தமிழக அரசியல் களத்தில் இன்றைக்கு பெரிய அளவில் பேசுபொருளாக இருந்திருக்க வேண்டிய விஷயம் அமித்ஷாவின் வருகைதான். நேற்றைய பொழுது முழுவதுமே திமுகவிற்கு எதிராக அமித்ஷா பேசியதுதான் பேசுபொருளாக இருந்தது. அதுவே இன்றும் தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால், இன்று காலை வரை திமுக Vs பாஜக என்று பேசப்பட்டு வந்தது, ஜெயக்குமாரின் பேட்டிக்கு பிறகு அதிமுக Vs பாஜக என்று மாறியிருக்கிறது. இதற்கு காரணம் நேர்காணல் ஒன்றில் அண்ணாமலை தெரிவித்த கருத்துதான்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கு நாளிதழ் ஒன்றுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்தப் பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். திமுக அரசின் ஊழல் பட்டியல் குறித்த கேள்வியை தொடர்ந்து அதிமுகவின் ஆட்சி குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கு, “எந்த கட்சியையும் நான் குறிப்பிட்டு பேசவில்லை. ஆனால், மக்கள் பணத்தை யார் கொள்ளையடித்தாலும் நாங்கள் கேள்வி கேட்போம்” என்றார்.
அத்துடன், ஊழல் குற்றச்சாட்டில் 1991-96 கால ஆட்சி தான் மிக மோசமானது என்ற கருத்தை ஏற்கிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, "தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இந்தியாவின் ஊழல் மிக்க மாநிலங்களில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் என்று கூட சொல்வேன்" என குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா என்ற பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் 1991-96 காலத்தில் அவர்தான் முதலமைச்சர் ஆக இருந்தார். அதனால், ஜெயலலிதா அரசை நேரடியாக அண்ணாமலை விமர்சித்துள்ளதுதான் தற்போது அதிமுகவை சீண்டியுள்ளது.
இதையடுத்து, பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிக காட்டமான விமர்சனங்களை அவர் முன் வைத்துள்ளார்.
ஜெயக்குமார் பேட்டியின் முழுவிபரம்:
அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும்!
அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும், கூட்டணி தர்மத்தை மீறி பேசிகிறார். மாநில தலைமைக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை.
பாஜகவில் மாநில தலைமைப் பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியது இல்லை. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக பாஜக கூட்டணி தொடரக் கூடாது என்பது போல உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி தொடர கூடாது, பிரதமராக நரேந்திர மோடி வரக்கூடாது என்பது போல தான் அண்ணாமலையின் செயல்பாடுகள் உள்ளன
அதிமுக ஆலமரம், பாஜக, வெறும் செடி!
கத்துக்குட்டியாக இருக்கிற அண்ணாமலைக்கு வரலாறும் தெரியாது, பாரம்பரியமும் தெரியாது. அண்ணாமலையின் செயல்பாடுகள் தொடர்ந்தால் பாஜக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய நேரிடும். எதைப்பேசினாலும் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. கூட இருந்தே குழிபறிக்கும் செயல்களை அதிமுக வேடிக்கை பார்க்காது. அண்ணாமலையின் பேச்சால் அதிமுக தொண்டர்கள் 2 கோடி பேரும் கொந்தளித்துள்ளனர்.
கூட்டணி தொடர்கிறதா? இல்லையா?
மறைந்த தலைவர் ஜெயலலிதா பற்றி விமர்சனம் செய்துள்ள அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த 3 வருடங்களாக அண்ணாமலையின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்தின் படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. கூட்டணி தொடர்கிறதா? இல்லையா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டியது அமித்ஷாவும், ஜெ.பி.நட்டாவும் தான்.
தமிழ்நாட்டில் பாஜக 4 சீட் ஜெயித்தற்கு அதிமுகதான் காரணம்!
அதிமுக கூட்டணியில் இருக்கும்போது தான் பாஜகவுக்கு அடையாளமே இருக்கும். தமிழ்நாட்டில் பாஜக 4 சீட் ஜெயித்தற்கு அதிமுகதான் காரணம். தேர்தல் பொறுப்பாளராக கர்நாடகாவுக்கு அண்ணாமலை சென்றார்; இவரது ராசியால் ஒன்னும் இல்லாமல் போய்விட்டது. ஊழல் குறித்து பேசும் அண்ணாமலை, கர்நாடக பாஜக அரசின் 40% கமிஷன் ஊழல் குறித்து பேச வேண்டியது தானே? பேசாதது ஏன்?
இவ்வாறு ஜெயக்குமார் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.