சிறப்புக் களம்

வயதானாலும் வற்றாத காதல்நதி : இப்படியும் ஒரு காதல் தம்பதி..!

வயதானாலும் வற்றாத காதல்நதி : இப்படியும் ஒரு காதல் தம்பதி..!

webteam

இலங்கை தமிழர் பிரச்சனையின் போது குடும்பத்துடன் அகதியாய் தமிழகத்திற்க்கு குடிபெயர்ந்தவர் பக்கா விஜயா.அகதியாய் வந்தவர்கள் பிழைப்பு நடத்த தெருக்களில் நடனம் ஆடி அதில் வரும் வருவாயை கொண்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளனர். கலைக்கூத்தாடியான பக்கா விஜயாவை, ஒரு தெரு கூத்து நிகழ்ச்சியில் பார்த்து அவரது நடனத்தால் கவரப்பட்டு அவரை காதலித்து கரம் பிடித்தவர் சுப்பிரமணியம்.

சுப்பிரமணியம் திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதி செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். மாற்று சமுகத்தை சேர்ந்தவர், கலை கூத்தாடி என்பதால் சுப்பிரமணியனின் காதலை அவரது வீட்டார் ஏற்க மறுத்துள்ளனர். இதனால் 1985-ம் ஆண்டுகளில் வீட்டை விட்டு வெளியேறிய சுப்பிரமணியம், மகிழ்ச்சியாக பக்கா விஜயாவுடன் சேர்ந்து நடனமாடி, கிடைக்கும் வருவாயில் அன்றாட வாழ்க்கையை சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்துள்ளனர். சுப்பிரமணியனுக்கு நடனம் ஆட கற்றுக்கொடுத்தவர் அவரது மனைவி பக்கா விஜயாதான்.

ஒருநாள் இரவு இவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. நள்ளிரவில் கூத்தாடி முடித்த களைப்பில் சாலை ஓரம் உரங்கிக்கொண்டிருந்த பக்கா விஜயாவை ஒருவர் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், விஜயாவை காப்பாற்ற தற்காப்புக்காக அந்த நபரை தலையில் தாக்கினார். அப்போது பலத்த காயம் அடைந்த அந்த நபர் இறந்துபோனார். இந்த சம்பவம் 1990-ம் ஆண்டு கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லையில் நடந்தது. கணவன்-மனைவி இருவரையும் கைது செய்த சூலூர் காவல்துறையினர்,அவர்கள் மீது 500 ரூபாய்க்காக வழிபறி செய்து கொலை செய்தார்கள் என்று வழக்கு பதிவு செய்தது. இதனைதொடர்ந்து நீதிமன்றத்திலும், நீதிபதியின் கேள்விக்கு பக்கா விஜயா சிறிதும் தயக்கம் இன்றி நாங்கள் இருவரும் தான் இதனை செய்தோம் என்று உண்மையை வெகுளியாய் கூற, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து இருவரும் கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களுக்காக வாதாட யாரும் இல்லாத நிலையில் இருவரும் 25 ஆண்டு காலம் சிறையில் கழித்துள்ளனர். கணவருடன் வாழ நினைத்த விஜயா காலப் போக்கில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு “மாமா” என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையும் தெரியாமல் மறந்த மனநோயாளியாக மாறி போனார். அன்றைய நிலவரப்படி அதிக ஆண்டுகள் சிறையில் இருந்த பெண் கைதி பக்கா விஜயா தான். 

இந்நிலையில் தான் சிறையில் இருந்த பக்கா விஜயாவுக்கு, ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியின் பழக்கம் ஏற்பட்டது. பின் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியின் சட்டபோராட்டத்திற்க்கு பிறகு பக்கா விஜயா 2013-ம் ஆண்டு முன் விடுதலை செய்யப்பட்டார். பக்கா விஜயா விடுதலையான பின்பு கடந்த 4-ஆண்டுகளாக அரியூரில் உள்ள தஞ்சம் முதியோர் இல்லத்தில் தனது காதல் கணவருக்காக காத்திருந்தார். இந்நிலையில் தான் நேற்று (06.10.2018) வேலூர் மத்திய சிறையில் உள்ள சுப்பிரமணியம் 28 ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி  விடுதலை செய்யப்பட்டார். விடுதலை ஆனவர் தனக்காக காத்திருக்கும் மனைவியை காண முதியோர் இல்லம் சென்றார். அங்கு தனது கணவருக்காக 28 ஆண்டுகள் காத்திருந்தார். பக்கா விஜயா குழந்தையாக மாறி சுப்பிரமணியனியனை பார்த்ததும் ஓடிச்சென்று கையை பிடித்து அழுது கண்ணீர் வடித்தார். இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. 

சுப்பிரமணியனை “மாமா” என்றழைக்கும் பக்கா விஜயா தனது மாமாவை முதியோர் இல்லத்தில் கூடியிருந்த அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்து மகிழ்ந்தார். பக்கா விஜயாவை பார்த்த சுப்பிரமணியன் 20 முறையேனும் நலம் விசாரித்து  “சாப்டியா” என கேட்டார். பின் இருவரும் முதிர்ந்த வயதில் இளமையான அன்பை பறிமாறிக்கொண்டனர். இது குறித்து சிறையில் இருந்து வெளியே வந்த சுப்பிரமணியன் கூறும் போது எங்களை காப்பாற்றிக்கொள்ள செய்த செயலால் நாங்கள் தண்டனையை அனுபவித்து விட்டோம். இனி நாங்கள் இருவரும் எங்களது சொந்த ஊருக்கே செல்ல இருக்கிறோம். அங்கு எங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதனால் கிடைக்கும் வேலையை வைத்து வாழ்ந்துகொள்வோம். எனது உயிர் இருக்கும் வரை எனது பக்கா விஜயாவை நான் காப்பாற்றுவேன். இனி அவளுக்கென்று என்னை விட்டால் யாரும் கிடையாது. அவருக்கு ஒன்றும் தெரியாது என்னை மட்டுமே நம்பியுள்ளால் அவளை நான் காப்பாற்றவில்லையெனில் அந்த பாவம் என்னை சும்மாவிடாது என்று கூறினார். சுப்பிரமணியன் பேசும் போது 'என்னை விட்டு போகவேண்டாம் என சைகை மூலம் வேண்டுகோள் விடுத்தார் பக்கா விஜயா' இந்த வயதிலும் நம்பிக்கையை இழக்காமல் பக்கா விஜயாவுக்கு தைரியம் ஊட்டினார் சுப்பிரமணியம். 

வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத அன்பின் வெளிப்பாடுதான் இந்த காதல் தம்பதியின் வாழ்க்கை. 28 ஆண்டுகளாய் தேக்கி வைத்த அன்பெனும் வெள்ளம் உடைத்தோடுகிறது. காதலித்து கரம் பிடித்து வாழ வழியின்றி வாழ்ந்தவர்களுக்கு சிறைவாசம் பெறும் துன்பத்தை கொடுத்து வந்தது. 28 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்தவர்களின் எஞ்சிய வாழ்நாளை காலம் தான் முடிவு செய்யும். 

குமரவேல்,செய்தியாளர் - வேலூர்.