சிறப்புக் களம்

"எங்களை பழங்குடியினர் பட்டியலுக்கு மீண்டும் மாற்றுங்கள்"- துயரில் வேட்டைக்கார சமூகம்!

"எங்களை பழங்குடியினர் பட்டியலுக்கு மீண்டும் மாற்றுங்கள்"- துயரில் வேட்டைக்கார சமூகம்!

webteam

MBC பிரிவில் இணைக்கப்பட்ட பிறகு தங்களுக்கான சலுகைகள் கிடைக்கவில்லை எனவும், தங்கள் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர், வேட்டைக்கார சமூகத்தினர்.

நகரின் கட்டுமான வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் செங்கல்லை உருவாக்கும் வேலையை அதிகளவில் செய்பவர்கள் வேட்டைக்கார சமூகத்தினர். சேற்றை மிதிக்கும் கால்களும், செங்கல்லை அறுக்கும் கரங்களும், சூளையின் தீயில் வேகும் கண்களும் என வாழ்க்கையை நகர்த்தும் இவர்களின் பெரும் லட்சியக் கனவு என்பது, கொஞ்சமாவது வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்பது தான். வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூலைகளில் வேலை செய்து வரும் வேட்டைக்காரன் சமூகத்தை சேர்ந்த மக்கள், பழங்குடியினர் பட்டியலில் இருந்து எம் பி சி பிரிவில் இணைக்கப்பட்ட பிறகு, தங்களுக்கான அரசு சலுகைகள் முறையாக கிடைக்கவில்லை எனவும், தங்கள் வாழ்க்கை பின்தங்கியே இருக்கிறது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

MBC இணைக்கப்பட்ட வேட்டைக்கார சமூகத்தினர்!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதியில் மட்டும் வேட்டைக்கார சமூகத்தை சேர்ந்தவர்கள், சுமார் 11 ஆயிரம் பேர் உள்ளனர். தமிழகம் முழுவதும் இப்படியாக பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர். கடந்த 1954 முதல் 1974 வரைக்கும் வேட்டைக்கார சமூகம், பழங்குடியினர் பட்டியலில் தான் இருந்து வந்தது. அதற்குப் பிறகு தான் MBC பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கோரி, பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்துவரும் இவர்கள், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில் வேட்டைக்கார சமூகம் பழங்குடியினர் பட்டியலில் தான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் இருந்து எம்பிசி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

“எங்களுக்கான சலுகைகளும் கிடைப்பதில்லை! எங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதும் இல்லை!”

எம் பி சி பிரிவில் இணைக்கப்பட்டது குறித்து பேசியிருக்கும் வேட்டைக்கார சமூகத்தினர், எம்பிசி பிரிவில் இணைக்கப்பட்டதற்கு பிறகு இட ஒதுக்கீடு குறைந்து தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள், மேற்படிப்பு படிப்பதிலும், அரசு வேலைக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களின் இளைஞர்கள் கூடை நெய்வது, செங்கல் சூலையில் வேலை பார்ப்பது, ஈசல் பிடிப்பது, மீன்பிடிப்பது போன்ற தொழிலையே இன்னும் செய்து வருகின்றனர் என வேதனை தெரிவிக்கின்றனர்.

வேட்டைக்கார சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதாக வாக்குறுதி அளித்த திமுக!

குருவிக்காரர், நரிக்குறவர், வேட்டைக்காரன், லம்பாடி, படுகர் உள்ளிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதாக, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 280ஆவது வாக்குறுதியாக திமுக வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்னும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கப்படாததால், தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கக் கோரி, கடந்த ஏழாம் தேதி (07.02.2023) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அரசு அதிகாரிகள், 10 நாட்களில் இதற்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் இன்னமும் தீர்வு எட்டப்படாமலே இருந்து வருகிறது.

கடந்த ஜீன் மாதம் எங்கள் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்!

இது குறித்து வேட்டைக்காரன் சமூக மக்களான சீனிவாசன் நம்மிடையே கூறுகையில், “எங்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கோரி கடந்த 20 ஆண்டுகளாக சங்கம் நடத்தி வருகிறோம். பலமுறை கோரிக்கை வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். பாண்டிச்சேரியில் 2016-ல் வேட்டைக்காரன் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளார்கள். தமிழக அரசும் அதேபோல் பழங்குடியினர் பட்டியலில் எங்களை சேர்க்க வேண்டும்.

1956-ல் பழங்குடியினர் பட்டியலில் தான் இருந்தோம், அதனையும் ஆவணமாக அரசுக்கு கொடுத்துள்ளோம். 280ஆவது தேர்தல் அறிக்கையிலும் முதல்வர் மு க ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் எங்கள் நிலையை குறித்து ஆய்வும் மேற்கொண்டார்கள், ஆனாலும் இன்னமும் தீர்வு எட்டவில்லை.

 “அதிகாலையில் செங்கல் சூளையில் வேலை பார்த்துவிட்டு தான் கல்லூரிக்கு செல்வோம்!”- வேட்டைக்கார சமூக கல்லூரி மாணவி

அவர்கள் பேசுகையில், “கல்லூரி பயிலும் மாணவி அஸ்வினி கூறுகையில், முதல்வர் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்ற வில்லை. பழங்குடியினர் சான்றிதழ் இருந்தால்தான் எங்களுக்கு அரசு கல்லூரிகளிலும், அரசு பணிகளிலும் வாய்ப்பு கிடைக்கும். படிக்கணும் என்ற ஒரே எண்ணத்தில், அதிகாலை நாலு மணி முதல் செங்கல் சூலையில் வேலை செய்துதான் படித்து வருகிறோம். எங்கள் பெற்றோர் படிக்காத சூழலில் எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறார்கள். எங்களில் சிலர் படித்தும் வேலையில்லாமல் இருக்கிறோம். நாங்கள் அடுத்த கட்டமாக வேலைக்கு போனால் தான், எங்களால் கொஞ்சமாவது முன்னேற முடியும். படிப்பு மட்டும்தான் எங்களை காப்பாற்றும். எம்பிசி-ல் இட ஒதுக்கீடு குறைவு என்பதால், எங்களால் அரசு கல்லூரியில் சேரவும், அரசு பணிகளுக்கு செல்லவும் ஒருபோதும் முடியவில்லை” என்கின்றனர்.

“வெயிலில் காய்ந்து உழைத்து வரும் நாங்கள், நிழலில் வேலை செய்ய ஆசைப்படுகிறோம். எவ்வளவு காலத்திற்கு எங்களால் இப்படியே இருக்க முடியும்?” என கல்லூரி படிக்கும் அந்த மாணவி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்கள் படிக்கவில்லை, எங்கள் பிள்ளைகளாவது வெளி உலகத்தை பார்க்கவேண்டும்!

பவானி என்ற மூதாட்டி கூறுகையில், “எங்கள் முன்னோர்கள் காட்டில் முயல் பிடிப்பார்கள், கூடை தொழில் செய்வார்கள். அதையே தான் தொடர்ந்து நாங்களும் செய்து வந்தோம். எங்களையும் படிக்க வைக்கவில்லை, ஆனால் தற்போது எங்கள் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறோம். எங்கள் பிள்ளைகளாவது வெளி உலகத்தை பார்க்க வேண்டும் என்ற கனவோடு படிக்க வைத்து வருகிறோம். ஆனால் படித்து முடித்த பிறகும் எங்களோடு செங்கல் சூளையில் தான் வேலை செய்து வருகிறார்கள். இதை பார்க்கும் போது அவ்வளவு தானா எங்கள் வாழ்க்கை என வேதனையாக உள்ளது. மீண்டும் மீண்டும் இதே கஷ்டத்தை அனுபவித்தால் நாங்கள் எப்படி முன்னேற முடியும்” என்றார்.

“போட்டி தேர்வுகளில் பங்கேற்பதில் பெரிதாக வாய்ப்பில்லாமல் தோற்றுபோகிறோம்!” -காவலர் தேர்வுக்கு முயற்சிக்கும் இளைஞர்

இப்பகுதியில் உள்ள வேட்டைக்காரன் சமூக ஆட்களில் முதல் முறையாக காவலர் தேர்வுக்கு தொடர்ந்து முயற்சித்து வரும் சுரேஷ் என்ற இளைஞர் கூறுகையில், “நான் நான்கு முறைகள் காவலர் தேர்வுக்கு முயற்சித்துள்ளேன். இந்த சமூகத்தில் இருந்து முதல் முறையாக காவலர் தேர்வுக்கு முயற்சித்து வருகிறேன். ஆனால் பணி கிடைக்கவில்லை. பழங்குடியினர் பிரிவில் எங்களை சேர்க்க வேண்டும். இட ஒதுக்கீடு என்பது எங்களுக்கு அவசியமான ஒன்று. எம்பிசி பிரிவில் எங்களுக்கான இட ஒதுக்கீடு குறைவு என்பதால், அங்கு போட்டி அதிகமாக உள்ளது. எங்களை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் எங்கள் வாழ்க்கை மாறும் என நம்புகிறோம். எம்பிசி பிரிவில் எங்களுக்கு வயது வரம்பும் குறிப்பிட்ட அளவுக்கு இல்லை.

பணம் கட்டி படிக்கும் அளவிற்கு எங்களிடம் வசதியில்லை!

Msc, B ed பட்டதாரி கார்த்தி கூறுகையில், “பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் கல்லூரியில் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். செங்கல் சூளை தொழில், மீன்பிடி தொழிலை தவிர்த்து எங்கள் ஆட்கள் வேறு எந்த வேலையும் செய்வதில்லை, வேறு எந்த தொழிலும் எங்கள் மக்களுக்கு தெரியாது. தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணம் கட்டி படிக்கும் அளவுக்கு, எங்களிடம் போதிய வசதி இல்லை. நாங்கள் இருக்கும் வீடுகள் எல்லாமே கூரை வீடு, ஓட்டு வீடாகத்தான் உள்ளது. விலைவாசி உயர்வால், நாங்கள் செய்யும் வேலைக்கு கிடைக்கும் சொற்ப தொகை உணவுக்கே போதியதாக உள்ளது.

பழங்குடியினர் பட்டியலில் இருந்து எங்களை நீக்காமல் இருந்திருந்தால் கடந்த ஆண்டுகளில், பலர் முன்னேறி வெளியில் வேலைக்கு சென்றிருப்பார்கள். எங்களின் வாழ்வாதாரமும் மாறி இருக்கும்” என தனது சமூகத்தின் ஒட்டுமொத்த மனக்குமுறலையும் வெளிப்படுத்தினார்.

இப்படியாக ஆளும் கட்சியாக இருக்கும் திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியின் படி தங்களை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர், வேட்டைக்காரன் சமூக மக்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் தங்களை, மீண்டும் பழங்குடியினர் பிரிவிலேயே இணைக்க வேண்டும் என்ற இவர்களின் கோரிக்கையானது, நியாமான ஒன்றாக தொடர்ந்து வைக்கப்பட்டுகொண்டே இருக்கின்றனது.