சிறப்புக் களம்

கொரோனா கால மகத்துவர்: தாயை இழந்தும் கடமை தவறாது பணியை தொடர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

கொரோனா கால மகத்துவர்: தாயை இழந்தும் கடமை தவறாது பணியை தொடர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

நிவேதா ஜெகராஜா

தனது தாய் இறந்த போதும் கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் தனது கடமையை முக்கியம் என பணியாற்றிய தகவல் நெகிழவைத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா நகரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பிரபாத் யாதவ். இவர் கடந்த சில நாட்களாக நகரில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டும் கொரோனா முதல் அலையின்போது இதே பணியை இச்சேவையில் ஈடுபட்டிருந்தார். இந்த ஆண்டும் தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், மீண்டும் முழு நேரமாக கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் முயற்சியாக ஆம்புலன்ஸ் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் பிரபாத் யாதவ் பணியில் ஈடுபட்டிருந்த போது, மெயின்பூரில் இருந்த அவரின் தாய் உயிரிழந்துள்ளார். தாய் இறந்த தகவல் கிடைத்ததும் சோகத்தில் மூழ்கியுள்ளார். சோகம் ஒருபுறம் இருந்தாலும் கொரோனாவை எதிர்க்க, தனது பணியை பாதியில் விட்டுவிட்டுச் செல்ல விரும்பாமல், பணியை தொடர்ந்திருக்கிறார். அதன்படி தனது டியூட்டி நேரம் முடியும் வரை ஆம்புலன்ஸை இயக்கி நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். தனது தாய் இறந்த செய்தி கிடைத்த பின்பு மட்டும் பிரபாத் 15 நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அவர்களை சேர்ந்தபின், தாயை இறுதியாக காண 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது ஊருக்குச் சென்று இறுதிச் சடங்கை முடித்திருக்கிறார். இறுதிச்சடங்கை முடித்தபின் ஊரிலேயே தங்கிவிடாமல், அடுத்த நாளே அங்கிருந்து கிளம்பி மீண்டும் தனது சேவை பணியைத் தொடங்கி இருக்கிறார். சில நாட்கள் விடுமுறை எடுத்துவிட்டு பணிக்கு வர உயர் அதிகாரிகள் வலியுறுத்தியும் பிரபாத் அதனை மறுத்து மறுநாளே பணியில் இணைந்திருக்கிறார்.

மறுநாளே பணிக்கு திரும்பியுள்ளது தொடர்பாக பேசியுள்ள அவர், "ஆம்புலன்ஸ் சேவை வேண்டி நகரில் பல மக்கள் காத்து இருப்பார்கள். அதனால் என்னால் அங்கே சும்மா இருக்க முடியாது. என் அம்மா இறந்துவிட்டார். அந்த சோகத்தால் உட்கார்ந்திருந்தால், மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியாது. மக்களின் உயிர் முக்கியம். நான்கு மக்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவினேன் எனத் தெரிந்தால் என் அம்மாவே சந்தோஷப்படுவார். அதனால்தான் மறுநாளே திரும்பிவிட்டேன்" என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

கொரோனா காலத்தில் மக்களின் உயிர்களை காக்க இப்படி இடைவிடாமல் பணிசெய்து வரும் பிரபாத் வாழ்க்கையில் கொரோனா சோகத்தையை தந்துள்ளது. ஆம், இரண்டாம் அலையின் போது அவரின் தாய் உயிரிழந்ததை போல, முதல் அலையின்போது கடந்த ஆண்டு தனது தந்தையையும் இழந்திருக்கிறார். அப்போதும் இதேபோல் ஒரே நாளில் பணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் பாராட்டுக்குரியவர் பிரபாத்!