சிறப்புக் களம்

நடிகர், பன்முக கலைஞர், அரசியல்வாதி.. – கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று.!

நடிகர், பன்முக கலைஞர், அரசியல்வாதி.. – கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று.!

Veeramani

நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என சினிமாவில் 60 ஆண்டுகளாக பன்முகக்கலைஞராக வெற்றிவாகைசூடி தற்போது அரசியலிலும் களம் கண்டுள்ள கமல்ஹாசனின் பிறந்த நாள் இன்று.

1954 ஆம் ஆண்டு நவம்பர் 7இல் பிறந்து, 1960 ஆம் ஆண்டில்  “களத்தூர் கண்ணம்மா” என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகியவர் கமல்ஹாசன், தனது முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினையும் பெற்றார். அதன்பின்னர் பாலச்சந்தரின் இயக்கத்தில் “அரங்கேற்றம்” படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார் இவர். அப்போது தொடங்கி இப்போது வரை 60 ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் தவிர்க்கவே முடியாத பெயர் கமல்தான்.

வெற்றிகள், தோல்விகள், தடைகள், இழப்புகள் என எல்லாவற்றையும் தாண்டி இன்றும் தன்னம்பிக்கையுடன் நடைபோட்டுவரும் நபர் கமல்ஹாசன். சினிமாவில் இவர் ஏற்று நடிக்காத கதாப்பாத்திரங்களே இல்லை எனலாம். அதுபோல சினிமாவில் இவர் தொடாத துறைகளே இல்லை என்றும் சொல்லலாம். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதைஆசிரியர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என இந்த பட்டியல் இன்னும்கூட நீளமானது.

கதாநாயகனாக இவர்  1983 ஆம் ஆண்டு ’மூன்றாம்பிறை’ படத்திற்காக தேசிய விருது பெற்றார், பின்னர் ‘நாயகன்’,‘இந்தியன்’ ஆகிய படங்களுக்காகவும் தேசிய விருது வாங்கினார். இவரது ‘தேவர்மகன்’ படம் சிறந்த மாநில மொழி படத்திற்கான தேசிய விருதை வென்றது. மேலும் 10 தமிழக அரசின் விருதுகள், ஆந்திர அரசின் விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், கேரள அரசின் விருது, பத்ம ஸ்ரீ, பத்மபூசன், கலைமாமணி, கவுரவ டாக்டர் பட்டம், செவாலியே என இவரது விருதுகள் பட்டியல் மிகப்பெரியது.

உலகத் தொழில்நுட்பங்களை எல்லாம் தமிழகத்தில் முதல் ஆளாக திரைப்படங்களில் புகுத்துபவர் கமல்தான், தமிழ்சினிமாவில் உலகத்தரம் என்ற வார்த்தையை அறிமுகம் செய்துவைத்த “உலகநாயகன்” இவர்தான்.

சினிமாவில் ஆர்ட் பிலிம், கமர்சியல் பிலிம் என இரண்டுபக்கமும் சமமாக வெற்றிவாகை சூடிய பெருமை இவருக்கு உண்டு. சினிமா தாண்டியும் அவ்வப்போது நடக்கும் சமூக பிரச்சினைகளுக்கு குரல்கொடுத்துவந்த கமல், 2018 ஆம் ஆண்டில் அரசியல்வாதியாகவும் பரிணமித்தார். இவரது மக்கள் நீதி மய்யம், தான் சந்தித்த முதல் 2019 பாராளுமன்ற தேர்தலிலிலேயே 3.77 சதவீத வாக்குகளை பெற்று கவனிக்கத்தக்க அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.

சினிமாவில் உச்சம் தொட்ட நாயகனான கமல், இம்முறை அரசியலை கையில் எடுத்துள்ளார், இவர் தன்னை 2021 சட்டமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துள்ளார். நிச்சயமாக இந்த பிறந்தநாள் கமல்ஹாசனுக்கு புதிய அனுபவங்களை பெற்றுத்தரும் என்பதில் ஆச்சர்யமில்லை.