சிறப்புக் களம்

மனைவியின் சொத்தை அனுபவிக்க மருத்துவர் கண்டறிந்த எம்பாமிங்: ஒரு நிஜக் கதை

மனைவியின் சொத்தை அனுபவிக்க மருத்துவர் கண்டறிந்த எம்பாமிங்: ஒரு நிஜக் கதை

தமிழகத்தில் எம்பாமிங் என்ற வார்த்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர்தான், பிரபலமானது. இப்போது
கடந்த சில நாள்களுக்கு முன்பு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலும் துபாயில் எம்பாமிங் செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது.
எம்பாமிங் என்றால் பிரேத சீரமைப்பு என்றே மருத்துவத்தில் பொருள் கூறுகிறார்கள். எதோ, இன்றோ நேற்றோ இந்த எம்பாமிங் முறை
மருத்துவத்தில் கையாளப்படவில்லை. இந்த எம்பாமிங் முறை, கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகளை கடந்து வந்துள்ளது. வரலாற்றைப்
புரட்டினால் முதல் எம்பாமிங் 1735 ஆம் ஆண்டே நிகழ்ந்திருப்பது தெரிய வரும்.

முதல் எம்பாமிங்:
லண்டனைச் சேர்ந்த பல் மருத்துவர் மார்ட்டின். அவரது மனைவியின் உடல்தான் முதன்முதலில் அறிவியல் அடிப்படையில் எம்பாமிங்
செய்யப்பட்டது. பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான அவரது மனைவி, 1735- ஆம் ஆண்டு இறந்துபோனார். அவரது உயிலில்,
‘என்னைப் புதைக்காமல் இருக்கும்வரை… எனது சொத்துக்களை, எனது கணவர் அனுபவிக்க உரிமை உண்டு’ என எழுதி இருந்தார்.
மார்ட்டினுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அப்போது, மற்றொரு மருத்துவ நண்பரான வில்லியம் ஹண்டர் அவருக்கு உதவ
முன்வந்தார். அவருடைய உதவியால், தனது மனைவியின் உடலைப் பதப்படுத்தி தன் மருத்துவமனை வாசலில் காட்சிக்கு வைத்தார்.
இதனையடுத்து, இவரது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அவரது மனைவியின் உடல், நீண்ட
நாட்கள் பதப்படுத்தப்பட்டதால் அவரால் அத்தனை நாட்களும் அவரது சொத்துக்களை ஆண்டு அனுபவிக்க முடிந்தது.

எகிப்தில் தொடங்கிய....

இறந்த ஒருவரின் உடலைப் பதப்படுத்தி பாதுகாப்பது எகிப்திய நாகரிகத்தில் இருந்தது. இது பல நூற்றூண்டுகளாக எகிப்தில் பரவலாக
இருந்தது. பிரமிட்களில் அக்கால எம்பாமிங் முறையில் பிணங்கள் பாதுகாகக்கப்பட்டு வந்தன. இதனை ஹாலிவுட்டின் மம்மி வரிசை
திரைப்படங்களில் காட்டப்பட்டிருக்கும். ஆனால் வில்லியம் ஹண்டர் எனும் மருத்துவர்தான் அதனை அறிவியல் மற்றும் மருத்துவ
ரீதியாக நிரூபித்தார். பின்பு, உலகப் போர் சமயங்களில் இதே பிரேத சீரமைப்பு எனப்படும் எம்பாமிங், போர் முனையிலிருந்து உடலை
பதப்படுத்தி சேதமில்லாமல் உறவினர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க உதவியது. அதன் பின்னர், பல முக்கியத் தலைவர்களின்
உடல்களைப் பதப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைக்க இதே முறையைப் பின்பற்றினார்கள். இன்றும் ரஷ்ய அருங்காட்சியகத்தில் பிரேத
சீரமைப்பு செய்யப்பட்ட லெனின் உடலைக் காணலாம். தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில், ராமானுஜரின் உடலை பதப்படுத்தி வைத்திருப்பது
அந்தக்கால பிரேத சீரமைப்பு முறைக்கு நல்ல உதாரணம். அதேபோல கிறிஸ்துவ புனிதர்களில் ஒருவராக கருதப்படும் டான்
பாஸ்கோவின் எம்பாமிங் உடலும் உலகெங்கும் சுற்றி வருகிறது.

எப்படி நடக்கிறது எம்பாமிங் ? 

எகிப்திய காலங்களில் இறந்துப்போன உடலில் ஆர்செனிக் எனப்படும் அமிலம் செலுத்தப்பட்டு, உடல் பாதுகாக்கப்பட்டது. ஆனால்,
ஆர்செனிக் அமிலத்தில் மண்ணை விஷமாக்கும் தன்மை இருக்கிறது. அவ்வாறு பதப்படுத்தப்பட்ட உடல் பிற்காலத்தில் ஆர்செனிக்
விஷம் கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாலும் அந்த முறையை உபயோகிப்பதை
நிறுத்திக்கொண்டனர் மருத்துவர்கள். அதன் பிறகு, ஃபார்மால்டிஹைட் அல்லது ஃபார்மலின் எனப்படும் வேதிப் பொருள் பதனிட
உபயோகப்படுத்தப்பட்டது.

பிணத்துக்கு மஸாஜ்:

எம்பாமிங் எனப்படும் பிரேத சீரமைப்பில் பல வகைகள் இருக்கின்றன. ரத்த நாளங்கள் வழியாகச் செய்யப்படும் எம்பாமிங், வேதிப்
பொருட்களை உள்ளே செலுத்துவது ஒருவகையாகும். இவை, உள்ளே போகும் அதே நேரத்தில், உள்ளிருக்கும் ரத்தம் உள்ளிட்ட
திரவங்களை வெளியேற்றும். சீரமைப்புச் செய்வதற்கு முன் இறந்த உடலை மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் திரவம்
சீராகப் பரவும். பற்களின் ஈறுகளின் வழியாகச் சீரமைப்பு செய்வது இரண்டாவது வகையான எம்பாமிங். இதன்மூலம், தொப்புளின்
வழியாக திரவம் செலுத்தப்பட்டு  நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தேவையற்ற திரவங்களை வெளியேற்றி, உள்ளே வேறு ஒரு
திரவத்தை நிரப்புவதாகும். மேலிருக்கும் சரும எம்பாமிங் முறையில் உடல் சீரமைப்பு ஒழுங்காக நடைபெறாத பகுதிகளில் மட்டும் ஊசி
கொண்டு எம்பாமிங் செய்யப்படும். மொத்தமாக மேலோட்டமாகச் செய்யப்படும் எம்பாமிங் முறையில், தோல் மக்கிப் போகாதவாறு
இருக்க மட்டும் கெமிக்கல் செலுத்தப்படும். நீண்டநாட்கள் பதப்படுத்த வேண்டும் என்கிற நிலையில், உடலில் பல இடங்களில் ஊசி
போட வேண்டும். மொத்தத்தில் எம்பாமிங் எனப்படும் பிரேத சீரமைப்பு முறையில், பல்வேறு ரசாயனம் மற்றும் உப்புகள் கொண்டு
சீரமைப்பு செய்யப்படுவதால் உடலின் நிறம் பாதுகாக்கப்படும். பிணத்தின் கை, கால் பகுதிகளை நாம் நினைத்தது மாதிரி மாற்ற முடியும்.
உடலில்  ஏற்கெனவே தங்கி இருக்கும் மருந்துகளால் உண்டாகும் தேவையற்ற துர்நாற்றத்தை அது கட்டுப்படுத்த உதவும்.