சிறப்புக் களம்

இயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'

இயற்கைக்கும் நமக்குமான மூன்றாம் உலகப்போரின் முதல் குண்டு 'தண்ணீர் பஞ்சம்'

webteam

''மூன்றாம் உலகப்போர் நடந்தால் அது மனிதர்களுக்கிடையே நடக்காது. இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே தான் நடக்கும்''

பூமியானது 70 சதவீதம் தண்ணீரால் நிரம்பியிருக்கிறது. மீதி இருக்கும் 30 சதவீதத்தில் தான் நாடும், காடும், மலையும் எல்லாமும் அடங்கியுள்ளது. 70 சதவீத நீர் என்றாலும் அதில் 97.5 சதவீத நீரானது கடல் நீர். அதாவது உப்பு நீர். அப்படியென்றால் 2.5% மட்டுமே பயன்படுத்த தகுதியான நீராகும். அதிலும் மூன்றில் ஒரு பங்கு பனிப்பாறைகள். இவையெல்லாம் போக மிஞ்சியிருக்கும் சொற்ப அளவே நாம் பயன்படுத்தும் தண்ணீர். 

உயிரினங்களின் அடிப்படை ஆதாரமான குடிநீரின் அருமையை உணர்த்தும் வகையிலும், குடிநீரின் தேவையை நினைவுபடுத்தும் வகையிலும் 1993-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா சபையின் 47வது கூட்டத்தொடரில் உலக தண்ணீர் தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் 22ம் தேதி தண்ணீர் தொடர்பான ஒரு கருப்பொருளை கொண்டு தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் தண்ணீரின் தேவை தினம் தினம் அதிகரித்து வருகிறது. ஆனால் சுற்றுச்சூழல் மாற்றம், பருவமழை மாற்றமென தண்ணீருக்கான ஆரம்ப புள்ளியே ஆட்டம் கண்டு வருகிறது. கோடையில் தமிழகமே தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க தொடங்கி இருப்பதே அதற்கு சாட்சி.

இந்தியாவை பொறுத்தவரை 60 கோடி மக்கள் தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2050ம் ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்படும் மக்கள் பில்லியனை தொடலாம் என்றும் கூறப்படுகிறது. 2040ம் ஆண்டுகளில் உலக அளவில் 33 நாடுகள் பெரிய அளவிலான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 
வடக்கு ஆப்ரிக்கா, பாகிஸ்தான், துருக்கி, ஆப்கானிஸ்தான், ஸ்பெயின் , சீனா, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என முக்கிய நாடுகள் எல்லாம் இதில் அடங்கும். மிகப்பெரிய நாடான இந்தியா நிலத்தடி நீரை அதிகளவில் பயன்படுத்தி வருகிறது. உலக அளவில் உள்ள நிலத்தடி நீரில் 24% நிலத்தடி நீரை இந்தியா பயன்படுத்துகிறது.

சில நாட்கள் உணவில்லாமல்  கூட காலம் கடத்தலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் முடியாது. தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் என்னதான் நாம் மேலோங்கி போனாலும் இயற்கையின் பல விஷயங்களை நம்மால் உருவாக்க முடியாது என்பது நிதர்சனம். வான் வழி தாக்குதல்களும், குண்டு மழைகளும், குருதியும் சதையுமாக உலகில் இரண்டு உலகப்போர்கள் நடந்துள்ளன. ஆனால் மூன்றாம் உலகப்போர் நடந்தால் அது மனிதர்களுக்கிடையே நடக்காது. இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே தான் நடக்கும் என பலரும் கருத்து கூறும் இவ்வேளையில் வைரமுத்து வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. 

''இப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர்;  ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர்;  மனிதனுக்கும் இயற்கைக்குமான  போர்;  இது மனித குலம் சந்தித்திராத  மோசமான முகமூடிப் போர்''. 

இந்த மூன்றாம் உலகப்போரில் நம்மை தாக்கும் முதல் ஆயுதமே தண்ணீர் பஞ்சம் தான் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இப்போது முதல். இந்த நொடி முதல்!