சிறப்புக் களம்

பயிற்சிக்கு ஷூ வாங்க சிரமப்பட்ட கமல்ப்ரீத் கவுர்... விடாமுயற்சியும் விஸ்வரூப வெற்றியும்.!

jagadeesh

ஜப்பான் தலைநர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று நம்பிக்கை நாயகியாக உருவாகியுள்ளார் கமல்ப்ரீத் கவுர்.

டோக்கியோவில் நேற்று நடைபெற்ற தகுதிச் சுற்றில் அதிகபட்சமாக 64 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் கமல்ப்ரீத் கவுர். இந்நிலையில் நாளை நடைபெறும் மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பை அதிகரித்து வைத்திருக்கிறார் அவர்.

25 வயதாகும் கமல்ப்ரீத் கவுர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை பூர்விகமாகக் கொண்டவர். வட்டு எறிதலில் தேசியளவில் பல்வேறு சாதனைகளை படைத்தவருக்கு இதுதான் முதல் ஒலிம்பிக். இந்தாண்டிலேயே தேசியளவில் நடைபெற்ற போட்டிகளில் இருமுறை 65 மீட்டர் தூரம் வட்டெறிந்துள்ளார். இதனால் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் நிச்சயம் கமல்ப்ரீத் பதக்கம் வெல்வார் என விளையாட்டு வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

கமல்ப்ரீத்தின் பள்ளி பருவக் காலங்களிலேயே அவருடைய திறனை உடற்கல்வி ஆசிரியர் கண்டுள்ளார். இதனையடுத்து அவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளார். 10-ஆம் வகுப்பு படிக்கும்போடு வட்டு எறிதலில் மாநில அளவிலான போட்டிகளில் முதல் முறை பங்கெடுத்தார். ஆனால் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை. ஆனாலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து உழைத்துள்ளார் கமல்ப்ரீத். அவரின் கடின உழைப்புதான் இப்போது அவரை உலகளவிலான போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளது.

கமல்ப்ரீத்தின் தந்தை குல்தீப் ஒரு விவசாயி. ஒரு கட்டத்தில் கமல்ப்ரீத்தின் பயிற்சிக்காக நிறைய செலவு செய்ய வேண்டி இருந்ததால். தன்னுடைய நிலத்தை ரூ.1 லட்சத்துக்கு விற்று மகளை தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளார் அவர். “தனியார் மையத்தில் பயிற்சி பெற வரும் அனைவரும் வட்டு எறிதல் பயிற்சிக்கு தேவையான உடை, காலணிகளை அணிந்திருந்தனர். ஆனால் கமல்ப்ரீத் சாதாரண கேன்வாஸ் ஷூவை அணிந்து பயிற்சி மேற்கொண்டார்” என அவரது தந்தை மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கமல்ப்ரீத் கவுர் ஜொலிக்க தொடங்கியவுடன், அவருக்கு ஸ்பான்ஸர்கள் கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது. இதனால் மேலும் ஊக்கமடைந்த கமல்ப்ரீத் தன்னுடைய பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளார். இதற்கு பலனாக மார்ச் மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் 65.06 மீட்டர் தூரத்துக்கு வட்டு எறிந்து புதிய சாதனையை நிகழ்த்தினார்.

பின்பு ஜூன் மாதம் நடைபெற்ற இந்திய கிராண்ட் பிக்ஸ் போட்டியில் 66.59 தூரம் வட்டு எறிந்து தன்னுடைய முந்சைய சாதனையை முறியடித்தார் கமல்ப்ரீத். இதனால் அவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கேயும் தகுதிச்சுற்றில் சிறப்பாக பங்கேற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இப்போது நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தன்னுடைய முந்தைய சாதனையை முறியடித்து, வட்டு எறிதலில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று பெருமை சேர்ப்பார் என்று நம்புவோம்.