உத்தரப்பிரதேச தேர்தலில் நாளுக்கு நாள் அகிலேஷ் யாதவின் கிராஃப் ஏறிக்கொண்டே போகிறது. ஐந்து மாதங்களுக்கு முன்புவரை பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என்று நான்கு முனை போட்டியாக இருந்த உ.பி தேர்தல்களம், இப்போது இருமுனை போட்டியாக கூர்மையடைந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில தேர்தல் என்பது கிட்டத்திட்ட ஒரு மினி இந்திய தேர்தல்தான். ஏனென்றால் சுமார் 23.5 கோடி மக்கள்தொகையை கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகவும், 403 உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய மாநில சட்டபேரவையாகவும் உத்தரப்பிரதேசம் இருக்கிறது, மேலும் இம்மாநிலத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகளும், 32 மாநிலங்களவை இடங்களும் உள்ளது என்பதால் எப்போதும் நாட்டை ஆளும் கட்சிகளின் கவனம் இந்த மாநிலத்தின் மீதுதான் இருக்கும்.
நாட்டை ஆண்ட ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, சரண்சிங்,சந்திரசேகர்,ராஜீவ் காந்தி,வி.பி.சிங் ஆகிய பிரதமர்களை தந்தது உத்தரப்பிரதேசம்தான். வெளி மாநிலங்களை சேர்ந்த வாய்பாய், மோடியும் கூட இந்த மாநிலத்திலிருந்துதான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எனவே இந்த மாநிலத்தை கைப்பற்றிவிட்டாலே மத்தியில் ஆட்சியமைத்துவிடலாம் என்பது ஆளும் கட்சிகளின் கணக்காக இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் 80 கள் வரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த உத்தரப்பிரதேத்தில் 1977ல் ஜனதா கட்சி ஆட்சியமைத்தது. அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு படிப்படியாக குறைய தொடங்கினாலும் மீண்டும் ஆட்சியை பிடித்தது. பிறகு 1989ல் ஜனதா தளம் சார்பில் முலாயம் சிங்கும், 1991 இல் பாஜகவும் ஆட்சியமைத்தன. அதன்பின்னர் இப்போதுவரை சமாஜ்வாதி, பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள்தான் உ.பியை மாற்றி மாற்றி ஆண்டு வருகிறார்கள்.
2007ல் மாயாவதியும், 2012இல் சமாஜ்வாதி கட்சியும் ஆட்சியை பிடித்திருந்த நிலையில், 2017இல் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. எனவே தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் வெல்ல பாஜக – சமாஜ்வாதி கட்சி – பகுஜன் சமாஜ் என்ற மூன்று பெரும் கட்சிகளும் மும்மரமாக உள்ளன. பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸும் இம்மாநிலத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. உ.பியில் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது, மார்ச் 10 இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
பாஜகவின் நம்பிக்கை:
2017ல் நடந்த உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் 303 இடங்களில் வென்று இமாலய வெற்றியை பெற்றது பாஜக. அப்போது சமாஜ்வாதி 47, பகுஜன் சமாஜ் 19, காங்கிரஸ் 7, அப்னா தள் 9 இடங்களில் வெற்றிபெற்றது. 2019இல் வரலாற்றில் முதன்முறையாக உத்தரப்பிரதேச அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தன, காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தலை சந்தித்தது. இதில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக 64 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 10 இடங்களிலும், சமாஜ்வாதி 5 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மட்டும் ரேபரேலியில் வென்றார், அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அமேதியில் தோற்றார்.
மூன்று வேளாண் சட்டங்கள் உ.பியில் பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியான விவசாயிகள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியதால் அந்த சட்டமே ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய வாரங்களில் பிரதமர் அடிக்கடி உ.பியில் விசிட் அடித்து வருகிறார், பல திட்டங்களையும் அறிவித்துள்ளார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக உ.பி அரசியலை கண்காணித்து வருகிறார். எனவே எப்படியாவது வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. மேலும் குறிப்பாக பாஜக எதிர்ப்பு ஓட்டுகள் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என மூன்றாக பிரிவதால் எளிதாக வெல்ல முடியும் என்பதும் அவர்களின் கணக்காக உள்ளது. குறிப்பாக சமாஜ்வாதிக்கு செல்லும் முஸ்லீம் ஓட்டுக்களை ஓவைஸி பிரிப்பார் என்பதால் முஸ்லீம் ஓட்டுகளும் ஒருங்கிணையாது என்று பாஜக நினைக்கிறது.
அகிலேஷின் அபார பாய்ச்சல்:
2017 இல் தோல்வியடைந்தது முதலே தங்கள் கட்சியின் மீதுள்ள குறைகளை களையும் வகையில் செயல்பட தொடங்கினார் அகிலேஷ் யாதவ். குடும்ப கட்சி, ஜாதி கட்சி, அராஜக கட்சி என்ற சமாஜ்வாதி கட்சி பற்றிய முத்திரைகளை உடைத்து அனைத்து தரப்புக்குமான கட்சியாக மாற்ற மிகவும் மெனக்கெட்டார் அவர், கிட்டத்திட்ட அதில் வெற்றியடைந்துள்ளார் என்பதையே தற்போது அவருக்கு அதிகரித்துள்ள வரவேற்பு காட்டுகிறது.
சில மாதங்களுக்கு முன்புவரை நான்கு அல்லது மூன்று முனை போட்டி என்ற நிலையிலேயே கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருந்தன. ஆனால், நாட்கள் செல்லச்செல்ல அகிலேஷின் தேர்தல் களப்பணி உ.பி தேர்தல் பாதையையே தடம் மாற்றிப்போட்டுள்ளது. தற்போது கருத்துக்கணிப்பு முடிவுகள் அகிலேஷுக்கு சாதகமாக வெளிவர தொடங்கியுள்ளன. முக்கியமாக பாஜக அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மௌரியா அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். மேலும் பல பாஜக எம்.எல்.ஏக்களும், முக்கிய தலைவர்களும் இனிவரும் நாட்களில் சமாஜ்வாதியில் இணைவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுபோல காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் சமாஜ்வாதியில் இணைந்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்டிரிய லோக்தளம் போன்ற கட்சிகள் சமாஜ்வாதி கூட்டணியில் உள்ளன, திரிணாமுல் காங்கிரஸும் இந்த கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
உ.பியில் மொத்தமாக சுமார் 20 சதவீதம் முஸ்லீம் வாக்குகள் உள்ளன, இவை அனைத்தும் இந்தமுறை சமாஜ்வாதிக்கு செல்லும் என சொல்லப்படுகிறது. இன்னும் சில வியூகங்களை வகுத்து கொஞ்சம் கூடுதலாக உழைத்தால் வெற்றிபெற்றுவிடும் நிலையில் அகிலேஷ் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா வேலையிழப்பு,விவசாய எதிர்ப்பு மனநிலை என பாஜகவுக்கு எதிராக உள்ள வாக்குகள் இந்த முறை பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ்க்கு செல்லாமல் மொத்தமாக சமாஜ்வாதிக்கு திரும்பும் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்த முறை களம் யோகி வெர்சஸ் அகிலேஷ் என மாறி நிற்கிறது.
ஓவைஸி உ.பி தேர்தலில் 100 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் தனித்து காலம் காணுகின்றன, இவையெல்லாம் அகிலேஷை அச்சுறுத்தும் காரணிகள்தான். ஆனால், தற்போதைய சூழலில் யோகியை முந்தும் நிலையில் அகிலேஷ் முன்னேறி வருகிறார் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.