ஷிவ் கிரேவால் முகநூல்
சிறப்புக் களம்

”மரணத்தில் இருந்து மீண்டு வந்தேன்”- மாரடைப்புக்கு பின் 7 நிமிடங்கள்..லண்டன் நபரின் சுவாரஸ்ய பகிர்வு!

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவர், 7 நிமிடங்களுக்கு தான் உயிரிழந்துவிட்டதாகவும் அதன் பிறகு மீண்டும் உயிர் பெற்றதாகவும் தனது அரிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

தென்கிழக்கு லண்டனில் ஷிவ் கிரேவால் என்னும் 60 வயது நிரம்பிய பிரிட்டிஷ் மேடை கலைஞர் ஒருவர் தனது மனைவி அலிசனுடன் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 9, 2013 அன்று மதிய உணவினை உட்கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்படவே அவரது மனைவி ஆம்புலைசை அழைத்துள்ளார். ஆனால் அது வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.

இடைப்பட்ட இக்காலத்தில சரியாக 7 நிமிடங்களுக்கு தான் இறந்துவிட்டதாகவும் மீண்டும் அதன்பிறகு உயிர் பெற்றதாகவும் தன்னுடைய அனுபவத்தை தற்போது அவர் கூறியுள்ளார்.

ஷிவ் கிரேவால் அவரது மனைவி அலிசன்

அந்த 7 நிமிடங்கள் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை குறித்து அவர் கூறுகையில், “ஒரு அற்புதமான உணர்வு அது. எனக்கு நன்றாக தெரிந்தது எப்படியோ நான் இறந்துவிட்டேனென்று. என் உடலிலிருந்து நான் தனியாக பிரிந்துவிட்டது போன்ற உணர்வும் எனக்கு ஏற்பட்டது. நான் ஒரு வெற்றிடத்திற்கு சென்று விட்டதை என்னால் உணர முடிந்தது. என் உடல்எடை இல்லாதது போல ஏதோ தண்ணீரில் மிதப்பதை போலவும் தோன்றியது.

ஒரு தருணத்தில் பூமியிலிருந்து பிரிந்து சந்திரனுக்குள் நுழைந்து விட்டது போல தோன்றிய எனக்கு அங்கே விண்மீன்களையும் விண்கற்களையும் கூட பார்க்க முடிந்தது. ஏதோ மறுப்பிறவி எடுத்துவிட்டேன் என்பது போல நான் உணர்ந்தேன். இருப்பினும் எனக்கு அந்த உணர்வு பெரிதும் பிடிக்கவில்லை. மீண்டும் நான் எனது உடலுக்கு திரும்பி செல்ல வேண்டும், எனது மனைவியை நான் சந்திக்க வேண்டும், அவருடன் நான் என் வாழ்க்கையை மறுபடியும் தொடர வேண்டும் என்பதில் மட்டும் நான் தெளிவாக இருந்தேன்” என்றார்.

இறுதியாக ஆம்புலன்ஸ் வந்தடையவே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 1 மாத காலம் கோமாவில் கிடந்துள்ளார்.

இந்த நிகழ்வை பற்றிஅவர் கூறுகையில் “மரணத்தை சந்தித்து வந்த இவ்வுணர்விலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை என்றாலும், இந்த நிகழ்வுகள் வாழ்க்கையை பற்றிய என் கண்ணோட்டத்தையே முற்றிலும் மாற்றுவதாக அமைந்தது.

ஷிவ் கிரேவால்

என் இதயம் நின்ற அத்தருணத்தில் எனக்கு நடந்த எல்லா நிகழ்வுகளும் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. அதனை எல்லாம் ஒரு நாடகமாக “கலை வடிவில்” கொண்டுவர முயன்று வருகின்றேன். மரணத்தை சந்தித்து வந்த பிறகு என் வாழ்க்கையில் நான் பெற்ற ஒவ்வொன்றும் எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை நான் தற்போது உணர்ந்துள்ளேன்.

இதன் மூலம் மரணத்தை பற்றிய எனது அச்சம் என்பது குறைவாகவே இருக்கின்றது. அதேசமயம் மிகுந்த அச்சமும் என்னிடம் இருக்கிறது. மனித பிறவிக்கு இரக்கம் என்பது முக்கியமான ஒன்று என்பதை நான் எப்போது யோசனை செய்வேன். இந்த நிகழ்வின் மூலம் மேலும் இரக்கம் நிறைந்தவனாகவும் மிகவும் நன்றி உள்ளவனாகவும் மாறிவிட்டேன் என்பது உண்மை” என்று தனது வாழ்க்கையை தாண்டி தான் அனுபவித்த அற்புத உணர்வை விளக்கினார்.