காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாயை கர்நாடக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாலும், கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுப்பதால் மீண்டும் மேகதாது விவகாரம் சூடு பிடித்துள்ளது.
பல ஆண்டுகளாகவே கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசுகளிடையே அடிக்கடி அனலை கிளப்பும் விவாதமாக மேகதாது அணை விவகாரம் உள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா, தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீடு குறித்த இறுதி தீர்ப்பு வெளியாகிவிட்டது. ஆனால், இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டபடி உரிய நீர்ப்பங்கீட்டை கர்நாடகம் வழங்குவதில்லை என்பது தமிழக அரசின் தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த சூழலில் மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் காவிரியே பாலைவனமாக மாறும் என்பது தமிழ்நாடு விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது, தமிழக அரசும் இந்த விவகாரத்தில் உறுதியாக உள்ளது. இத்தகைய நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த விவகாரம் மீண்டும் இருமாநிலங்களிலும் கடுமையாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
மேகதாது விவகாரத்தின் முக்கிய அப்டேட்ஸ் இதோ…
தமிழ்நாடு - கர்நாடகா இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டால் மட்டுமே அனுமதி:
மேகதாது அணை திட்டம் எந்த அளவில் இருக்கிறது என கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே, "மத்திய அரசுக்கு கிடைக்கப் பெற்ற சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில், மேகதாது அணை கட்டப்பட்டால் மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும் என்றும் அதில் 2,925.5 ஹெக்டேர் நிலம், காவிரி வன உயிரி சரணாலயமும், 1,869.50 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் ஆகும். அதேபோல் சங்கமா, கொங்கிட்டோடி, மடவாளா, முத்ததி, பொம்மசந்தரா உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கும்" எனக் கூறினார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுசூழல் அனுமதி வழங்க முடியும் என நிபுணர் மதிப்பீட்டு குழு தெரிவித்துள்ளதாக கூறினார். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேகதாது அணையின் உத்தேச திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னரே குறிப்பு விதிமுறைகளுக்கான முன்மொழிவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார்.
மேகதாது அணைக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய கர்நாடகம் – தமிழக அரசு கண்டனம்:
கர்நாடக மாநிலத்தில் 2022 -23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேகதாது திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
மேகதாதுவில் அணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்காக ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேகதாது அணை கட்டும் பிரச்சினை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதே இம்மாதிரி அறிவித்துள்ளது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது.
05.02.2007 அன்று நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும் 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும் மதிக்காமல் தன்னிச்சையாக காவிரி பன்மாநில நதியின் குறுக்கே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும் எந்தவித ஒப்புதலும் பெறாமலும் மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது.
இந்த அறிவிப்பு வரும் கர்நாடக அரசின் சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாக தோன்றுகிறது. எப்படி இருப்பினும், தமிழக அரசு, தமிழக விவசாயிகளின் நலன் கருதி கர்நாடக அரசின் மேகதாதுவில் அணைகட்டும் முயற்சியை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்" என்று தெரிவித்தார்
மேகதாதுவில் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம்:
கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மேகதாது திட்டம் குறித்து பேசினார். அதற்கு பதிலளித்து பேசிய முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, “ மேகதாது திட்ட அறிக்கை கடந்த 2019-ம் ஆண்டு தான் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அது தற்போது காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது. மேலும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் தேவைப்படுகிறது. அத்துடன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
சுற்றுச்சூழல் துறை மற்றும் காவிரி நிர்வாக ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும் திட்ட பணிகள் தொடங்கப்படும். மேகதாது குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டம் இந்த வாரமே கூட்டப்படும். அதில் சட்ட நிபுணர் குழுவும் கலந்து கொள்கிறது. இதில் மேகதாது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படும். ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும். நாம் அனைவரும் சேர்ந்து முடிவு எடுப்போம்” என்று கூறினார்.
மேகதாது அணைக்கு ஒரு செங்கல்லைகூட வைக்க அனுமதிக்கமாட்டோம் – தமிழக அரசு உறுதி
மேகதாது விவகாரத்தில் தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி நிலைமைக்கேற்ப பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவது என்பது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை தடுக்கும் முயற்சி என்று கூறிய அவர், கர்நாடக அரசின் இந்த முயற்சி தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும் எனவும், கர்நாடக அரசின் இந்த முயற்சி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவது எனவும் தெரிவித்துள்ளார்
மேலும், மேகதாது திட்டத்திற்காக ஒரு செங்கல்லைக்கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும், மேகதாது திட்டத்தை தடுக்க சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
மேகதாது அணை: தீவிரம் காட்டும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம்
அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் அனைத்து கட்சிகளுமே மேகதாது விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் பாதயாத்திரை நடத்தியது. மேலும், கர்நாடகம், தமிழகம் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே அனுமதி என்ற மத்திய நீர்வளத் துறை அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், காவிரி விவகாரத்தை தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறது என குறை கூறியும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்
இதுபோலவே, மேகதாது அணை விவகாரத்தை இருமாநில பிரச்னை என மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது என முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா போலவே தமிழகத்திலும் பாஜக உட்பட அனைத்து கட்சிகளுமே மேகதாது அணை கட்டப்பட அனுமதி வழங்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளன.