இதயம் உடல் முழுவதுக்கும் ரத்தத்தை சீராக செலுத்துவதை நிறுத்தும் நிலையை இதயம் செயலிழத்தல் என்கிறோம். இது வயது, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் பலவீனமாதல் போன்றவற்றின் விளைவுகளால் ஏற்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இதய நோய்கள் இதயம் செயலிழத்தலுக்கு வழிவகுக்கிறது. சோர்வு, பலவீனம், இதய துடிப்பு அதிகரிப்பு, நெஞ்சு வலி மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பல்வேறு அறிகுறிகள் இதயம் செயலிழத்தலுக்கு கூறப்பட்டாலும், மற்றொரு முக்கியமான அறிகுறி குறித்து விளக்கியிருக்கிறது சமீபத்திய ஆய்வு. வயிற்றுடன் தொடர்புடைய இந்த அறிகுறி பெரும்பாலும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றாலும் இது ஒரு முக்கியமாக அறிகுறி என்கிறது அந்த ஆய்வு.
இதயம் செயலிழத்தலுக்கு என்னென்ன அறிகுறிகள் தென்படும்?
மாயோ க்ளினிக்கின் கூற்றுப்படி, வயிறு வீக்கம் இதயம் செயலிழத்தலின் ஆரம்பகட்ட அறிகுறி. இதுதவிர,
1. வயிறு வலி
2. குமட்டல்
3. பசியின்மை
4. திடீர் எடை அதிகரிப்பு
இதயம் செயலிழக்க தொடங்கும்போது வயிறு மற்றும் அதனை சுற்றிய உடல்பகுதிகளில் ரத்தம் தேங்குகிறது. இதனால் வயிற்றுப்பகுதி வீக்கமடைகிறது. இதனை ஒருவித அசௌகர்யம் என்று அழைக்கின்றனர். இது பெரும்பாலும் நெஞ்சுப்பகுதியில் ஆரம்பிக்கிறது. இதுபோன்ற நேரத்தில் மருத்துவரை அணுகி பரிசோதிப்பது அவசியம்.
இதய நோய்கள் எப்படி இதயம் செயலிழத்தலுக்கு வழிவகுக்கிறது?
தமனிகளில் கொழுப்பு சேர்வதால் ரத்த ஓட்டம் தடைபடுவது ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயத்தை பலவீனப்படுத்தி இதய நோய்களுக்கு வழிவகுக்கும். இதய நோய்களுக்கான பிற காரணிகள்:
1.நீரிழிவு
2. உயர் ரத்த சர்க்கரை அளவு
3. கட்டுப்படுத்தமுடியாத உயர் ரத்த அழுத்தம்
4. மோசமான கொழுப்பு அளவு
மோசமான வாழ்க்கைமுறையே பெரும்பாலான இதய பிரச்னைகளுக்கு காரணமாக அமைகிறது. கீழ்க்கண்ட சில எளிய வழிகளை பின்பற்றுவது சிறந்தது.
1. எடை குறைப்பு
2. உடற்பருமனுக்கு சிகிச்சை
3. ஆரோக்கியமான டயட்
4. ஆல்கஹால் மற்றும் புகையிலை தவிர்த்தல்
இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது வழிவழியாக குடும்பத்தாருக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தாலோ மருத்துவரை அணுகி ரத்த பரிசோதனை செய்து ஆரோக்கியம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில் சுவாச மண்டலத்தில் நீர் கோர்த்திருப்பதும் மார்பு பகுதியில் வலியை ஏற்படுத்தும் என்பதால் நுரையீரல் பரிசோதனை செய்வதும் அவசியம்.
இதையும் படிக்கலாம்: இடுப்பில் சேரும் ஒவ்வொரு இன்ச்சும் மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கும் - அதிர்ச்சி ரிப்போர்ட்