சிறப்புக் களம்

’இன்று நடப்பவற்றையெல்லாம் அன்றே எச்சரித்தார் அண்ணா!!’ எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன்

’இன்று நடப்பவற்றையெல்லாம் அன்றே எச்சரித்தார் அண்ணா!!’ எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன்

sharpana

மறைந்த தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்தநாள் இன்று தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. புதிதாக துவக்கப்பட்டக் கட்சியாக இருந்தாலும் 1965 ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் மூலம் 1967 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. தி.மு.க தமிழக மக்களின் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாய் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருப்பதற்கு காரணம், அன்று இந்தி திணிப்புக்கு எதிரான அண்ணாவின் பேரெழுச்சிதான். அவர், மறைந்து 50 ஆண்டுகள் ஆனாலும், இப்போதும், மத்திய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு, மாநில உரிமைகள் மீட்டெடுப்பு போன்றவற்றில் தமிழக இளைஞர்களின் தனித்தக் குரலால் இறந்தும் தனது கொள்கைகள் மூலம் பாகுபலியாய் உயர்ந்து நிற்கிறார் அறிஞர் அண்ணா. இன்று அவரால் ஆரம்பிக்கப்பட்ட தி.மு.க தமிழகத்தின் எதிர்கட்சியாய் இருப்பதற்கும், தி.மு.கவிலிருந்து பிரிந்த அ.தி.மு.க ஆளும்கட்சியாய் ஆட்சி செய்வதற்கும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக, அதிமுகவை தவிர வேறு எந்தக் கட்சியும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கும் அண்ணாவின் தொலைநோக்கு நிறைந்த முற்போக்கான துணிச்சலான கொள்கைகளேக் காரணம்.

        இந்நிலையில், எழுத்தாளர் ஆழி செந்தில்நாதனிடம் ’இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர்களுக்கு அண்ணா ஏன் தேவைப்படுகிறார்?’ என்று கேட்டோம்,

அண்ணா எக்காலத்திற்கும் தேவைப்படுவார்! - எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன்

         “பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் தொடர்ச்சியாக பிடுங்கிக்கொண்டே வருகிறது. மக்களோடு பின்னிப் பிணைந்திருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், தொழில் வளம், இயற்கை வளம், கலாச்சாரம், மொழி என அடிப்படையான அனைத்துத் துறைகளையும் மாநிலங்கள்தான் பார்க்க முடியும். அதனால்தான், நீண்ட வருடங்களாக இவை அனைத்தும் மாநிலங்கள் கையில் இருந்தன. ஆனால், இன்று இதனையெல்லாம் மத்திய அரசு மாற்றி அபகரித்துக் கொண்டது. இந்தச் செயல் மாநிலங்களின் உயிரை எடுப்பதற்கு சமம்.

‘இந்தியாவின் தேசிய இனங்களான மாநிலங்களின் இறையாண்மை காப்பாற்றப்பட்டால்தான், ஒட்டுமொத்த இந்தியாவின் இறையாண்மையும் காப்பாற்றப்படும். இறையாண்மை என்பது டெல்லியில் மட்டும் இல்லை. அனைத்து பகுதி மக்களுக்குமானது’ என்று அழுத்தமாக சொன்னவர் அண்ணா. இன்று நமது உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகும்போது, அண்ணாவைப் பற்றி பேச வேண்டியுள்ளது. அன்றே மாநில உரிமைகளின் முக்கியத்துவத்தை எச்சரிக்கை செய்தவர் அண்ணா.

ஆழி.செந்தில்நாதன்

     ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை செய்யும் அதிகாரம் மாநிலத்திடமே இருக்கவேண்டும். சாலை, கல்வி, ஏழைகளுக்கு வீடுகள் கட்டுதல், மேம்பாலங்கள் கட்டுவது என மாநிலத்திற்கு எதெல்லாம் தேவையோ அதெல்லாம் செய்ய மாநிலத்திற்கு அதிகாரம் இருக்கவேண்டும். இப்போது அவை அத்தனையும் மத்திய அரசால் பிடுங்கப்பட்டுவிட்டது. ஜல்லிக்கட்டு, நீட், இந்தி திணிப்பு, கூடங்குளம் பிரச்னை என அனைத்தும் மாநில உரிமைக்கான போராட்டம்தான். மாநில உரிமைக்கான அதிகாரம் பறிக்கப்படும்போது நாம் போராட வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்தவர் அண்ணா. அதுமட்டுமல்லாமல், வட இந்திய ஆதிக்கத்தை எதிர்த்துகொண்டே வந்தார்.

     இன்றுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் 90 சதவீதம் வட நாட்டினரைத்தான் பணிக்கு அமர்த்துகிது பாஜக அரசு. இந்தியை கட்டாயம் கொண்டு வருவோம் என்று சொல்லி இந்தி பேசுபவர்களுக்காக பணிகளை பறிக்கும் வேலையைப் பார்க்கிறது. இவை எல்லாமே எதிர்காலத்திலும் நடக்கும் என்று அண்ணா சொன்னதுதான்; எச்சரித்ததுதான். இந்தித் திணிப்புக்கு பின்னணியில் இருக்கும் அரசியலை அண்ணாதான் சொல்லிக்கொடுத்தார். நாம் எதிர்கொள்ளும் மாநில உரிமைக்கான எல்லா பிரச்சனைகளுக்குமே அவர் தீர்வு சொல்லியிருக்கிறார். இல்லையென்றால், அதுகுறித்து எச்சரித்திருப்பார். இதனையெல்லாம் உணர்ந்துதான் இளம் தலைமுறையினர் அண்ணாவை பிடித்து படிக்கிறார்கள்; கொண்டாடுகிறார்கள். இதுநாள் வரை அண்ணாவைப் பற்றி எழுதாதவர்கள்கூட எழுத ஆரம்பித்துள்ளார்கள். அண்ணா பிறந்தநாளுக்கு வெறும் மாலை மட்டும் போடாமல், அவரின் கொள்கைகள் குறித்து விரிவாகப் பேசுகிறார்கள்.

        இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களின் பிரச்சனை என்னவோ, அவை அத்தனையும் அண்ணா ஏற்கனவே சொல்லியிருக்கிறார். மாநில உரிமையான கல்வி பறிக்கப்படுவதையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால், நீட் வருவதற்கு முன்பு நுழைவுத்தேர்வெல்லாம் இல்லை. கிராமப்புற மாணவர்களும் மருத்துவர்களாகி இருக்கிறார்கள்.  ஆனால், இன்று அந்த சூழல் இருக்கிறதா? அதேபோல, அண்ணா இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால்தான், தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலத்தை பயன்படுத்தினார்கள். இல்லையென்றால், இந்தியே தொடர்ந்திருக்கும். இந்தியை எதிர்த்ததால்தான், ரயில்வே, வங்கி, எல்.ஐ.சி போன்றவற்றிலும் நம் தமிழர்கள் பணியில் அமர்ந்தார்கள். அவர்தான், இருமொழிக் கொள்கை மூலம் தமிழர்களுக்கும் இளைய சமூகத்தினருக்கும்  பாதுகாப்பை உருவாக்கி கொடுத்தார். அது, வெறும் மொழிக்கொள்கை கிடையாது. தமிழகத்தின் பாதுகாப்பு அரண். தமிழ், ஆங்கிலம் என்று இருமொழிக்கொள்கை என்று இருக்கும்போது தமிழர்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். அதனை உடைத்துவிட்டு இந்திக் கொண்டு வரும்போதுதான் இளைஞர்களின் வேலை வாய்ப்பு கெட்டுப்போகும்.

இன்று மத்திய அரசின் அதிகாரப்பறிப்பு என்பது கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் உரிமை அத்தனையும் பிடுங்கிக்கொண்டது. இதனால், இளைஞர்கள் கவலைக்கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா? படித்து முடித்துவிட்டு வேலை தேடும்போது இளைஞர்களுக்கு இதெல்லாம் முக்கியமான பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று அண்ணாதான் சொல்லிக்கொடுத்தார். அதனாலேயே, அண்ணாவின் கொள்கைகளையும் இந்தி திணிப்புக்கு எதிரான கோஷங்களையும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள் இளைஞர்கள்.

          நாங்கள் அண்ணாவின் ’பணத்தோட்டம்’ புத்தகத்தை வெளியிட்டோம். அதிகம் விற்பனையான நூல் என்பதோடு இளைஞர்கள் அதிகம்பேர் வாங்கிய நூலும் அதுதான்.  அதேபோல, நாங்கள் நடத்தும் அண்ணாக் குறித்த கூட்டங்களில் ஆர்வமாக கலந்துகொள்பவர்கள் இளைஞர்கள்தான். முன்பெல்லாம் அண்ணா குறித்து கூட்டம் போட்டால் வயதானவர்கள்தான் வருவார்கள். ஆனால், இப்போது இளைஞர்கள்தான் வருகிறார்கள். அண்ணா புது ஃபேஷனாகவே மாறிக்கொண்டு வருகிறார். அவர் எவ்வளவு பெரிய வேலையைச் செய்திருக்கிறார் என்று இளைஞர்கள் மத்தியில் வியப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான், இந்திக்கு எதிராக கிளர்ந்தெழுகிறார்கள். இந்தி திணிப்பு எதிர்ப்பு டி-ஷர்ட்களை அணிகிறார்கள். திருப்பூரில் ’இந்தி தெரியாது போடா’ டி-ஷர்ட்களை பல நிறுவனங்கள் விற்க ஆரம்பித்துவிட்டார்கள். இதில், வேடிக்கை என்னவென்றால் டி-ஷர்ட் தயாரிக்கும் பணியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தி பேசுபவர்கள்தான்.

தமிழகத்தில் நம் இளைஞர்கள் நன்கு படித்து பல்வேறு துறைகளில் சிறக்க அண்ணாவின் இருமொழிக் கொள்கையும் அவருடைய மாநில சுயாட்சியும்தான் காரணமாக இருந்தது. இந்த முன்னேற்றம் எல்லாம் வட நாட்டில் கிடையாது. அங்கு அண்ணாவும் இல்லை. பெரியாரும் இல்லை.  இந்த முரண்பாட்டின் மூலமே பெரியார், அண்ணாவின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம். குறிப்பாக, இந்தியை தேசிய மொழியாகக் கொண்டுவந்தால், வட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்க முடியும் என்று நினைக்கிறது மத்திய அரசு. அவர்கள் மாநிலங்களில் பின்னடைவு அடைந்ததால் தென்னிந்தியாவில் குறிவைத்து பணிக்கு அமர்த்துகிறார்கள். உ.பி. ம.பி, ஹரியானா, பீஹாரில் எந்த முன்னேற்றமும் இல்லை.அவர்கள் எல்லாவற்றிலும் தோல்வியடைந்து விட்டார்கள். மாநிலத்தை வளர்ப்பதற்கு பதிலாக வெறும் மதவெறி அரசியலை வளர்த்துக்கொண்டு எந்த மாநிலத்தில் பணிகள் அதிகம் உள்ளதோ அங்கு பணிகளைத் திருடுகிறார்கள். நம் வேலைவாய்ப்பு, தொழில், வரிகட்டும் பணம் என அனைத்தையும் மத்திய அரசு திருடுகிறது. இதனைத்தான் அண்ணா அன்றே எச்சரித்திருக்கிறார். இன்று தமிழகத்தின் பெரும்பாலான பிசினஸ்கள் மார்வாடிகளிடம்தான் உள்ளது. இதனை அன்றே சொல்லியவர் அண்ணா. வட இந்தியர்கள் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடச் சொல்லிய அண்ணாவின் எழுத்துக்களை எடுத்துப் படித்தால் இன்றைய காலக்கட்டத்திலும் பொருந்தும். எனவே, எக்காலத்திற்கும் அண்ணாவின் கொள்கைகள் நிலைத்து நிற்கும்” என்கிறார், அவர்.