சிறப்புக் களம்

தொல்லியல் ஆய்வுகள் ஏன் தேவை? அதனால் என்ன பயன்? - ஒரு சிறப்புப் பார்வை

தொல்லியல் ஆய்வுகள் ஏன் தேவை? அதனால் என்ன பயன்? - ஒரு சிறப்புப் பார்வை

கலிலுல்லா

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொல்லியல் ஆய்வுகளால் என்ன பயன்? தொல்லியல் ஆய்வுகளுக்காக மத்திய, மாநில அரசுகள் செய்தது என்ன என்பது குறித்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் கண்ட, கண்ட இடங்களில் எல்லாம் தொல்பொருள் ஆய்வு நடப்பதாகவும், தொல் பொருள் ஆய்வு என்பது வெட்டிவேலை என்றும் மாதமிருமுறை வரும் தமிழ் இதழ் ஒன்றில் விமர்சனக்கட்டுரை வெளியாகி உள்ளது. தொல்பொருளாய்வு என்ற தண்டச்செலவு எதற்கு என்றும் காட்டமான வரிகளோடு வெளியான இந்த கட்டுரை பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் தொன்மையை, பண்பாட்டை, தமிழ் வளர்ச்சியை தமிழக அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழ்ப்பண்பாடு என்று சொன்னால் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பேசும் பேச்சு என்றும் அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு சமுதாயம் எவ்வாறு வாழ்ந்தது என்ற ஒப்பீடு தெரிந்தால்தான் எவ்வாறு வாழவேண்டும் என்ற இலக்கு தெரியும் என்று கூறிய அமைச்சர், 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாகரீக சமுதாயத்தை கொண்டிருந்தோம் என்பது பெருமை என்றும், அகழ்வாய்வுகளை பொறுத்தவரை, இலக்கியச்சான்றுகளை தாண்டி அறிவியல் பூர்வமாக நிறுவக்கூடிய சான்றுகள் கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார். திமுக அரசு தமிழின் வளர்ச்சியை தலையாய கடமையாக கொண்டிருக்கிறது என்று கூறிய அமைச்சர், நவீன தொழில்நுட்பம் வழியிலும், அகழாய்வு வழியிலும் தமிழின் மாட்சியை நிலை நிறுத்துவோம் என்றார்.

தொல்லியல் ஆய்வுகளுக்காக மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

மத்திய அரசு 2020 -2021 ஆண்டிற்கான பட்ஜெட்டில், இந்தியாவில் ஐந்து புதிய அகழாய்வு மையங்களை உருவாக்க பண்பாட்டு அமைச்சகத்திற்கு 3,150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. ஹரியானா மாநிலத்தின் ராகிகாரி, உத்திரப்பிரதேசத்தின் ஹஸ்தினாபூர், அசாம் மாநிலத்தின் ஷிவ்சாகர், குஜராத் மாநிலத்தின் டோலாவீரா மற்றும் தமிழிகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு மையங்களை உருவாக்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார்.

மேலும், இந்திய பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் எனும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தை உருவாக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக ஒரு அருங்காட்சியகம் அமைக்கவும், நான்கு அருங்காட்சியங்களை மறுசீரமைப்பு செய்யும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. அஹமதாபாத் அருகே, ஹரப்பா நகரத்தின் துறைமுகமான லோத்தல் பகுதியில் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் ஒரு கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கவும் திட்டம் அறிவிக்கப்பட்டது. 2021 -2022 ஆண்டிற்கான பட்ஜெட்டில், இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள 3000 வரலாற்று நினைவு சின்னங்களை பராமரிக்கும் பணிகளுக்கு 1,042.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டின் நிதி ஒதுக்கீட்டை விட 15 % குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், அருங்காட்சியகங்கள், பழைய ஓலைச்சுவடிகள், ஏடுகளை பராமரிக்கும் பணி ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி பாதியாக குறைக்கப்பட்டது. 2020 -2021 ஆம் ஆண்டு தமிழக மாநில அரசும் 31.93 கோடி ரூபாய் நிதியை தொல்லியல் துறைக்காக ஒதுக்கீடு செய்தது. முந்தைய ஆண்டு தொல்லியல் துறைக்காக தமிழக அரசு சுமார் 10 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.மேலும், சுமார் 12 கோடி ரூபாய் நிதி, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. தமிழக தொல்லியல் துறை, கோவாவில் உள்ள மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொள்ள முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது.

பூம்புகாரில் ஆழ்கடல் தொல்லியல் அகழ்வைப்பகம் ஒன்றும், 14 மாவட்ட அகழ்வைப்பகங்களும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. மேலும், தொல்லியல் நிறுவனம் சார்பாக 2020-2021-ஆம் ஆண்டு முதல் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் இரண்டாண்டு கால முதுநிலை பாடத்திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

தொல்லியல் ஆய்வுகளால் என்ன பயன்?

இது தொடர்பாக பேசிய எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், “உலகம் முழுவதுமே தொல்லியல் ஆய்வு நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த மனித பரிணாம் குறித்து உலகமே ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. அரபு, ஆஃப்ரிக்கா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் மனித இனம் தோன்றிய வரலாறைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு இனமும் எவ்வாறு தன் வரலாற்றை பெற்றிருக்கிறது என்பது தொடர்பான ஆய்வுகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது.

இச்சமூகம் எப்படி உருப்பெற்றது? எப்படி வாழ்ந்தது, எப்படி நிலைத்தது, என்ன மாதிரியான விழுமியங்கள் அவர்களிடம் இருந்தது என்பது தொடர்பாக 3ஆயிரம் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷயங்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. நான் யார் என்பது தொடர்பான கேள்விகளுக்கான பதிலாகத்தான் நான் இதை பார்க்கிறேன். என் மொழி எப்படி வந்தது என்கிற நம் வேர்களை தேடும் முக்கியமான வேலையை செய்வது தான் இந்த தொல்லியல் என நினைக்கிறேன். நமது சங்க இலக்கியம் தமிழர்களின் வாழ்வியலை முழுமையாக விவரிக்கிறது. ஆனால், இதுவரையிலும் நம்மை பார்த்து, `சங்க இலக்கியம் என்பது வெறும் புனைவு; நீங்கள் தமிழர்கள் வெறும் புனைவிலேயே வாழ்கிறீர்கள்; உண்மையல்ல’ என்று சொல்லப்பட்டது. இதன்மூலம் வாழ்வியல் தளம் அமைந்துள்ளது. சங்க இலக்கியதுக்கான ஆதாரம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.