(கோப்பு புகைப்படம்)
சென்னையின் முக்கிய போக்குவரத்து மூலமாக மாநகரப் பேருந்துகள் உள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாநகர பேருந்து விபத்துகளில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளுக்கான காரணங்கள் என்ன? விபத்துகளை குறைக்க என்ன செய்யலாம்?
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாநகர பேருந்து சேவை முக்கியமானதாக இருக்கிறது. இதில் ஒரு நாளைக்கு 3 ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 35 லட்சம் பயணிகள் வரை பயணம் செய்யும் நிலை இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் பயண சேவை முக்கியமானதாக இருக்கிறது. அதேபோல் அவ்வப்போது மாநகர பேருந்துகளால் ஏற்படும் விபத்து மக்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக கடந்த 1 மாதத்தில் மட்டும் 10 இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்து இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
1. கடந்த மாதம் 6 ம் தேதி 588 வழித்தட பேருந்து மோதி ஒருவர் மரணம்.
2. கடந்த மாதம் 6 ம் தேதி 11 G பேருந்து மோதி நடைபாதையில் நடந்து சென்ற இளைஞர் மரணம்.
3. கடந்த மாதம் 8 ம் தேதி 70 V பேருந்து பெயர் பலகை மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு
4. கடந்த மாதம் 10 ம் தேதி பூந்தமல்லி வழித்தட எண் விபத்து ஏற்பட்டு இளைஞர் உயிரிழப்பு
5. கடந்த மாதம் 11 ம் தேதி E 18 மாநகர பேருந்து விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
6. கடந்த மாதம் 13 ம் தேதி 583 வழித்தட பேருந்து மோதி இளைஞர் பலி
7. கடந்த மாதம் 15 ம் தேதி 52 H பேருந்து மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவி உயிரிழப்பு
8. இந்த மாதம் 3 ம் தேதி 70 வழித் தட எண் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலி.
சென்னை நகரில் பெருகி வரும் வாகன போக்குவரத்து எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பேருந்துகளின் இயக்கத்தை மாற்றி அமைப்பது அவசியம் என்கின்றனர் போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர். இதுதொடர்பாக பேசிய சி.ஐ.டி.யூ போக்குவரத்து ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஆறுமுக நயினார், “அரசு பேருந்துகளை இயக்க முன்பே திட்டமிட்டதுபோல் தனி வழி அவசியம். சில பேருந்துகள் காலாவதியாகிவிட்டன. பேருந்து பராமரிப்புக்கு தனி கவனம் அவசியம்.” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழக விபத்து பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது விபத்துகள் தொடர்பாக ஆய்வு செய்வதாகவும், விபத்துகளை குறைக்க பணிமனை வாரியாக அறிவுறுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
- ராஜ்குமார்