21-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சாலையோரங்களில், திரையரங்க வாசல்களில், பேருந்து - ரயில் பயணங்களில் என சினிமா பாடல் புத்தகங்களின் விற்பனை படுஜோராக நடைபெற்று வந்தது. இதை பெரும்பாலானவர்கள் கவனித்திருக்கலாம். சிலர் ஆர்வம் கொண்டு அந்த புத்தகங்களை வாங்கி பாடல் வரிகளை பாடி இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது. நாலணா, ஐம்பது பைசா, ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் வரை அந்த புத்தகங்களை காசு கொடுத்து வாங்கி பாட்டு படித்த அனுபவங்களும் சிலருக்கு இருக்கலாம்.
அந்த புத்தகம் சாம்பல் நிறத்தில் உள்ள தாளில் கருப்பு மையில் அந்த புத்தகம் அச்சாகியிருக்கும். அதை கையில் பிடித்து பாட்டு படிப்பது தனி சுகம். கால ஓட்டத்தினாலும், தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் அது மறைந்துவிட்டது. இருந்தாலும் இன்றைய டிஜிட்டல் உலகிலும் மக்களிடையே பாட்டு படிக்கும் வழக்கம் அப்படியே குன்றாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. வீடியோ வடிவில் கரோக்கி துணைக்கொண்டு தங்கள் சொந்தக் குரலில் பாட்டு பாடி அதனை நண்பர்களுடன் பகிர நிறைய செயலிகள் இப்போது வந்துவிட்டன. இருந்தாலும் பழைய முறையில் பாடல்களை மட்டுமே வெறுமனே நமக்கு நாமே படித்து அதன் மூலம் கிடைக்கும் உற்சாகத்தை அனுபவிக்க உதவுகிறது ‘தமிழ் பாடல் வரிகள்’ (Tamil Song Lyrics) என்ற கைபேசி செயலி.
தமிழ் பாடல் வரிகள் செயலி!
>இந்த செயலியில் புதிய மற்றும் பழைய தமிழ் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் கிடைக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (Phonetic) பாடல் வரிகள் இதில் இடம் பெற்றுள்ளன. திரைக்கு வராத லேட்டஸ்ட் திரைப்படங்களின் பாடல்களும் இதில் கிடைக்கிறது. திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது ஆல்பம் பாடல்களும் இதில் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது.
>ஒவ்வொரு பாடலுக்கும் அந்த பாடலை பாடிய பாடகர், வரிகளை எழுதிய கவிஞர், மெட்டமைத்த இசையமைப்பாளர், திரைப்படத்தின் பெயர் குறித்த விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளது.
>அதே போல பாடல்களை ஆண்டு வாரியாக, திரைப்படத்தின் பெயர் வாரியாக, பாடலாசிரியர் வாரியாக, பாடல் வாரியாக தேடி எடுக்கும் சேர்ச் (Serach) ஆப்ஷன்களும் இந்த செயலியில் உள்ளது.
>1980-க்கு பிறகு வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பாடல்கள் இதில் அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது.
>பாரதியார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, புலமைப்பித்தன், யுகபாரதி, விவேக், அருண்ராஜா காமராஜ், அறிவு என பல பாடலாசிரியர்களின் பாடல் வரிகள் இதில் கிடைக்கின்றன.
>6.7MB அளவுள்ள இந்த செயலியை பிளே ஸ்டோரிலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த செயலியை டவுன்லோட் செய்துள்ளனர்.
அப்ளிகேஷன் லிங்க்: ஆண்ட்ராய்டு!
சென்ற அத்தியாயம்: 'ஆப்' இன்றி அமையா உலகு 24: மனித உரிமை மீறல்களை ஆதாரப்படுத்த உதவுகிறது EyeWitness to Atrocities செயலி