சிறப்புக் களம்

அதிமுக எம்பிக்கள் என்ன பண்றாங்க தெரியுமா ?

rajakannan

தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு அதிகமான எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உண்டு. அவர்கள் நினைத்தால் அவையையே ஸ்தம்பிக்க வைத்து மிகப்பெரிய கவனத்தை தமிழகத்தின் பக்கம் திருப்ப முடியும். ஆனால் அவையெல்லாம் நடக்கிறதா ? யாரவது தமிழகம் சார்ந்த பிரச்னைகளில் பேசுகிறார்களா ? கட்சியில் இல்லாத சசிகலா புஷ்பா கூட ஏதாவது ஒன்றை கேட்டு, போனதுக்கு சில விஷயங்களை முயற்சி பண்றாங்க என சொல்ல வைக்கிறது அதிமுக எம்.பிக்களின் கனத்த மௌனம்.  

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பின் தரப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட தொகை கொடுக்கவில்லை என கூறி கடந்த 2 நாட்களாக நாடாளுமன்றத்தை அமளி துமளி ஆக்கினர் தெலுங்கு தேசம் எம்பிக்கள். இவ்வளவுக்கும் மத்திய அரசில் கூட்டணியில் இருப்பவர்கள் அவர்கள். அவர்களது கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக கூட இருக்கிறார்கள்.  

சரி நம்ம எம்பிக்களோட கதைக்கு வருவோம். தமிழகத்தில் 7 மாவட்டங்கள் வழியாக ஏறக்குறைய 300 கிமீ  விளைநிலங்களிலும், முக்கிய வழித்தடங்களிலும் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க திட்டமிட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க, திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தில் விவசாயிகள் பக்கம் நின்றார். கெயில் நிறுவனம் வழக்கு தொடர, உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்டாலும், விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக திட்டம் செயல்படுத்தப்படுவதில் தாமதம் ஏறபட்டுள்ளது.  

அதிமுகவை சேர்ந்த 2 எம்பிக்கள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் கெயில் தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தனர். விவசாயிகளும் பொதுமக்களும் தொடர்ந்து எதிர்த்து வருகிற கெயில் குறித்துதான் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் போல என ஆர்வமோடு பார்த்தோம். அதிமுக எம்பி கோகுல கிருஷ்ணன் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். அதுல ஆமா, இந்த கெயில் கம்பெனிய இரண்டா பிரிக்கிறீங்களாமே? கேஸ் உற்பத்தி பண்ணிகிட்டு, குழாயும் பதிச்சா ரொம்ப சிக்கலா இருக்கோனு கேட்டிருக்கிறார்.  

இவர் கூட பராவயில்லை, இன்னொரு எம்பி செல்வராஜ் என்ன பண்ணியிருக்கார் தெரியுமா ? இந்த கெயில் கம்பெனிய வாங்குறதுக்கு பாரத் பெட்ரோலியமும், இந்தியன் ஆயிலும் போட்டி போட்றாங்களாமே, உண்மையா ? அப்படி விக்கிறதா இருந்தா ஓ.என்.ஜி.சி கிட்ட தர்றது சரிய இருக்கும் இல்லையா ? மத்திய அரசோட கருத்தென்ன ? அப்படினு கேட்டிருக்கார்.  

ஒகின்னு ஒருபுயல் வந்து அடிச்சதுல 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பல , நிவாரணம் எம்புட்டு தரலாம்னு ஆய்வு பண்ண குழு அறிக்கை என்னாச்சு, மாநில அரசாங்கம் கேட்ட பணம் என்னாச்சு ? இதெல்லாம் மக்கள் பிரச்னை இல்லையா ? நெடுவாசல் ,கதிராமங்கலம் பகுதிகளில் ஓ.என்.சி.ஜி குழாய்கள் எப்போது வெடிக்கும் என தெரியாமல் பதை பதைப்பில் மக்கள் இருக்கிறார்கள். அது மக்கள் பிரச்னை இல்லையா ? தமிழகம் முழுக்க உள்ள கோயில்களில் சிலை திருட்டு நடக்கிறது , அவற்றை மீட்டு பாரம்பரியத்தை காக்க முனைய மத்திய அரசை உந்துவது பொறுப்பாகாதா ? மத்திய பட்ஜெட்டில் கர்நாடகா எதையெல்லாமோ சிறப்பு ஒதுக்கீடாக பெறும் போது , குறைந்த பட்சம் மூடப்பட்ட நோக்கியா ஆலையை திறக்கம் செய்யும் பணிகள் குறித்தாவது கேட்டிருக்கலாம்.