரண்ய காண்டம்’ படத்திற்குப்பிறகு முதல் படம் இயக்கும் வாய்ப்பு வந்து கைநழுவிப் போனது. அப்போதுதான், சுதா கொங்கரா எனது நண்பர் என்பதால் ‘இறுதிச் சுற்று’ பட டயலாக் போர்ஷன் எழுதும் வாய்ப்பை அளித்தார். அது முடித்ததும், ‘ராக்கி’ கதையை எழுத ஆரம்பித்தேன்”.

யாருடைய படங்களைப் பார்த்து சினிமா ஆர்வம் வந்தது?

”நைஜீரியாவில் வளர்ந்ததால், அங்கு தமிழ் படங்கள் பார்க்க வாய்ப்பு கிடைக்காது. அதனால், இங்கிருந்து கேசட்டுகளை வாங்கிக்கொண்டு போய் பார்ப்போம். படிப்பில் நான் சுமாராக படிக்கும் மாணவன். படங்களே எனக்கு அதிகம் பிடிக்கும். சிறு வயதில் ஜாக்கிசான் படங்கள் பார்ப்பேன். கொஞ்சம் பெரியவனானதும் உலக சினிமாக்கள் பார்க்க ஆரம்பித்தேன். பாலுமகேந்திரா சார், மகேந்திரன் சார், பாக்யராஜ் சார் போன்றோரின் படங்கள் பிடிக்கும். பாக்யராஜ் சாரின் ‘இன்று போய் நாளை வா’ ரொம்ப பிடித்தப்படம். மேலும், பல உலக சினிமா இயக்குநர்களை பட்டியலிடலாம்”.

ஒளிப்பதிவும் முடித்திருக்கிறீர்கள் என்பதால் பாலுமகேந்திரா பாணியில் உங்களிடம் படங்களை எதிர்பார்க்கலாமா?

“கண்டிப்பாக. பாலு மகேந்திரா சார் ஒரு ஆக்‌ஷன் படம் எடுத்தால் எப்படியிருக்கும். அந்த மாதிரிதான் ‘ராக்கி’ இருக்கும். எனக்கு எதிர்காலத்தில் ஒளிப்பதிவு செய்துகொண்டே இயக்கவும் ஆர்வம் இருக்கிறது”.

ஒருவழியாக ‘ராக்கி’ வெளியாகவிருக்கிறதே? எப்படி இருக்கிறது?

“ரொம்ப சந்தோஷமாகவும் எமோஷனலாகவும் உள்ளது. பல வருடங்களாக ‘ராக்கி’ வெளியாக காத்திருந்தேன். இப்போது, அது நிறைவேறுவதில் கொஞ்சம் பதட்டமும் கூடியிருக்கிறது”.

‘ராக்கி’ மூலம் என்ன சொல்ல வர்றீங்க?

”‘ராக்கி’ ஒரு கேங்ஸ்டர் கதை. அந்த உலகத்தில் ஒரு மென்மையான கதையும் இருக்கும். படத்தின் மூலம் மெசேஜ் சொல்வதில் எனக்கு பெரிதாக விருப்பமும் நம்பிக்கையும் இல்லை. மெசேஜ் சொன்னால் திருந்திவிடுவார்களா என்ன? எத்தனையோ படங்கள் வந்துள்ளது. எல்லோரும் மாறிவிட்டார்களா? படத்துக்காக மெசேஜ் சொல்வதில் ஈடுபாடு இல்லை. திருந்தி வாழவேண்டும் என்று நினைப்பவன் குடும்பத்தின் மீதான அன்பால் எவ்வளவு தூரம் போகிறான் என்பதுதான் கதை”.

உங்கள் வசனங்களை கேட்கும்போது தீவிர வாசிப்பு பழக்கம் உடையவர்போல் தெரிகிறதே?

“புத்தகம் என்பது கடல் மாதிரி. வாசிப்பு பழக்கம் இல்லாமல் இருக்குமா?. ஆனால், எனக்கு கற்பனை கதைகளைவிட உண்மைக் கதைகளைப் படிப்பதில்தான் ஆர்வம் அதிகம். கற்பனை கதைகள் படிப்பது குறைவுதான். வரும் புத்தக கண்காட்சிக்குக்கூட நானும் மனைவியும் செல்லத் திட்டமிட்டிருக்கிறோம். என் மனைவி பெரிய படிப்பாளி. இருவரும் இம்முறை நிறைய புத்தகங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளோம்”.

’ராக்கி’ கற்பனை கதையா? உண்மைக் கதையா?

”சென்னையில் என்னோட ஏரியா பெரம்பூர். இளம் வயதில் வளர்ந்ததெல்லாம் பெரம்பூர், வட சென்னை பகுதிகளில்தான். அங்கு நிறைய கலாசார மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை பார்த்துள்ளேன். அப்படி அடைக்கலம் அடைந்துள்ளவர்களின் கதைகளைத்தான் அதிகமாக படிப்பேன். அப்படி படிக்கும்போது கிடைத்ததுதான் ’ராக்கி’ கதையின் ஐடியா”.

நீங்கள் உதவி இயக்குநராக பணியாற்றிய ’ஆரண்யகாண்டம்’, டயலாக் போர்ஷன் எழுதிய ‘இறுதிச்சுற்று’ இரண்டுமே தேசிய விருது படங்கள் என்பதால் ’ராக்கி’க்கும் விருதை எதிர்பார்க்கலாமா?

“தேசிய விருது வாங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ‘ராக்கி’ எடுக்கவில்லை. ஒரு கதை சொல்லவேண்டும். அதனை உண்மையாக சொல்லவேண்டும் என்று நினைத்தேன். அது எல்லோருக்கும் பிடித்து அந்த உழைப்புக்கான மரியாதைக் கிடைத்தால் ஓகேதான். படத்தைப் பார்த்த அனைவருக்கும் பிடித்திருந்தது. குறிப்பாக, இயக்குநர் ராம் சாருக்கு ரொம்ப பிடித்திருந்தது. சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்புங்கள் என்று என்கரேஜ் செய்தார். விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு பிடித்ததால்தான் ரிலீஸ் செய்கிறார்கள்”.

தியாகராஜன் குமாரராஜா படங்களின் தாக்கத்தை ‘ராக்கி’யில் எதிர்பார்க்கலாமா?

“அப்படியெல்லாம் இல்லை. அவரோட கதைகளுக்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரியும். தாக்கம் என்றால், அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால், அவரது ஸ்டைல் வேறு. என்னோட ஸ்டைல் வேறி. ‘ராக்கி’ வெளியானதும் பார்த்து சொல்லும்போதுதான் எப்படி என்று தெரியும்”.

தியாகராஜன் குமாரராஜாவிடம் கற்றுக்கொண்டது என்ன?

“ஒரு கதையை யோசித்து படமாக்க நினைக்கும்போது, அந்த செயல்பாட்டில் நிறைய சமரசம் செய்துகொள்ளும்படி இருக்கும். ஆனால், அவர் சமரசமே செய்துகொள்ளமாட்டார். நாம் நினைத்ததைப் பண்ணவேண்டும் என்று நினைப்பார். நான் கற்றுக்கொண்டதில் முக்கியமானது இந்தக் குணம்தான். அவர், எனக்கு குரு மட்டுமில்ல அண்ணன் மாதிரி. 'ஆரண்ய காண்டம்’ படத்தில் மட்டும்தான் பணிபுரிந்தேன். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் பணியாற்றவில்லை. ஆனாலும், எப்போதெல்லாம் மனச்சோர்வு அடைகிறேனோ அப்போதெல்லாம் போன் பண்ணிவிட்டு, அவர் ஆபிஸ் போய்விடுவேன். மற்றபடி ‘ராக்கி’ தியாகராஜன் குமாரராஜா சாருக்கு ரொம்ப பிடித்தக் கதை. ஒரு கட்டத்தில் அவரே தயாரிப்பதாக இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. ட்ரெய்லர் பிடித்திருந்தது எனப் பாராட்டினார். இன்னும் படம் பார்க்கவில்லை”.

‘ராக்கி’, ‘சாணிக்காயிதம்’ வன்முறை கதைகளாக உள்ளதே? இனி இதே ஜானர்தானா?

“எனக்கு எல்லா ஜானரிலும் எடுக்கவேண்டும் என்பதே விருப்பம். இந்த மாதிரிதான் எடுக்கவேண்டும் என்றில்லை. படத்தை ராவாக எடுக்க நினைத்து எடுப்பதில்லை. சிலருக்கு என்னப் படம் பண்ணனும்னு தோணுதோ அதை வைத்துதான் படம் பண்ணுவார்கள். கமர்ஷியலாக அபத்தமான சில விஷயங்களை தவிர்த்துவிட்டு இயல்பாக படம் பண்ணனும் என்பதில் தெளிவாக இருந்தேன். அப்படி இருக்கும்போது, இந்தக் கதையை ராவான திரைமொழியில் உண்மைக்கு நெருக்கமாக எடுத்தால் நல்லாருக்கும் என்று தோன்றியது”.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் ’ராக்கியை வெளியிட எப்படி முன்வந்தார்கள்?

“2004 ஆம் ஆண்டிலிருந்தே ஒரு படத்தில் பணியாற்றும்போது விக்கியை எனக்கு தெரியும். ரெண்டுப்பேரும் நல்ல நண்பர்கள். முதலில் ‘ராக்கி’ கதையை ஆண், பெண் வெர்ஷனுக்காக தனித்தனியாகத்தான் எழுதினேன். அதில், பெண் வெர்ஷனில் நயன்தாராதான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு கதைப் பிடித்திருந்தும் நடக்காமல் போய்விட்டது. அதன்பிறகுதான், வசந்த் ரவியை வைத்து இயக்கினேன். விக்கி- நயன்தாராவுக்கு இந்தக் கதை ஏற்கெனவே தெரியும். படத்தை முடித்தபிறகு பேச்சுவார்த்தை சமயத்தில் கதை கேட்கும்போது எவ்ளோ எதிர்பார்ப்போடு பார்த்தார்களோ, அப்படியே படமும் பார்த்துவிட்டு ’நாங்களே உடனடியாக வெளியிடுகிறோம்’ என்றார்கள். அவர்கள் வந்தபிறகுதான் ‘ராக்கி’க்கு நல்ல கவனம் கிடைத்தது”.

முதல் படத்திலேயே பாரதிராஜாவை எப்படி கொண்டுவந்தீர்கள்?

”பாரதிராஜா சாருக்கு இந்த கேரக்டர் நல்லாருக்கும் என்ற எண்ணத்தில் கதை சொன்னேன். ’ஆயுத எழுத்து’ படத்திற்குப் பிறகு நெகட்டிவான கதையில் நடிக்கும் மனநிலையில் அவர் இல்லை. ஆனால், கதை சொல்லியவுடன், பிடித்துப்போய் ஓகே சொல்லிவிட்டார். இதற்கு முன்பு, பாரதிராஜா சார் வயதான, வீக்கான தோற்றங்களில் நடித்திருந்தார். ஆனால், ராக்கியில் ஒரு பவர்ஃபுல்லான கேரக்டர் பண்ணும்போது ஷூட்டிங் செட்லயே ரொம்ப குஷியா இருந்தார். நாங்கள் எதிர்பார்ப்பதைவிட ‘ராக்கி’ ரிலீஸை அவர்தான் ரொம்ப எதிர்பார்க்கிறார்”.

‘சாணிக்காயிதம்’ எந்த லெவலில் உள்ளது. ஓடிடி ரிலீஸ் என்கிறார்களே?

’சாணிக்காயிதம்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் தியேட்டரா? ஓடிடியா என்பது இப்போது சொல்லமுடியாது. ஆனால், இரண்டு மாதத்தில் வெளியாகிவிடும்”.

தனுஷுடன் உங்கள் அடுத்தப்படம் என்று சொல்லப்படுகிறதே?

”இப்போதைக்கு அதுப்பற்றி எதுவும் பேசமுடியாது. நடந்தால் நன்றாயிருக்கும்”.

- வினி சர்பனா