சமீபத்தில் வெளியான யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகளில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார், அறிஞர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தி பிரித்திகா ராணி. இந்திய அளவில் 171 வது இடத்தைப் பிடித்திருந்தாலும், பெரும்பான்மை தேர்வர்களின் குறிக்கோளான ஐ.ஏ.எஸ் பணியை தேர்வு செய்யாமல், விருப்பம்தான் முக்கியம் என்று ஐ.எப்.எஸ் எனப்படும் இந்தியன் ஃபாரின் சர்வீஸ் பணியை தேர்வு செய்திருக்கிறார்.
சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரியில் பொறியியல் முடித்த பிரித்திகா ராணி யு.பி.எஸ்.சி தேர்வுக்காக தமிழகத்தின் பிரபலமான ‘சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’ பயிற்சி மையத்தில் படித்துதான் இலக்கை அடைந்திருக்கிறார். அவரிடம் வாழ்த்துகளோடு பேசினோம். ‘அரசியல் கேள்விகளே வேண்டாம்’ என்று தவிர்த்துவிட்டு பேச ஆரம்பித்தார்.
பிரித்திகா ராணி
முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றது எப்படி இருக்கிறது?
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் நான் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. சிவில் சர்வீஸ் தேர்வுக்காக தயாராகுபவர்கள் பெரும்பாலும் அடுத்தடுத்த முயற்சியில்தான் வெற்றி பெறுகிறார்கள் என்பதால் எனது குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட யாருமே முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சிவில் சர்வீஸ் தேர்வெழுதவேண்டும் என்று முடிவெடுத்த நொடியிலிருந்து கடினமாக உழைத்தேன். கவனத்தை முழுக்க அதிலேயே செலுத்தினேன். அதற்கான, பலன் இப்போது கிடைத்திருப்பதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது. தேர்வுக்காக படிக்கும்போது எத்தனையோ சூழல்கள் தடைகளாக இருக்கலாம். ஆனால், நான் ஒன்றை மட்டும்தான் உறுதியாக நம்பினேன். கடின முயற்சியையும் உழைப்பையும் கொடுத்தால் கண்டிப்பாக முதல் முயற்சியிலேயே இலக்கை பிடிக்க முடியும். என் நம்பிக்கை தோல்வி அடையவில்லை.
யு.பி.எஸ்.சி தேர்வு எழுதுபவர்களின் கனவு பெரும்பாலும் ஐ.ஏ.எஸ்ஸாகத்தான் இருக்கும். ஆனால், அதை தேர்ந்தெடுக்காமல் ஐ.எப்.எஸ்ஸை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
பொதுவாகவே, மக்கள் சிவில் சர்வீஸ் தேர்வை ஐ.ஏ.எஸ் தேர்வுடனேயே ஒப்பிடுட்டுக் கொள்கிறார்கள். ஆனால், அதே சிவில் சர்வீஸ் பணியில் 24 சேவைகள் உள்ளன. பிடித்த பணியைத் தேர்ந்தெடுப்பதில் தனிப்பட்ட நபரின் விருப்பம் என்பதும் முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் உள்ளது. அதில், எனக்கு இந்தியாவின் சர்வதேச உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில்தான் விருப்பம் அதிகம். அதனால், அதனை தேர்ந்தெடுத்துள்ளேன். எனக்கு சரியானதும் இதுதான் என்று நினைக்கிறேன்.
மக்களுக்காக களத்தில் இருந்தவர் அண்ணா. ஆனால், ஐ.எப்.எஸ் பணி அப்படி இல்லையே?
என்னுடைய கொள்ளுத்தாத்தாவுடன் என்னை ஒப்பிடவேண்டாம். அவர் மாதிரி யாராலும் இருக்கமுடியாது. அவருக்கென்று சிறப்பான தனித்துவத் தன்மையை உருவாக்கியிருக்கிறார். நான், எனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன்.
சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி பயிற்சி மைய இயக்குநர் வைஷ்ணவி சங்கரின் வாழ்த்துகளுடன் பிரித்திகா ராணி
யு.பி.எஸ்.சி தேர்வுக்காக தயாராகிறவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
ஆலோசனை என்பதைவிட இத்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு ஊக்கம்தான் முக்கியம். அந்த ஊக்கம் ஒவ்வொருவரிடமிருந்தும் உள்ளிருந்தே வரவேண்டும். அதுதான் நாம் என்ன நோக்கத்திற்காக இந்தத் தேர்வை எடுத்தோம் என்று ஞாபகப்படுத்திகொண்டே இருக்கும். நம்முடைய இலக்கையும் அடிக்கடி நினைத்துக்கொள்ள வேண்டும். இவை எல்லாவற்றையும்விட முக்கியமாக தன்னால் முடியும் என்று நம்பவேண்டும். கடினமாக உழைக்கவேண்டும்; தொடர்ந்து உழைக்கவேண்டும். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
பொறியியல் பட்டதாரியான உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?
சிவில் சர்வீஸ் தேர்வு எழுத ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். எந்த டிகிரி வேண்டும் என்றாலும் இருக்கலாம் என்கிறபோது, அது ஏன் பொறியியல் துறையாக இருக்கக்கூடாது? ஆனால், நான் தேர்வாகவில்லை என்றால் வேறு திட்டங்கள் வைத்திருந்தேன். மேலும், எனக்கு சிறுவயதில், இந்தத் துறைக்குள் வரவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. பொறியியல் படிக்கும்போதுதான் ஆர்வமே வந்தது. ஆனால், நான் இதுதான் சரியான நேரம் என்று முழுநேரமாக தேர்வுக்காக தயாரானேன்.
- வினி சர்பனா