சிறப்புக் களம்

அப்போது 'லவ் ஜிஹாத்'... இப்போது 'லேண்ட் ஜிஹாத்'... - இது பாஜகவின் புதிய தேர்தல் ஆயுதமா?

அப்போது 'லவ் ஜிஹாத்'... இப்போது 'லேண்ட் ஜிஹாத்'... - இது பாஜகவின் புதிய தேர்தல் ஆயுதமா?

webteam

மாற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்வதைத் தடைச் செய்யும் 'லவ் ஜிஹாத்' தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது போல நிலம் தொடர்பான 'லேண்ட் ஜிஹாத்' தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் 'நில ஜிஹாத்' குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

தற்போது நடைபெற்று வரும் அசாம் மாநில தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அதன்படி, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமித் ஷா 'அசாம் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் நில ஜிஹாத் தடைச் சட்டம் கொண்டுவரப்படும்" என்று கூறினார். இது, தேர்தல் வாக்குறுதியாகவும் அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.

இதுவரை கேட்கப்படாத வார்த்தையாக இருக்கவே, இது தொடர்பான தகவல்களை திரட்ட தொடங்கியபோது, அசாம் மாநிலத்தில் முறைகேடாக வந்து குடியேறும் வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாட்டினர் சட்டவிரோதமாக குடியேறிப்பின்னர், அவர்கள் நிலங்களை வாங்க தடை செய்வதுதான் இந்த திட்டத்தின் அம்சம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

'அசாம் மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், உள்ளூர் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். அவர்களது கால்நடைகளை அபகரித்துக் கொண்டு, அவர்களுக்கு கடும் மன உளைச்சலை கொடுக்கின்றனர். நிலங்களை மிரட்டி எழுதி வாங்குகின்றனர். இதில் ஏராளமான இடைத்தரகர்களும் சம்பந்தப்பட்ட இருக்கின்றனர். இதனால், உள்ளூர் மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவதை தடுக்கவே இந்த நில ஜிஹாத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது' என்று பாரதிய ஜனதா கட்சியின் அசாம் மாநிலத் தலைவர்கள் சிலர் விளக்கம் அளிக்கின்றனர்.

ஆனால், இது கட்டாயம் இன ரீதியான பாகுபாட்டை ஊக்குவிக்கும் திட்டமாகவே அமையும் என அரசியல் நோக்கர்கள் கருத்து கூறுகின்றனர். குறிப்பாக, அசாம் பழங்குடியினர் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேறி பல ஆண்டுகளாக இந்தியாவில் குடியிருந்து வரும் லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர் தொடர்ந்து நிலங்களை வாங்க முடியாத சூழலை ஏற்படுத்தி, பெரும் குழப்பத்தை ஆழ்த்திவிடும் எனவும் கருத்து கூறுகின்றனர்.

இந்த நில ஜிஹாத் தடுப்புச் சட்டம் தொடர்பாக கருத்து கூறியுள்ள அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் போப்பேட்டா சர்மா, "ஏற்கெனவே தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை கொண்டுவந்து அசாம் மாநிலத்தை நிம்மதி இழந்த மாநிலமாக மாற்றி உள்ள மத்திய அரசு, இப்போது நில ஜிஹாத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் மக்களை மேலும் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து, அசாம் மாநிலத்தில் நிரந்தர அமைதியின்மையை கொண்டுவர முயற்சி செய்கிறது" என்று கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

"சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்து, ஐந்து வருடங்கள் ஆகியும் அதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத பாரதிய ஜனதா கட்சியினர், தேர்தல் ஆதாயத்திற்காக இத்தகைய விஷயங்களை கையில் எடுக்கிறார்கள்" என்று ரஜோர் தள் உள்ளிட்ட அசாம் மாநிலத்தின் உள்ளூர் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர் பத்ருதின் அஜ்மல் சட்டவரோத குடியேற்றங்களை ஊக்குவிக்கிறார். நில ஜிஹாத்தில் ஈடுபட்டு வரும் இத்தகைய இஸ்லாமிய தலைவர்களின் திட்டங்கள் முறியடிக்கப்படும்" என்றும் பேசியிருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் இப்படி நேரடியாக குற்றம்சாட்டியது, இஸ்லாமியர்கள் அசாம் மாநிலத்தில் நிலம் வாங்குவதை தடுப்பதற்காகத்தான் நில ஜிஹாத் தடுப்புச் சட்டம் என்பதை கொண்டுவர நினைக்கிறார் என்றும், தேசிய குடியுரிமை திருத்தச்சட்டம் போல இதுவும் முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது என்றும் மாநிலத்திலுள்ள சிறுபான்மை அமைப்புகள் போர்க்கொடி தூக்க துவங்கியுள்ளன.

பாரதிய ஜனதா கட்சியின் இந்தப் புதிய திட்டம் ஏற்கெனவே பெரும் பிரச்சினையை சந்தித்து வரும் அசாம் மாநில சட்டம் - ஒழுங்குக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

- நிரஞ்சன்