சிறப்புக் களம்

90 கிட்ஸ்க்கு பழைய ரஜினி! 2k கிட்ஸ்க்கு புது ரஜினி: மீண்டும் வந்தார் மாஸ் கிளாஸ் ரஜினி !

90 கிட்ஸ்க்கு பழைய ரஜினி! 2k கிட்ஸ்க்கு புது ரஜினி: மீண்டும் வந்தார் மாஸ் கிளாஸ் ரஜினி !

webteam

இன்று காலை முதல் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார் ரஜினிகாந்த். காரணம், பேட்ட திரைப்படத்தின் ட்ரைலர். இந்த ட்ரைலர் ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அரசியல் ரீதியாக அடிக்கடி ரஜினி சறுக்கினாலும் சினிமா என்று வந்துவிட்டால் அவரை அடித்துகொள்ள ஆள் இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரஜினி ஏதோ ஒரு வகையில் கவர்ந்துதான் வருகிறார். 

குறிப்பாக 90ஸ் கிட்ஸ் என்று சமூக வலைதளங்களில் பரவிக்கிடக்கும் இளைஞர்களுக்கு ரஜினி என்றுமே தனி அனுபவம். 90 கிட்ஸ் படங்களை ரசிக்க தொடங்கிய காலங்களில் பாட்ஷா மூலம் "கூஸ்பம்ப்ஸ்" கொடுத்தவர் ரஜினி. இன்றும் பாட்ஷா படம் என்றால் 'நக்மாவின் அப்பாவுக்கு வயசாகும்போது ரஜினிக்கு எப்படி வயசு குறைஞ்சுது' என்ற கேள்வியைக்கூட கேட்காமல் ரசித்து பார்ப்பார்கள் இந்த  90 கிட்ஸ். ரஜினியின் நடை, மாஸ் வசனங்கள் என பாட்ஷா அனைவரின் பேவரைட். அதற்கு பிறகான ரஜினி படங்களும் அனைவராலும் பாராட்டப்பட்டாலும் 'இப்போதைய ரஜினியிடம் ஏதோ குறைகிறது' என்றே தோன்றியது. ஆனால் அந்த குறையை பேட்ட திரைப்படம் போக்கும் என்று சமூக வலைதளங்களில் மீம்கள் பறக்கின்றன. அப்படி என்ன குறைந்தது ரஜினியிடம்? என்று கேட்டால் ஜாலியான மாஸும் கிளாஸும்.

சமீபத்தில் வந்த ரஜினியின் படங்களில் சில அரசியலை முன்வைத்தே எடுக்கப்பட்டன. கபாலி, காலாவில் புரட்சி, அரசியல் பேசினார், சிவாஜி திரைப்படத்தில் கருப்பு பணத்தை ஒழித்தார். நடுவே வந்த எந்திரன் படம் ஹாலிவுட் ரகம். சமீபத்தில் வந்த 2.0 திரைப்படம் கூட இளைஞர்களை விடவும் குழந்தைகளைத்தான் அதிகம் கவர்ந்தது. ஆனால் பேட்ட திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ரஜினியை காணலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். கண்களால் காதல் பேசும் ரஜினி,  இப்போதைய ட்ரெண்ட் வசனங்களை பேசி மாஸ் காட்டும் ரஜினி, குறும்பாய் சிரித்து வில்லனிடம் ஸ்வீட் வார்னிங் விடும் ரஜினி இவையெல்லாம் பேட்ட திரைப்படத்தில் இருக்குமென அதன் ட்ரெய்லரே சொல்கிறது. அது போக ரஜினியின் லுக் அனைவரையுமே கவர்ந்துள்ளது. 

ஸ்டைலான உடைகள், இளமையான லுக் என பேட்ட திரைப்படத்தை அதன் இயக்குநர் ஒரு ரஜினி ரசிகராக இருந்தே செதுக்கி இருப்பதாக தெரிகிறது. தான் இதுவரை பார்த்த ரஜினி படங்களையெல்லாம் மனதில் வைத்து ஒரு அழகான கெத்து ரஜினியை கொடுக்க வேண்டுமென்று கார்த்திக் சுப்புராஜ் யோசித்திருக்க வேண்டும். அதுவே பேட்ட திரைப்படத்தில் எதிரொளிக்கும் என்றே தோன்றுகிறது.

பேட்ட ட்ரைலரில் ஸ்டைலாக கேட்டை திறக்கும் ரஜினியை பார்த்தவுடனேயே, ஆகா, இது அபூர்வ ராகங்கள் ரஜினி என அப்படத்தின் சீனை தேடி யூ டியூப் பக்கம் போக வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். போதாத குறைக்கு த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா என மல்டி ஸ்டார்ஸ் படமாக இருக்கிறது பேட்ட. இவர்களெல்லாம் ரஜினிக்கு மேலும் துணை நிற்பார்கள்.

சமூக கருத்துகள், அரசியல் கருத்துகள், புரட்சி வார்த்தைகள் இவற்றையெல்லாம் வேண்டுமானால் படத்தில் தூவிக்கொள்ளட்டும். ஆனால் எங்களுக்கு ரஜினியை வைத்து அழகான பொழுதுபோக்கான எல்லாம் நிறைந்த பக்கா மாஸ் கமெர்ஷியல் படம் கிடைத்தால் போதுமென்பதே இப்போதைக்கு சோஷியல் மீடியா டாக். இளைஞர்களின் பல்சை அறிந்து கார்த்திக் சுப்புராஜும் அப்படிப்பட்ட ரஜினியைத்தான்  பொங்கலுக்கு நம் கண் முன்னால் நிறுத்துவார் என்று நம்புவோமாக. டிரைலரின் எதிர்பார்ப்பின் படி பார்த்தால், பேட்ட திரைப்படம் 90 கிட்ஸ்களுக்கு மீண்டும் தங்கள் பழைய ரஜினியை காட்ட வேண்டும். 2K கிட்ஸ்களுக்கு புத்தம் புதிய ரஜினியை காட்ட வேண்டும். 

டீசரில் ஒரு வசனம் பேசுகிறார் ரஜினி '' சிறப்பான தரமான சம்பவங்களை இனிமே தான் பாக்கப்போற''. அந்த வசனம் உண்மையாகவே இருந்துவிட வேண்டும். பராக்! பராக்!