திருநெல்வேலியின் பாரம்பரியம் என்றால் அல்வாதான் பலருக்கும் நியாபகத்துக்கு வரும். ஆனால் திருநெல்வேலி அல்வாவுக்கு மட்டுமல்ல; மரச்செப்பு சாமாண்களுக்கும் தொன்றுத்தொட்ட நூற்றாண்டு பாராம்பரியத்தை தன்னகத்தே கொண்டது. நெல்லையின் அம்பாசமுத்திரத்தில் மட்டும் நூற்றாண்டுகளை தாண்டி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது மரச்செப்பு சாமாண்கள். தங்களின் இந்த தலைமுறை தாண்டிய பாராம்பரியத்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்பதற்காக கைவினை மரசெப்பு பொருள்களுக்கு புவிசார் குறியீடு கோருகின்றனர் கைவினை தொழிலாளர்கள். தங்களின் வாழ்வாதாரத்தோடு எப்படி மரச்செப்பு கைவிணை வியாபாரம் ஒன்றர கலந்தது, அவற்றின் செய்முறை எப்படி இருக்கும் என்பது பற்றி அம்மக்களே நமக்கு சில தகவல்களை பகிர்ந்தனர்.
இன்றைய குழந்தைகள் மட்டுமின்றி, குழந்தை வயதைக் கடந்த நேற்றைய குழந்தைகளுக்கும் கூட மறக்க முடியாத நினைவுகளை இந்த மரச்செப்பு பொருட்கள் கொடுக்கும். அத்தனை சிறப்புமிக்க இந்தப் பொருட்கள் எப்படி செய்யப்படுகிறது தெரியுமா?
இவற்றை செய்ய, தஞ்சாவூரை அடுத்த புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகம் விளையும் யூகலிப்டஸ் மரங்களை வியாபாரிகள் முதலில் வாங்கிவருவர். இதற்காகவே வெட்டி விற்கப்படும் அந்த யூகலிப்டஸ் மரங்களை, வாங்கிவந்து அவற்றை ஆறு மாதம் வரை வெயில் படாதவாறு காய வைக்கப்பார்கள். நன்கு காய்ந்த பின், கடைசல் மூலம் தேவையான வடிவத்துக்கு அவை மாற்றப்படும். பெரும்பாலும் குழந்தைகள் விளையாட்டுப் பொருளின் வடிவத்துக்கு ஏற்பவே, இது மாற்றப்படுகிறது. அதன்பின் பார்த்ததும் கவரும் வகையில் துடிப்பான வண்ணங்களைத் தீட்ட அரக்கு பயன்படுத்துகின்றது. இந்த அரக்கு, இயற்கையான மரங்களில் கிடைக்கும் ஒருவகை பிசின் என்பதால், பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களைபோல குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பையும் இது ஏற்படுத்துவதில்லை.
இப்படியாக குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் விருப்பத்தையும் மையப்படுத்தியே மரச்செப்பு விளையாட்டு பொருட்களை தாங்கள் செய்வதாக தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல இடங்களில் இவை செய்யப்படுகிறது என்றபோதிலும், அம்பாசமுத்திரத்தில்தான் நூற்றாண்டை கடந்த பாரம்பரியம் இருக்கிறது. இந்தத் தொழிலை மட்டுமே நம்பி, சுமார் 300 குடும்பங்கள் அம்பாசமுத்திரத்தில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் என்ற மரச்செப்பு பொருள்களை தயாரித்து விற்கும் வியாபாரியொருவர் நம்மிடையே இதுபற்றிய பேசியபோது, “என் பேர் தங்கம். நான் 30 வருடமா இதே பகுதியில் இந்த வியாபாரம் செய்கிறேன். சுமார் 150 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் இந்த கைவினை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இப்போதும் 300 குடும்பங்கள் வரை மரங்களை கடைசல் செய்து பொருட்களை உருவாக்கும் தொழிலில் இங்கே ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் செய்யும் பெரும்பாலான பொருட்கள், குழந்தைகளை மையப்படுத்தியே இருக்கும். 6 மாத குழந்தை வாயில் வைத்து பயன்படுத்தும் சூப்பி கட்டை தொடங்கி நடை பழக நடை வண்டி, வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களாக இருந்த அம்மி, உரல், ஆட்டுக்கல், நவீனமாக மிக்ஸி - கிரைண்டர் வகைகள் என எல்லாவற்றையுமே செய்கிறோம். மரங்களில் கடைசல் செய்து, இயற்கையான மரப்பிசினைக் கொண்டு துடிப்பான வண்ணங்கள் தீட்டி உருவாக்கப்படும் இந்தச் செப்பு பொருள்கள் அனைத்தும் குழந்தைகள் கண்டவுடன் மயங்கும்படி இருக்கும். நூற்றாண்டுகள் தாண்டிய அம்பாசமுத்திரம் ஊரின் அடையாள படைப்பான மர செப்புச் சாமான்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க வேண்டும் என்பது கைவினை தொழிலாளர்களாகிய எங்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு” என்றார்.
இன்று இந்தளவுக்கு வளர்ந்திருக்கும் இந்த வியாபாரம் ஆரம்பகாலத்தில் இவ்வளவு பரிட்சயமானதாக இருந்திருக்கிருக்கவில்லை. சொல்லப்போனால் அன்றைக்கு இதை தொழிலாக எடுத்திருந்தவர்கள் இதையொரு சைடு பிசினஸாகவே பார்த்திருக்கிறார்கள். அந்தநேரத்தில் வண்ணங்கள், அரக்கு உபயோகம் போன்றவற்றின் உபயோகம் குறித்து அவர்களுக்கு தெரியாது என்பதால், எப்படி பொருட்களை உருவாக்குவது - அதை எப்படி கண்கவர் விதமாக பேக் செய்வது - இதற்கான விற்பனை சந்தை என்ன - இந்த வியாபாரத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக யார் இருப்பார்கள் என்பது போன்ற வியாபார நுணுக்கங்கள் அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தொழில்நுட்ப ரீதியாகவும் அந்த நேரத்தில் பின்தங்கி இருந்ததால், அதிகப்படியான பொருட்களை அவர்களால் உருவாக்க முடியாமல் இருந்துள்ளது. காலம் செல்ல செல்ல, கால ஓட்டத்தின் ஒருபகுதியாக இத்துறை இன்று இந்தளவுக்கு வளர்ந்துள்ளது.
தற்போது இந்த வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை தங்களுக்கு இருப்பதாக சொல்லும் இந்த வியாபாரிகள், அதற்காகவே புவிசார் குறியீடு கோருவதாக தெரிவிக்கின்றனர். அது வழங்கப்படுவதன்மூலம், இந்தத் தொழிலை நம்பியிருக்கும் பல குடும்பங்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமென்றும், அடுத்த தலைமுறை தொழிலாளர்களை உருவாக்க முடியுமென்றும் இந்த வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
கைவினைத் தொழிலாளர் மோகன் கூறும்போது, "என் தாத்தாவின் அப்பா, அடுத்து என் தாத்தா, அடுத்து என் அப்பா, இப்போது நான் என எங்கள் குடும்பம் நான்கு தலைமுறையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அடுத்த தலைமுறையான எங்கள் பிள்ளைகள் இந்தத் தொழிலில் ஈடுபடவிரும்பவில்லை. எங்கள் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தி வேறு தொழிலிலும் வேலையிலும் ஈடுபடுவதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். இருந்தாலும் எங்கே எங்களுடைய இந்தத் தொழில் இந்தத் தலைமுறையோடு நின்றுவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. அதனாலேயே எங்கள் பிள்ளைகள் இல்லையென்றாலும்கூட, ஆர்வமுள்ளவர்கள் இதை செய்ய வழிவகை செய்ய நினைக்கிறோம். இத்தொழிலில் வருமானம் நன்கு வரும் - இதற்கென ஒரு பிரத்யேக விற்பனை சந்தையுள்ளது என தெரிந்தால், இந்த தொழில் செய்வோரின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரிக்கும். அந்தவகையில் இந்தத் தொழிலுக்கான புவிசார் குறியீடு போன்ற அங்கீகாரம் கிடைக்கும் போது தலைமுறை தாண்டி இந்த தொழிலை கொண்டு செல்ல முடியும்” என்றார்.
இவர் சொல்வது போல, வருமானமிக்க தொழிலாகவும் - அங்கீகாரமிக்க தொழிலாகவும் இது மாறும்போது நிச்சயம் முதலீட்டாளர்களும் தொழில் முனைவோரும் இதற்குள் வருவர். இன்றைய நிலையில் குழந்தைகள் பயன்படுத்தும் பல விளையாட்டு பொருட்கள் அவர்களுக்கு உடலில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கிறது. ஆனால் இந்த மரச்செப்பு பொருட்கள், அந்த ஆபத்தான பொருட்களை ஒழித்துக்கட்டும் அளவுக்கு திறன் மிக்கது. அந்தவகையில், இதன் தேவை, இப்போது நம் குழந்தைகளுக்குத் தேவை!
இன்றைய நிலவரப்படி அம்பாசமுத்திரத்தில் மட்டும் தயாரிக்கப்படும் சொப்பு சாமான்கள் ரூபாய் 150, ரூ.180, ரூ.350 என மூன்று செட்-களாக விற்பனைக்கு வருகிறது. அதில் சாப்பிடும் தட்டு, டம்ளர், மாவரைக்கும் ஆட்டுரல், பருப்பு உடைக்கும் திருக்கை, குடம், குக்கர், சிலிண்டர், கிரைண்டர் என 32 வகையான செப்பு சாமான்கள் ஒரு செட்டில் இருக்கும். கண்ணைக் கவரும் இந்த அழகுறு செப்பு சாமான்கள், மாநிலம் தாண்டி மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய புவிசார் குறியீடு உதவும். அப்படியாக இதன் விற்பனை சந்தை அதிகரிக்கும்போது, பல தொழிலாளர்கள் இதனால் பயன்பெறுவர்.
இதுநாள் வரை இந்த மரச்செப்பு பொருட்களை புவிசார் குறியீடு கிடைக்க அப்ளை செய்யாததற்கு காரணம், இது தங்கள் ஊரை சேர்ந்ததுதான் என தெரியாததே என சொல்கின்றனர் இந்த வியாபாரிகள். இந்த வியாபாரம் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே செய்யப்படுவதால், எந்தப் பகுதியில் இது தொன்றுத்தொட்டு நடந்தது என்பதில் வியாபாரிகளிடையே குழப்பம் இருந்துள்ளது. அதனால் ‘இது நம் ஊரை சேர்ந்ததாக இருக்காது’ என நினைத்து அவர்கள் புவிசார் குறியீட்டுக்கு அப்ளை செய்யாமல் இருந்துள்ளனர். இப்போதும்கூட, அரசு அதிகாரிகளின் தரப்பிலிருந்தே இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டிருந்திருக்கிறது. தொழிலாளர்களின், அடிப்படை தேவைகளை உணர்ந்து இந்த முன்னெடுப்பை எடுத்தது போலவே, புவிசார் குறியீடு கிடைப்பதர்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் - இப்போதைக்கு இந்த தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு வியாபாரம் மங்காத வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் திட்டங்களையும் அரசு செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர் அதிகாரிகள். குறிப்பாக மூலப் பொருட்கள் வாங்குவதற்கு மானியம் தேவைப்படுவதால், அதற்கு அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள் அவர்கள்!