சிறப்புக் களம்

'உதயசூரியனுக்கு அழுத்தினால் தாமரை (அ) இரட்டை இலையில் விழுகிறதா?' - சர்ச்சையும் பின்புலமும்

'உதயசூரியனுக்கு அழுத்தினால் தாமரை (அ) இரட்டை இலையில் விழுகிறதா?' - சர்ச்சையும் பின்புலமும்

webteam

"நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்கு இயந்திரத்தில் உதய சூரியனுக்கு அழுத்தினால், தாமரைக்கோ அல்லது இரட்டை இலைக்கோ ஓட்டு விழுகிறது" என்ற சர்ச்சை எழுந்தது. ஒரு சின்னத்தில் அழுத்தினால், வேறு சின்னத்துக்கு வாக்கு செல்வதாக எழுந்து வரும் புகார்கள் புதிதல்ல. இதன் பின்புலம்தான் என்ன? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் ஓட்டுச் சீட்டு முறையிலேயே, தேர்தல் நடைமுறைகள் நடத்தப்பட்டு வந்தன. பின்பு தொழிற்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்பட்டுக்கு வந்தன. இந்தியா, பிரேசில், ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் சில அரசியல் கட்சிகள் இம்முறையை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளன. அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து வருகிறது. முறைகேடுகளுக்கு வழிவகுப்பதை நிரூபிக்கும் நிலையில், அதை சரிசெய்ய தயாராக இருக்கிறோம் என்று அறிவித்துள்ளது. எந்த அரசியல் கட்சியும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யமுடியும் என்று நிருபிக்கவில்லை. சில நாடுகள் இதில் பதிவு செய்யும் தகவல்களை மாற்ற முடியும் என்று காரணம் கூறி, இம்முறையை ஏற்க தயங்கி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் வழக்கமான புகார்கள் எழுந்தன. அதாவது, எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரை அல்லது இரட்டை இலைக்கு செல்கிறது என குற்றச்சாட்டு எழுந்தது.

விருதுநகர் தொகுதியில் விருதுநகர் நகராட்சி பின்புறமுள்ள சத்திரிய பெண்கள் நடுநிலைப்பள்ளி மையத்தில், வாக்குச்சாவடி எண் 139-ல் இடும்பன் நீராவி தெருவை சேர்ந்த குணசேகரன் என்ற இளைஞர் தனது வாக்கை பதிவு செய்தார். அவர் உதயசூரியன் சின்னத்திற்கு பதிவு செய்த வாக்கு, விவிபேட் இயந்திரத்தில் தாமரைக்கு விழுந்தது போன்று காண்பித்தது என புகார் அளித்தார். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள், பூத் முகவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது. தேர்தல் அலுவலர் சந்தானலட்சுமி, உதவி தேர்தல் அலுவலர் ரமணன் வாக்குச்சாவடிக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அளிக்கப்பட்ட சோதனை முறை வாக்கை அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் மீண்டும் பதிவு செய்தார். அப்போது அவரின் வாக்கு சரியான சின்னத்தில் பதிவானது.

தஞ்சை மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் முகமது பந்தரில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்தில் உள்ள 172-வது பூத்தில் திமுக வழக்கறிஞர் ராஜாமுகமது உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தபோது விவிபேட் இயந்திரத்தில் தாமரை சின்னம் காட்டியதாக அதிகாரியிடம் புகார் செய்தார். இதையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அதிகாரிகள், வாக்களித்துவிட்டு வெளியே வரும் வாக்காளர்களிடம் சின்னம் சரியாக தெரிந்ததா என்று கேட்கும்படி திமுகவினரிடம் கூறினர். அதன்படி கேட்டதற்கு சரியாகதான் உள்ளது என்று வாக்காளர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மீண்டும் வாக்குப்பதிவு நடந்தது.

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை அரசு தொடக்க பள்ளி, 299-வது எண்ணுள்ள வாக்கு சாவடியில், எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு விழுவதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து வாக்குப்பதிவு மைய அதிகாரிகள் வேறு இயந்திரம் கொண்டு வந்து, அதில் வாக்குப்பதிவை தொடர்ந்தனர்.

ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பருத்திப்பட்டு விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு பொத்தானை அழுத்தினால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு பதிவு ஆவதாக வாக்களித்த ஒரு சில வாக்காளர்கள் சந்தேகத்தினர். இதையடுத்து ஒரு சில வாக்காளர்களை வைத்து வாக்கு போடச்சொல்லி பரிசோதனை செய்தனர். அப்பொழுது வாக்களித்த வாக்காளர்களின் வாக்குகள் எந்த சின்னத்திற்கு அவர்கள் வாக்களித்தார்களோ அந்த சின்னத்திலேயே சரியாக பதிவானது. இவ்வாறு தொடர்ந்து புகார்களும் வதந்திகளும் மட்டுமே எழுந்து வருகிறது. ஆனால் இதுவரை எங்கும் வழக்குகள் எதுவும் பதியப்படவில்லை என்றே தெரிகிறது. இதுகுறித்த உண்மை நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழாமல் இல்லை.

இது குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், ''விருதுநகரில் ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இது இயற்கையானதாகக் கூட இருக்கலாம். ஆனால், அதெப்படி ஒவ்வொரு முறையும், எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்தியரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது? ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?'' என பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கூறுகையில், “மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் முறையாக கணக்கிடப்படுவதில்லை. பதிவான வாக்குகளும் எண்ணப்பட்ட வாக்குகளும் சமமாக இருப்பதில்லை. சில இடங்களில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக இருக்கும். சில இடங்களில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் அதிக வாக்குகள் வித்தியாசம் இருக்கும். இதை தேர்தல் ஆணையம் ஒருமுறை கூட தெளிவான பதிலை கூறவில்லை. 

ஈவிஎம்மில் முறைகேடு நடக்கும் என்பதை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுக்கிறது. ஒரு சின்னத்திற்கு அழுத்தினால் மற்றொரு சின்னத்தில் வாக்கு பதிவாகிறது என்ற புகார் அடிக்கடி எழுகிறது. இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் கூறுகையில் அப்படி புகார் எதுவும் வரவில்லை என சொன்னார்.

நான் ஒரு வாக்காளர். சூரியனுக்கு வாக்களிக்கிறேன். தாமரைக்கோ இலைக்கோ செல்கிறது. அது விவிபிஏடி மிஷினில் தெரியப்போகிறது. உடனே நான் நிறுத்தி புகார் அளிப்பேன். அங்கு எல்லா கட்சியின் முகவர்களும் இருப்பார்கள். முதலில் வாக்குப்பதிவு நிறுத்தப்படும். அப்படி எதுவும் நடக்காமல் இருந்தால் கூட இதுபோன்ற புகார் வந்தது. பரிசோதனை செய்தோம். அந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லை என்பது தேர்தல் ஆணையருக்கு தகவல் வரவேண்டும். இதுபோன்ற புகார்கள் ஏன் வருவதில்லை. வெறும் வதந்திகளும் குற்றச்சாட்டும் மட்டுமே வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் டி.என்.ரகு கூறுகையில், “ஒரு பொத்தானை அழுத்தினால் மற்றொரு சின்னத்திற்கு வாக்கு பதிவாகிறது என்பது முற்றிலும் பொய். அதற்கான ஆதாரமே இல்லை. இதுவரை 3 அல்லது 4 தேர்தல்களில் இதுபோன்ற புகார் வந்துள்ளது. ஆனால் நிரூபிக்கப்பட்டது இல்லை. ஏனென்றால் மெஷின் தவறு செய்யாது. மனிதர்கள் தான் தவறு செய்வார்கள். பாஜக மீது ஒரு அவநம்பிக்கை உள்ளது. அதனால் இதுப்போன்ற புகார்கள் எழுகின்றன” என்றார்.