சிறப்புக் களம்

நிலுவை வைக்கப்படுகின்றனவா இழப்பீட்டு தொகைகள்? - உண்மை என்ன?.. 360° அலசல்

நிலுவை வைக்கப்படுகின்றனவா இழப்பீட்டு தொகைகள்? - உண்மை என்ன?.. 360° அலசல்

கலிலுல்லா

மாத ஊதியதாரர்கள் மற்றும் நடுத்தர மக்களை மிகவும் அச்சுறுத்தும் செலவுகளில் ஒன்று மருத்துவச்செலவு. எதிர்பாராமல் சில லட்சங்கள் வரை மருத்துவத்திற்கு செலவழிக்க வேண்டிய சூழலில் விழிப்பிதுங்கி நிற்கும் குடும்பங்கள் பல. அது போன்ற நேரங்களில் உதவிக்கரம் நீட்டுவது மருத்துவ காப்பீடுகளே. அதற்காகவே பல குடும்பங்கள் தங்கள் சேமிப்பாய் கருதி, மருத்துவ காப்பீடு எடுக்கின்றனர். அப்படிப்பட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது அவர்கள் நினைத்தது போலவே மருத்துவ காப்பீடுகள் கைகொடுத்தன. இந்த சூழலில்தான் பல்வேறு காப்பீடு திட்டங்களின் பிரீமியம் தொகையை 10லிருந்து 20 சதவீதம் வரை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

குறிப்பாக மருத்துவக் காப்பீடு திட்டங்களில் பிரீமியம் தொகைகளை காப்பீட்டு நிறுவனங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. கொரோனா தொற்றுக்கு ஆளாகி அதன் பின் இணை நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் இதற்கு ஒரு காரணமாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ காப்பீடு திட்டங்களின் பிரீமியம் தொகை உயர்வதால் வாழ்நாள் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களின் பிரீமியம் தொகைகளும் 10 முதல் 40 விழுக்காடு வரை உயரலாம் என தகவல் வெளியாகியுள்ளது

மருத்துவக் காப்பீட்டில் அரசு மற்றும் தனியாரின் பங்கு

திடீர் உடல் நலக் குறைவு மற்றும் அவசர கால மருத்துவ சேவை பெறுவதற்கு நம் அனைவரிடமும் போதிய பண வசதி இருப்பது இல்லை. இது போன்ற இக்கட்டான நேரங்களில் உதவுவதற்காகத்தான், மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 55க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் உள்ளன. இதில், 20க்கும் மேற்பட்டவை ஆயுள் காப்பீடு நிறுவனங்களாகவும், 30க்கும் மேற்பட்டவை பொது மருத்துவக் காப்பீடு நிறுவனங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 4 பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு, கடந்த 2019 - 2020 ஆம் ஆண்டில், பிரீமியம் தொகையாக 51 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதில், 49 விழுக்காடு தொகையை பொதுத்துறை நிறுவனங்களும், 51 விழுக்காடு தொகையை தனியார் நிறுவனங்களும் பெற்றுள்ளன. பொதுவாக 3 வயது குழந்தை முதல் 86 வயது வரையிலான முதியவர்கள் வரை அனைவரும் மருத்துவக் காப்பீடு பெற முடியும். அதன்படி, இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 49 கோடி மக்கள் மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளார்கள். இதில், பொதுத்துறை நிறுவனங்களில் 36 கோடி மக்களும், தனியார் நிறுவனங்களில் 13 கோடி மக்களும் மருத்துவக் காப்பீட்டில் இணைந்துள்ளனர்.

இவைதவிர, ஏழை மக்களுக்கு உதவும் வகையில், கொண்டு வரப்பட்ட பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலமும், தமிழகத்தில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலமும் ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள். மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக 11 சதவிகித நபர்கள் மட்டுமே மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலுவை வைக்கப்படுகின்றனவா இழப்பீட்டு தொகைகள்?

இழப்பீட்டு தொகையை கேட்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேயிருப்பதால் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை புதுப்பிக்க நிறுவனங்கள் மறுக்கின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக மதுரை மண்டல பொதுக்காப்பீட்டு தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த பாலா பேசுகையில், ``பொதுவாக இந்த காலக்கட்டத்தில் நிறைய பேர் இன்ஸூரன்ஸ் நிறுவனங்களை நாடி வருகின்றன. ஏறத்தாழ புதிதாக 41% பேர் மருத்துவக்காப்பீடு எடுத்துள்ளனர்.

இழப்பீடு கோரிக்கையை பொறுத்தவரையில் மருத்துவ குழு மூலமாகத்தான் பரிசீலிக்கப்படுகிறது. ஏறத்தாழ 100க்கு 82சதவீதம் இழப்பீடுகள் உடனே அளிக்கப்பட்டுவிடுகின்றன. நீண்டகாலமாக இழப்பீடு நிலுவையில் இருப்பதாக தெரியவில்லை. உடனுக்கு உடனே இழப்பீடுகள் வழங்கப்பட்டுக்கொண்டுதான் வருகின்றன. இதுவரை, எதிர்பாராத செலவினங்களுக்கு தான் மருத்துவகாப்பீடு இருந்தது. இப்போது, பிரசவம், சில நோய்களில் கூட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் போன்றவற்றில் அரசு நிறுவனங்கள் இழப்பீட்டு கோரிக்கையை நிறைவேற்றியுள்ளன. சுரக்ஷா பீமா யோஜனா காப்பீட்டு திட்டத்தில் 17 கோடி பேருக்கு இன்ஸூரன்ஸ் போடப்பட்டுள்ளது. இழப்பீடு கோரி 723கோடி வழங்கப்பட்டுள்ளது. 82சதவீதம் இழப்பீட்டு கோரிக்கை நிறைவேற்றபட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.