'புயல் கரையைக் கடந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் இருக்கும் தண்ணீரின் அளவு குறையவே இல்லை. இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. மின்சாரம் வழங்கப்படாததால் தண்ணீர் இல்லை. ஏனெனில், 6764 வீடுகளைக் கொண்ட செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு மேல்நிலை தொட்டி இல்லை. என்ன கொடுமை இது?
மக்கள் சாலையில் வந்துதான் தண்ணீர் பிடிக்க வேண்டும். சாலை முழுவதும் மழை நீரும், வடிகால் நீரும் சூழ்ந்துள்ளது. விரைவில் நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது. மின்சாரம் என்கிற ஒரே ஒரு பாதிப்பை மட்டுமே இங்கு சொல்லி உள்ளேன். இன்னும் பலப்பல பிரச்னைகள் சொல்லிக் கொண்டே போகலாம்.
கொரோனா பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாத சூழலில், மீண்டும் ஒரு பேரிடர். என்ன செய்ய?
ஒவ்வொரு பேரிடரும் நமக்கு பல படிப்பினைகளை கொடுக்கிறது. கற்றுக்கொள்ளாத மற்றும் எந்த விதமான தயாரிப்பு பணிகளையும் மேற்கொள்ளாத அரசை நாம் என்ன சொல்ல? இன்றும் புறக்கணிப்பட்ட பகுதியாக, நவீன தீண்டாமைச் சேரியாக செம்மஞ்சேரி உள்ளது.'
- 'செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் இன்றைய நிலை' என்று நேற்று (நவ.27) குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் அ.தேவநேயன் பதிந்த ஃபேஸ்புக் போஸ்ட் இது.
நேற்று மட்டும் அல்ல... இன்று நான் நேரில் கண்டதும் இதைத்தான்.
புயல் கடந்த மூன்றாவது நாளாகி, இன்று சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்று பலரும் எண்ணினாலும், சென்னைப் புறநகர் பகுதிகள் இன்னும் தனது இயல்பு நிலைக்கு திரும்ப போராடிக்கொண்டிருக்கிறது. அதில், ஒரு பகுதிதான் சென்னையிலுள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி. சுனாமியால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு, அரசு சார்பில் அங்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால், ஒவ்வொரு மழை வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் அந்தப் பகுதியே பாதுகாப்பற்றதாய் இருப்பதை மறுக்க முடியாது. நிவர் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் நடந்ததற்காக எந்தச் சுவடுமே செம்மஞ்சேரியில் காணப்படவில்லை. குறிப்பாக, இந்தக் குடியிருப்பின் மத்தியப் பகுதியில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. நம்மிடம் அந்த மக்கள் பகிர்ந்தவை:
"எங்களைப் பார்க்க இதுவரை எந்த அதிகாரிகளும் வரவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு வந்த வெள்ளத்தின்போதே, நாங்கள் அதிகாரிகளிடன் தண்ணீர் தேங்கும் பிரச்னை குறித்து முறையிட்டோம். ஆனால், இது அவர்கள் வரவும் இல்லை, நடவடிக்கை எடுக்கவும் இல்லை. வெள்ளநீர் தேங்கியே நிற்பதால் பூரான், பாம்பு, புழுக்கள் போன்றவை வந்துக்கொண்டிருக்கின்றன. இது ஒருபக்கம் என்றால், நீரின் வழியே வரும் கழிவுகள் இன்னொரு பக்கம். நாற்றம் குடலைப் பிடுங்குகிறது. நிம்மதியாக எங்களால் சாப்பிடக் கூட முடியவில்லை."
"இந்தப் பகுதிக்கு வரும் தலைவர்கள் மெயின் ரோட்டிலே நின்றுவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். ஓட்டுக்கேட்க வரும்போது மட்டும் உள்ளே வருகிறார்கள். நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எங்களுக்கு உதவி வேண்டும்.
"மீடியாவில் சோழங்கநல்லூரில் வெள்ளப் பாதிப்பு என்று சொல்கிறார்கள். செம்மஞ்சேரியை அவர்களும் அழுத்தமாகச் சொல்வதில்லை. நாங்களும் மக்கள்தான். உதவி செய்பவர்கள்கூட மெயின் ரோட்டிலே நின்றுகொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவிசெய்து விட்டு கிளம்பி விடுகிறார்கள். அப்படியானால் நாங்கலெள்ளம் மக்கள் கிடையாதா? எங்களுக்கெல்லாம் நீங்கள் உதவமாட்டீர்களா? இங்கு வசித்து வந்த ஒருவரை பாம்பு கடித்து, அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்."
கடைசியாக பேசிய ஒரு மூதாட்டி, "மக்கள் இறந்துபோனால், எப்படி ஆட்சியாளர்களுக்கு ஓட்டு விழும். எப்போதும் இரவே தண்ணீரைத் திறந்துவிடுகிறார்கள். எங்களைப் பற்றி கொஞ்சமாவது கவலைப்படுங்கள். ஏழைகளென்றால் அவ்வளவு இளக்காறாமா போச்சா. மூன்று நாட்களாக முழங்கால் தண்ணீரில் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கிறேன். எனக்கு சுவாசக்கோளாறு, ரத்தக் கொதிப்பு பிரச்னைகள் உள்ளன. தண்ணீர் பட்டு பட்டு கை வீங்கிவிட்டது" என்று கண்ணீருடன் கைகளை நீட்டினார்.