சிறப்புக் களம்

நூறுநாள் வேலைத் திட்டம் விவசாயத்திற்கே ஆபத்தா?: சீமான் பேச்சும் உண்மை நிலவரமும்- ஓர் அலசல்

நூறுநாள் வேலைத் திட்டம் விவசாயத்திற்கே ஆபத்தா?: சீமான் பேச்சும் உண்மை நிலவரமும்- ஓர் அலசல்

Veeramani

விவசாயத்தை வாழ வைக்க வேண்டுமெனில் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ள கருத்துக்கு எழுந்துள்ள எதிர்வினைகள் பற்றிய பார்வை…

உள்ளாட்சித் தேர்தல் குறித்து, விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , நூறு நாள் வேலைத் திட்டத்தை விமர்சித்துப் பேசினார். இத்திட்டத்தின் மூலம் மனித உழைப்பு வீணடிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத் திட்டம் என்ற பெயரில், தேவையின்றி பலர் கூடி புரணி பேசுவது தான் நடக்கிறது என்றும் சீமான் கூறியுள்ளார். மேலும், "மனித ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தை ஈட்டுகின்ற நாடு எதுவோ அதுதான் வாழும், வளரும். மனிதனை உழைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டு, சோம்பி இருக்க வைத்து கூலி கொடுப்பதென்பது மிக ஆபத்தான போக்கு. வேளாண்மை செய்வதற்கு ஆட்களே வரவில்லை எனும்போது, வேளாண்மைக்கு என எதற்குத் தனி பட்ஜெட். அதனால் பயன் என்ன வரப்போகிறது?" எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே நூறு நாள் வேலைத் திட்டத்தைப் பற்றி மக்கள் நீதிமன்ற தலைவர் கமல்ஹாசன் விமர்சனம் செய்திருந்தார். சீமானின் விமர்சனத்தை மறுத்துப் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், நூறு நாள் வேலைத் திட்டம் என்பது பல லட்சம் ஏழை எளிய மக்களுக்கு அது வாழ்வாதாரமாக இருந்து வருவதாக கூறியுள்ளார். இன்னொரு பக்கம் திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில், 100 நாள் வேலை தொழிலாளர்களை விவசாயப் பணிக்குப் பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். நூறு நாள் வேலைத் திட்டத்துக்குத் தொழிலாளர்கள் சென்றுவிடுவதால் நாற்று நடவு செய்ய, களை எடுக்க வேலையாட்கள் கிடைப்பதில்லை எனவும், இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது எனவும் அவர்கள் குறை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீமானின் இந்த கருத்துக்கள் பல்வேறு தரப்பினரிடையே விவாதப் பொருளாகியிருக்கிறது.

100 நாள் வேலை திட்டம் தமிழக புள்ளி விவரங்கள்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்தில் 1 கோடி 33 லட்சத்து 60 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.  2018 – 19 மற்றும் 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் 50 லட்சம் பேர் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர், 2020 – 21 ஆம் ஆண்டி 66.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர், இதில் 69,250 பேர் மாற்றுத்திறனாளிகள். கொரோனாவால் பலர் வேலை இழந்திருக்கும் இந்த கால கட்டத்தில் நூறுநாள் வேலைத்திட்டத்தால் பயனடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவருகிறது. இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கான நிதியில் மத்திய அரசின் பங்கு 75 சதவீதம், மாநில அரசின் பங்கு 25 சதவீதம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது, இத்திட்டத்தின் ஊதியமாக ஒரு நாளைக்கு 273 ரூபாய் ஒதுக்குகிறார்கள், ஆனால் ஒரு நபருக்கு அவர்களின் வேலைத்திறன் அடிப்படையில் 220 முதல் 260 ரூபாய் வரை வழங்கப்படுவதாக தெரிகிறது.

நூறுநாள் திட்ட பயனாளிகளை விவசாய வேலைக்கு பயன்படுத்த வேண்டும்:

இது தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் மாணவரணி செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், “ ஏழை எளிய மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட கிடைக்கக்கூடாது, எனவே இத்திட்டத்தை ஒழிக்கவேண்டும் என நாங்கள் பேசவில்லை. மாறாக இத்திட்டத்தின் மூலமாக மனித ஆற்றலை உற்பத்திக்கு பயன்படுத்தாமல் சோம்பேறியாக்குகிறார்கள் என்றுதான் சொல்கிறோம்.  2014 – 15 ஆம் ஆண்டின் மத்திய தணிக்கைக்குழுவின் ஆண்டறிக்கையின் படி, இத்திட்டத்தினால் வேலைக்கு பயன் கிடைக்கவில்லை, வேலை செய்பவர்களுக்கே பயன் கிடைக்கிறது, அதுவும் முழுமையாக சென்று சேரவில்லை என்று கூறியுள்ளது, நீதியரசர் கிருபாகரனும் இக்கருத்தினை தெரிவித்திருக்கிறார். இன்றைய சூழலில் விவசாயம் நலிவடைந்து வருகிறது, விவசாய பணிகளுக்கு விவசாய தொழிலாளர்கள் கிடைக்காத காரணத்தால், உழவர்கள் விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நூறு நாள் வேலை திட்டத்தை விவசாயத்துடன் இணைத்து கேரளாவைப்போல விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். அதனை செய்யாமல் உழைப்பே இல்லாமல் ஊதியம் தருவதையே எதிர்க்கிறோம்.

இத்திட்டம் மூலம் தூர்வாருகிறோம் என சொல்கிறார்கள், ஆனால் இந்த திட்டத்தால் ஒரு பயனும் இல்லை. விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கும் சூழலில், விவசாயக்கூலித் தொழிலாளர்களை மடைமாற்றம் செய்து நூறு நாள் வேலைக்கு கொண்டு செல்வதையே எதிர்க்கிறோம். விவசாயக்கூலித்தொழிலாளர்களை விவசாயப்பணிகளுக்கு அனுப்பிவிட்டு, தூர்வாருதல், செப்பனிடுதல் போன்ற பணிகளுக்கு  இயந்திரங்களை பயன்படுத்தலாம். மற்றொரு பக்கம் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பல நூறு கோடிகளுக்கு பல்வேறு முறைகேடுகளும் நடந்து வருகிறது” என தெரிவித்தார்

இத்திட்டத்தால் விவசாயத் தொழிலாளர்களுக்கு பேரம் பேசும் உரிமை கிடைத்துள்ளது:

இது தொடர்பாக விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி கே.பக்கிரிசாமி பேசுகையில், “சீமான் தெரிவித்திருக்கும் இந்த கருத்துக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கொரோனா காலகட்டத்தில் நூறுநாள் வேலையும், இலவச அரிசியும் இல்லையென்றால் வடமாநிலங்களைப்போல மக்கள் இங்கும் பட்டினியில் உழன்றிருப்பார்கள், இது புரியாமல் சீமான் பேசுகிறார். விவசாயத்தில் ஒரு வருடத்துக்கு 20 முதல் 30 நாட்கள் கூட வேலை கிடைப்பதில்லை, எல்லாம் இயந்திரமயமாகிவிட்டது. அப்படியிருக்கையில் எப்படி மற்ற நாட்களை அவர்களால் கடத்த முடியும், அவர்கள் எப்படி குடும்பம் நடத்துவார்கள். இந்த திட்டம் வந்த பிறகுதான் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம், சுதந்திரம் கிடைத்துள்ளது. அதற்கு முன்பு நில உரிமையாளர்களின் பெண்கள் அடிமையாக இருந்தனர், இப்போது சொந்தக்காலில் நிற்கிறார்கள், இதற்கு காரணம் நூறுநாள் திட்டம்தான்.

நூறுநாள் வேலைத் திட்டம் மூலமாக விவசாயக்கூலிகளின் பேரம் பேசும் உரிமை கிடைத்துள்ளது. விவசாயிகளிடம் இவ்வளவு கூலி கொடுத்தால்தான் வேலைக்கு வருவேன் என்று இன்று விவசாயக்கூலித்தொழிலாளிகளில் பேரம் பேசும் உரிமை இத்திட்டம் மூலமாகவே கிடைத்தது. 100 நாள் வேலைத்திட்டத்தில் 86 சதவீதம் பெண்கள்தான் வேலைக்கு வருகிறார்கள், ஆண்களில் மற்ற வேலைக்கு செல்ல முடியாதவர்கள்தான் இந்த வேலைக்கு வருகிறார்கள். ஆண்களின் சம்பாத்தியம் எல்லாம் டாஸ்மாக்கிற்கு செல்லும் இன்றைய சூழலில், பெண்களின் 100 நாள் சம்பளம்தான் குடும்பத்தை காக்கிறது.

கிராம சபைக்கூட்டத்தில் என்ன வேலை செய்யவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையிலேயே பணிகள் நடைபெறுகிறது. ஒரு நபர் 32 அடி கன அடி அளவு வேலை செய்தால்தான் அவர்களுக்கு 273 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது, இதனை எல்லாம் அரசு அதிகாரிகள் முறையாக கண்காணிக்கிறார்கள், எனவே இத்திட்டத்தில் வேலை செய்யவில்லை, முறைகேடு நடக்கிறது என்பதில் உண்மையில்லை. விவசாயிகளுக்கு உரவிலை உள்ளிட்ட உற்பத்தி செலவு அதிகமாகியுள்ளது, எனவே அவர்களின் கோபம் நூறு நாள் சம்பளத்துக்கு இணையாக கூலி கேட்கும் விவசாய கூலித்தொழிலாளர்கள் மீது திரும்பியுள்ளது. விவசாயிகள் அவர்களின் கோரிக்கையை அரசிடம் வைக்கவேண்டும், விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைத்தால் அவர்களுக்கு விவசாய தொழிலாளிகள் கேட்கும் கூலி பெரிதாக தெரியாது, இதுதான் பிரச்னை” என தெரிவித்தார்.