சிறப்புக் களம்

“எங்களைவிட இளைஞர்கள் தீவிர பெரியாரிஸ்டாக இருக்கிறார்கள்” - வழக்கறிஞர் அருள்மொழி பேட்டி

“எங்களைவிட இளைஞர்கள் தீவிர பெரியாரிஸ்டாக இருக்கிறார்கள்” - வழக்கறிஞர் அருள்மொழி பேட்டி

கலிலுல்லா

நாடு முழுவதும் பெரியாரின் 143-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை, 'சமூக நீதி' நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், வழக்கறிஞரும், திராவிட கழக செயற்பாட்டாளருமான அருள்மொழியிடம் பேசினோம்.

பெரியார் இன்றைக்கும் ஏன் தேவைப்படுகிறார்?

ஒருவர் எங்கே பிறந்தார், அவருடைய நம்பிக்கைகள் என்ன? இதையெல்லாம் மறந்து அவரை மனிதராக பார்க்கும் வரை பெரியார் தேவைப்படுவார். எங்கேயோ பிறந்து வளர்ந்து, ஓரிடத்தில் வேலைபார்க்கும்போது, அவரை நோக்கி, 'உங்க வீடு எங்க இருக்கு?’ என மற்றொருவர் கேள்வி கேட்கும்போது, ஒருவரால் எங்கள் வீடு இந்த தெருவில் இருக்கிறது என சொல்லமுடிகிறது. மற்றொருவருக்கு அதை சொல்ல தயக்கமாக இருக்கிறது. சம்பந்தப்பட்டவர் தன்னுடைய தெருவை சொன்னபிறகு எதிரிலிருப்பவரின் பார்வை மாறுகிறது. இந்த எண்ணம் மனதிலிருந்து நீங்கும் வரை பெரியாரின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கும்.

அதேபோல, பெண்களின் அடிப்படை உரிமைகளான சாப்பிடுவது, தூங்குவது, அவர்களின் உடல், உணர்வுகளை இன்றுவரை இந்த பொதுசமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதற்கெடுத்தாலும் எதையாவது ஒன்றை சொல்லிக்கொண்டேயிருப்பது. உதாரணமாக, களைப்பாக இருந்து மாலைவேளையில் ஒரு ஆண் தூங்குகிறார் என்றால், 'பாவம் என்ன களைப்பு' என பேசும் இதே சமூகம் தான், ஒரு பெண் தூங்கினால், 'என்னதான் இருந்தாலும் ஒரு பொண்ணு இப்படி தூங்குறதா? குடும்பம் எப்படி உருப்படும்?' என தூற்றுவது. ஒரு ஆண் சும்மா தூங்கினாலும், 'பாவம் என்ன வேலை செஞ்சாரோ இவ்ளோ டயர்டா தூங்குறாரு' என்கிற சமூகம், உடல் உழைப்பால் அசதி மிகுதியின் காரணமாக உண்மையாகவே ஒரு பெண் தூங்கினாலும் 'அசதியிருந்தாலும் நீ தூங்க கூடாது. ஏனென்றால் நீ ஒரு பெண்' என கூறும் இந்த பாகுபாடு ஒழியும் வரை பெரியார் தேவைப்படுவார்.

மற்றொன்று, அறிவியல் வளர்ச்சியை மதரீதியாக பயன்படுத்தும் பாங்கு. கம்யூட்டர் பயன்படுத்தி ஜாதகம் பார்ப்பது, தன்னுடைய அறிவை கெடுத்துக்கொள்ளும் போக்கு நிலவுகிறது. இதில் அறிவியல் கருவி இருக்கிறது; ஆனால், அறிவியல் மனப்பான்மை இல்லை. சந்திரன், சூரியனை கோள்களாக புரிந்துகொள்வது அறிவியல். ஆனால், இதை வைத்து கதை சொல்வது மதம். இது இரண்டையும் பிரித்து புரிந்துகொள்வது தான் அறிவியல் மனப்பான்மை. அது தான் பகுத்தறிவியின் அடிப்படை.

அனைத்து மதங்களிலும் கதைகள் இருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் அவர்கள் கற்பனைக்கு ஏற்றமாதிரி எழுதப்பட்டவை அந்த கதைகள். இன்றைக்கு அதை புரிந்துகொள்ளலாம்; பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. பழமை என்ற காரணத்தினால், இன்றைய காலத்திற்கு பொருந்தாத ஒன்றை அப்படியே பின்பற்றுவது என்பதிலிருந்து விலகி காலத்திற்கு ஏற்று தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் பழைமையில் எது சிறந்ததோ, நம் அறிவுக்கு சரி என்று தோன்றும் விஷயத்தை எடுத்துக்கொண்டு இரண்டையும் இணைத்து வாழவேண்டிய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பெரியார் தேவைப்படுகிறார்.

இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நண்பராக பெரியார் இருக்கிறார். 'பக்தி என்பது தனிச்சொத்து, பக்கத்து வீட்டுக்காரருக்கு பக்தி இருக்கிறதா இல்லையா என்பது குறித்து நீங்கள் பயப்படவேண்டியதில்லை. அவர்களுக்கு பக்தி இல்லை என்றால் உங்களுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை. ஆனால், அவர்கள் ஒழுக்கமில்லாதவராக இருந்துவிட்டால் நீங்கள் நிம்மதியாக இருக்க முடியுமா? நீங்கள் பாதுகாப்பாக வாழ ஒழுக்கம் தேவை. மற்றவர்களைப்போல தாமும் அதை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் எல்லாரும் நலமாக இருக்க முடியும். இதை இன்றைய இளைஞர்களுக்கு புரியும்படி சொன்னவர் பெரியார். அதனால்தான் பெரியவர்களைவிட, இன்றைய இளைஞர்கள் பெரியாரை படிக்கிறார்கள். அப்படிப்பார்த்தால் பெரியாரின் தேவை வரும்காலத்துக்கும் இருக்கிறது.


இன்றைய இளைய சமூகத்திடம் திராவிட இயக்கம் முழுமையாக பெரியாரைக்கொண்டு போய் சேர்த்திருக்கிறதா? காரணம், இன்றைய இளைஞர்கள் தமிழ்தேசியத்தால் எளிதில் கவரப்பட்டுவிடுகிறார்கள். இதனால் திராவிடத்தையும், பெரியாரையும் தள்ளிவைக்கும் போக்கு நிலவுகிறதே?

ஒருவகையில் இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கமுடியாது. கடந்த 10 ஆண்டுகளில் இது தொடர்பான விவாதங்கள் சூடுபிடித்துள்ளதை பார்க்க முடிகிறது. 1930ல் பெரியார் பேசியதும் எழுதியதும் இன்றும் பிரமிப்பாக இருக்கிறது. தமிழ்தேசியம் குறித்து பேசும் இளைஞர்கள் வரலாற்றை படித்துப்பார்க்க வேண்டும். மெட்ராஸ் மாகாணத்தை, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தவர் சங்கரலிங்கனார். அவர் ஒரு காங்கிரஸ்காரர். அவர், அன்றைய முதல்வராகவும், காங்கிரஸ்காரராகவும், தமிழராகவும் இருந்த காமராஜரிடம் தன்னுடைய கோரிக்கையை முன்வைத்தார். இவர்கள் கூறும் தமிழ்தேசிய கருத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, உண்ணாவிரதம் இருந்தவரும் சரி, பெயர் சூட்ட மறுத்தவரும் சரி, இரண்டுபேருமே பச்சைத்தமிழர்கள். ஆனால், இவர்கள் யார் மீது சாதி, மொழி சாயம் பூசுகிறார்களோ அந்த பேரறிஞர் அண்ணா முதல்வரானவுடன் முதல் வேலையாக தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார். அதுக்கு உந்து சக்தியாக இருந்தவர் பெரியார். 1950க்கு முன்பே தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கையை முன்வைத்தவர் பெரியார்.

உடனே இவர்கள், தமிழ்நாடு என்ற பெயர் தொல்காப்பியத்தில் இருக்கிறது. நீங்களா கொண்டுவந்தீர்கள் என்கின்றனர். தொல்காப்பியம் மட்டுமல்ல; அனைத்து இலக்கியங்களிலும் தமிழ்நாடு பெயர் இருக்கிறது. ஆனால் நாம் ஏன் அதை இழந்தோம்?. அப்படிபார்க்கும்போது, தமிழர்களாக நீங்கள் அடையாளம் காணுபவர்களால் ஏன் மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை. இந்த வரலாறு மறக்கடிக்கப்பட்டுள்ளது. இதை சில ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருந்தால், இளைஞர்களுக்கு உண்மை புரிந்திருக்கும். அதனால், இன்னும் தீவிரமான பிரசாரம் தேவைப்படுகிறது. அதேசமயம் இந்த வெறுப்பு பிரசாரத்தின் வாயிலாக இளைஞர்கள் பெரியாரை தேடிப்படிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் விளைவாக அவர்கள் எங்களைவிட தீவிர பெரியாரிஸ்டாக இருக்கிறார்கள். எதிர்ப்பும், வெறுப்பும் பரப்பப்படும்போது, பெரியார் அதிகமாக படிக்கப்படுவார். இந்த விமர்சனங்களும் கூட பெரியாரை பலரும் புரிந்துகொள்ள உதவும். இதை இப்படித்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


பெரியாரை மக்களிடம் பரவலாக கொண்டு போய் சேர்க்க ஆட்சியிலிருக்கும் திமுக என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

திமுக சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. வெறுப்பு பிரசாரத்தையும், மக்களுக்கு எதிராக திட்டங்களை மத்திய பாஜக அரசு அவர்களின் கொள்கையை செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, மக்களுக்கு தேவையானதை, கொள்கை அடிப்படையில் மனிதநேயத்துடன் அரசு செயல்படுத்த வேண்டும். அதற்கான பணியை திமுக சரியாக செய்துவருகிறது. அதனுடைய அடையாளம் தான் இன்றை தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்திருப்பது'' என்றார். 

-கலிலுல்லா