சிறப்புக் களம்

'இதுதான் சமூக நீதி' - அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்துக்கு குவியும் வரவேற்பு

'இதுதான் சமூக நீதி' - அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்துக்கு குவியும் வரவேற்பு

கலிலுல்லா

'அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகராகலாம்' திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களில் 24 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் பசுமைவழிச் சாலை, அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலைத்துறை திருக்கோயில் புதிய பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை இன்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மிக நீண்டகாலமாக பல தடைகளை சந்தித்துவந்த அனைத்துசாதி அர்ச்சகர்கள் பணிநியமன ஆணை பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும், திட்டத்தில் பணிநியமன ஆணை பெற்ற 24 பேரில் 5 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், 6 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 12 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஒருவர் இதர வகுப்பினராவர். இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட 58 கோயில்களில் பணியார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சரிடம் பணி ஆணை பெற்றவர்களில் பெண் ஓதுவார் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். 2007 ஆம் ஆண்டு அங்கயற்கண்ணி என்பவருக்கு அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி ஓதுவாராக பணி நியமன ஆணை வழங்கினார். தற்போது, சுகாஞ்சனா என்பவரை செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் ஓதுவார் ஆக நியமித்து பணி ஆணையை அளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கடந்த 1970ம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி பெரியாரின் நீண்ட நாள் கோரிக்கையான, 'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டதால், இந்த சட்டத்தை அப்போது திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. 'பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்' என்றும் இதனை கருணாநிதி எப்போதும் குறிப்பிடுவார். பெரியார் ஆசைப்பட்டதை கருணாநிதி நிறைவேற்ற முயற்சித்து, தற்போது மு.க.ஸ்டாலின் அதை சாத்தியமாக்கியிருக்கிறார்.

இந்நிலையில் அனைத்துசாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் 24 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டிருப்பது பல்வேறு தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

சீமான் வரவேற்பு :

''பன்னெடுங்காலமாகக் கோரிக்கை முழக்கமாக இருந்த, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தைச் செயல்படுத்தி, தமிழ் ஓதுவார்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பணிநியமன ஆணை வழங்கியிருக்கும் செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தினை இன்னும் விரிவாக்கம் செய்து, செயலாக்கம் செய்ய வேண்டுமெனும் விருப்பத்தை முன்வைத்து, இத்தகைய சீர்மிகு நடவடிக்கையை முன்னெடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். இதேபோல, ஆதித்தமிழ்க்குடிகளுக்கு வெள்ளையர்களது ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட ஏறத்தாழ 12 இலட்சம் ஏக்கருக்கும் மேலான பஞ்சமி நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கே வழங்க வழிவகைகளை செய்ய முன்வர வேண்டுமென கோருகிறேன்'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருமுருகன் காந்தி :

''அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முதல்வரால் நியமனம் பெற்றது வரலாற்று சிறப்புமிக்கது, வரவேற்பிற்குரியது. தடைகடந்து நடைமுறைப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும், இந்த உரிமைபோராட்டத்தில் தொடர்ந்து பங்காற்றிய திராவிடஇயக்க-பெரியாரிய தோழர்களுக்கும், அம்பேத்கரிய-முற்போக்கு அறிஞர்களுக்கு-செயல்பாட்டாளர்களுக்கும் மகிழ்வுடன் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்'' என மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

குன்றக்குடி அடிகளார் :

“கடவுளும் ஏற்றுக்கொள்ளும் வகையில், கலைஞரைப் போல் செயல்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டுமென்பது அப்பர் பெருமான் & ராமானுஜரின் எண்ணம்” என குன்றக்குடி அடிகளார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி :

''தமிழகத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதற்கு வழிவகுக்கும் முறையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த பட்டியல் பிரிவு 5 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 6 பேர், பிற்படுத்தப்பட்டோர் 12 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் ஒருவர், பெண் ஓதுவார் ஒருவர் என 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் :

''அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர். ஆயிரங்காலத்துக் கனவு நனவாகியது. இது வேலை வாய்ப்புக்கானது அல்லது கடவுளுக்குத் தொண்டு செய்வது என்பதைவிட, மனிதரில் உயர்வு- தாழ்வு எனும் கற்பிதத்தின் மீது - சனாதனக் கருத்தியல் மேலாதிக்கத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள அறவழி தாக்குதல். இதுவே_சமூகநீதி'' என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.