சிறப்புக் களம்

சுயேச்சையாக களம் காணும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள்! - பிரிக்கப்படுமா அதிமுக வாக்குகள்?

சுயேச்சையாக களம் காணும் சிட்டிங் எம்.எல்.ஏக்கள்! - பிரிக்கப்படுமா அதிமுக வாக்குகள்?

webteam

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

கூட்டணி பேசும்போதும் தொகுதி பங்கீடு செய்யும் போதும் வெடிக்காத உட்கட்சி பிரச்னை வேட்பாளர்கள் தேர்வின்போது வெளிப்பட்டு வருவது தேர்தல் காலங்களில் வழக்கமான ஒன்றுதான். அதிமுகவை பொருத்தவரை பெரும்பாலான அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வாய்ப்பு கொடுக்கப்படாத எம்.எல்.ஏக்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதில் சிலர் அதிமுகவுக்கு எதிராக செயலாற்றவும் துணிந்துவிட்டனர்.

இந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை கடும் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பல தரப்புகளிடம் இருந்து எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது என்ற விமர்சங்களும் எழாமல் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தேமுதிக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தது. அதுமட்டுமில்லாமல் அதிமுகவை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருவதாக கூறும் டிடிவி தினகரனுடன் கைக்கோர்த்துள்ளது.

இது ஒருபுறமிருக்க தங்களின் சொந்த கட்சி சிட்டிங் எம்.எல்.ஏக்களே அதிமுகவை எதிர்க்க தொடங்கிவிட்டனர். அதாவது வாய்ப்பு அளிக்காததால் அதிருப்தியில் இருந்த சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன், அமமுக கட்சியில் டிடிவி தினகரனுடன் சேர்ந்து அதேதொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட சீட்டும் வாங்கியுள்ளார்.

இதனிடையே பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக தன்னை எச்சிலை போல வீசிவிட்டதாக ஆதரவாளர்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார் தோப்பு வெங்கடாசலம். இதையடுத்து, பணிக்கம்பாளையத்திலிருந்து ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக புறப்பட்ட தோப்பு வெங்கடாசலம், பெருந்துறை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் இலாகிஜானிடம் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ சி.சந்திரசேகரனுக்கும் அதிமுக தலைமை சீட் தரவில்லை. எஸ்.சந்திரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் விரக்தியடைந்த சந்திரசேகரன், சுயேச்சையாக போட்டியிடுவதாக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.ரமேஷிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் அதிமுகவில் இருந்து சந்திரசேகரன் நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ் - இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டனர்.

சிட்டிங் எம்.எல்.ஏக்கள் வெறும் அதிருப்தியில் மட்டும் இருந்தால் பரவாயில்லை. ஆனால் சொந்த கட்சிக்கு எதிராகவே களமிறங்கி கட்சியை தோற்கடிக்க வேண்டும் என எண்ணுவது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் சிட்டிங் எம்.எல்.ஏக்களாக இருப்பவர்களுக்கு பெரும்பாலும் அந்த பகுதி மக்களின் மனநிலையை அறிந்து வைத்திருப்பார்கள். மேலும் தொகுதி நிலவரங்களையும் புரிந்திருப்பார்கள். அவர்கள் கட்சி சீட் தரவில்லை என்பதால் அமைதியாய் இருப்பது வேறு. அதுவே சொந்த கட்சிக்கு எதிராகவே திரும்புவது நிச்சயம் அந்த கட்சிக்கு விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.