சிறப்புக் களம்

சிப்பாய் கலகமா? இல்லை சிப்பாய் புரட்சியா? : வெடிக்கும் புதிய சர்ச்சை

சிப்பாய் கலகமா? இல்லை சிப்பாய் புரட்சியா? : வெடிக்கும் புதிய சர்ச்சை

webteam

ஜூலை 10 வேலூர் சிப்பாய் கலகம் நடந்தேறிய நாள். அதனையொட்டி இந்திய விடுதலைக்காக முதன்முதலில் வித்திட்ட சிப்பாய் புரட்சி நினைவு தூணில் உள்ள சிப்பாய் கலகம் என்ற சொல்லை மாற்றவும், அது இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் என்று மத்திய அரசு அறிவிக்கவும் வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் வேலூர் கோட்டையில் பணியாற்றிய இந்திய சிப்பாய்களுக்கு எதிராகவும், மத நம்பிக்கைகளிலும் ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் சீர்த்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு கொடுமைகளை கொடுத்து வந்தனர். அதாவது பசுந்தோல் மூலம் செய்யப்பட்ட பூட்ஸ் மற்றும் உடையை அணிய வேண்டும். பன்றிக் கொழுப்பை துப்பாக்கிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இது தவிர இந்துக்களின் மத அடையாளமான கடுக்கன் அணிவது, பட்டையிடுவது போன்றவற்றிற்கும் இசுலாமியர்களின் மத அடையாமான தாடி வளர்ப்பதை நீக்க வேண்டும், மொட்டை அடிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை வேலூர் கோட்டையில் இருந்த கர்னல் ஜான் பேஸ்கோர்ட் உத்தரவிட்டிருந்தார். 

இவரது நடவடிக்கை இந்தியச் சிப்பாய்கள் மத்தியில் ஆந்திரத்தை உண்டாக்கி இருந்தது. இத்தோடு இந்தியச் சிப்பாய்களுக்கு ஒரு ஊதியம், ஆங்கிலேயே சிப்பாய்களுக்கு ஒரு ஊதியம் என்ற முறையை நடைமுறைக்குக் கொண்டு வர உத்தரவு வந்தது. இவரது செய்கை இந்தியச் சிப்பாய்களிடையே மேலும்  கோபத்தை தூண்டியது.  இதனால் ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சி செய்ய இந்தியச் சிப்பாய்கள் முடிவு செய்து, வெற்றிலையில் புரட்சிக் குறித்த தகவலை எழுதி சக சிப்பாய்களுக்கு பரப்பினர். 

இந்தச் சமயத்தில் ஸ்ரீரங்கபட்டனத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வந்த திப்புசுல்தான் கொலை செய்யப்பட்ட பிறகு அவரின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். வேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் 7 வது மகள் நூருலிசா பேகத்திற்கு நிசாமுதினுடன் ஜூலை 10 திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை இந்தியச் சிப்பாய்கள் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து ஜூலை 10 தேதி 1806-ம் ஆண்டு அதிகாலை 2.00 மணிக்கு யாரையும் தலைமையாக கொள்ளாமல் 1000 இந்தியச் சிப்பாய்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு வேடமிட்டு அந்தத் திருமண நிகழ்வில் பங்கேற்பது போல் சென்று முதலாவதாக ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை கைபற்றி ஆங்கிலேயர்களை சுடத் தொடங்கினர். 

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் முதலாவதாக மத அடையாளங்களை அழிக்க உத்தரவிட கர்னல் ஜான் பேஸ்கோர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து 15 ஆங்கிலேயே அதிகாரிகள் உட்பட 177 ஆங்கியேயர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 66 பேர் பலத்தப் படுகாயம் அடைந்தனர். பின்னர் கோட்டையில் ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டு திப்புவின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இது அப்போதைய இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

பின்னர் வேலூர் கோட்டையில் சிப்பாய் புரட்சி நடப்பது குறித்த தகவல் ஆற்காட்டில் உள்ள படை தளபதி கில்லஸ்பி கிடைத்தது. அவர் பெரும் படையுடன் விரைந்து வேலூர் கோட்டைக்கு வருகிறார். அவரது படைகள் சுட்டத்தில் இந்திய சிப்பாய்கள் உட்பட பல கொல்லப்பட்டனர். யாருடைய தலைமையிலும் இல்லாமல் சுமார் 8 மணிநேரம் நடைபெற்ற இந்தியச் சிப்பாய்களின் புரட்சியின் முடிவில் 800 இந்திய சிப்பாய்கள் 3000 பொது மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 600 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவே இந்திய விடுதலைக்கான முதல் போராட்டமாக கருதப்படுகிறது. 

ஆனால் இந்திய அரசு 1857-ம் ஆண்டு மீரட்டில் நடந்த சிப்பாய் புரட்சியைதான் முதம் சுதந்திர போராட்டமாகவும் வேலூரில் நடைபெற்றதை சிப்பாய் கலகமாகவும் பதிவு செய்துள்ளது. வேலூர் சிப்பாய் புரட்சியின் நினைவாக 1998-ம் ஆண்டு வேலூர் மக்கான் பகுதியில் அன்றைய முதல்வர் கருணாநிதியால் வைக்கப்பட்ட நினைவு தூணில் கூட சிப்பாய் கலகம் என்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளனர். இந்திய அரசு வெளியிட்டுள்ள தபால் தலைகளில் கூட வேலூர் சிப்பாய் புரட்சியை கலகம் என்றும் மீரட் நிகழ்வை புரட்சி என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே அதனை மாற்ற வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளார்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். 

இது குறித்து ஓய்வு பெற்ற தனியார் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ரூபஸ் மாணிக்கதாஸ் கூறும் போது, “தென்னிந்தியாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்கள் போராட்டத்திற்கு பிறகு ஆங்கிலேயேரை எதிர்த்து போராடிய முதல் புரட்சி வேலூர் சிப்பாய் புரட்சி ஆகும். இது ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்ததால் அவர்கள் வைத்த பெயர்‘கலகம்’ என்பது. ஆனால் அது தவறானது. ஆகையால் முதல்கட்டமாக வேலூர் மக்கான் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சிப்பாய் புரட்சி நினைவு தூணில் உள்ள சிப்பாய் கலகம் என்ற சொல்லை மாற்றி சிப்பாய் புரட்சி என குறிப்பிட வேண்டும். அது வருங்கால தலைமுறையினர் வரலாற்றை மேலும் சரியாக புரிந்து கொள்ள உதவும்” என கூறினார்.

அதேபோல் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ராஜேந்திரன் கூறும் போது, “இந்தியா ஆங்கிலேயரிடத்தில் அடிமைபட்டு கிடந்த போது அவர்களிடமிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்ற எண்ணம் வேலூர் கோட்டையில் ஏற்பட்டது. இது வரலாற்றி சிறப்பு மிக்கது. ஆனால் இந்திய அரசு 1857-ம் ஆண்டு மீரட்டில் நடைபெற்ற சிப்பாய் புரட்சியைதான் முதல் சுதந்திர போராட்டம் என குறிப்பிடுகிறது. வேலூர் சிப்பாய் புரட்சியை குறிப்பிடபடவில்லை. வேலூர் வரலாற்றில் மறைக்கப்படுகிறது. எனவே இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு வேலூர் சிப்பாய் கலகம் என்ற வார்த்தையை மாற்றி இந்திய விடுதலைக்கு முதலில் வித்திட்ட சுதந்திர போர் என குறிப்பிட்டு மண்ணி பெருமையைக் காக்க வேண்டும். அதேபோல் சிப்பாய் புரட்சியின் 200-ம் ஆண்டு நினைவு 2006-ல் அனுசரிக்கப்பட்ட போது வேலூரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைப்பட்ட சிப்பாய்கள் நினைவு தூணில் சிப்பாய் கலகம் என்று உள்ளதை மாற்றி அதனை சிப்பாய் புரட்சி என சரியான சொல்லால் குறிக்க வேண்டும்”என்கிறார். 

அதேபோல் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் டாக்டர் சேகர் கூறும் போது, “இந்திய விடுதலைக்காக முதன்முதலில் வேலூர் கோட்டையில் நடைபெற்ற சிப்பாய் புரட்சியை இன்றளவும் அரசின் முக்கிய ஏடுகளில் கலகம் என்றே உள்ளது. கலகம் என்பது ஆங்கிலேயனால் குறிப்பிடப்பட்டது அதனை இந்திய சுதந்திரம் அடைந்த பிறகும் அழைப்பது தவறானது. சிப்பாய் கலகம் என்ற வார்த்தையை மாற்றி சிப்பாய் புரட்சி எனப் பதிய வேண்டும்” என்கிறார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ராஜய்யன் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் ஆனால் இது குறித்து தமிழக அரசோ, மத்திய அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்ட சேகர், வடமாநில வரலாற்று அறிஞர்கள் கூட இதை வரலாற்று பார்வையில் பார்க்கவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

இது ஏதோ வார்த்தை மாற்றம் மட்டுமே அல்ல; வரலாற்று மாற்றம். அதை உணர்ந்து அதிகாரிகள் செயல்படுவார்களா எனப் பார்ப்போம்?