சிறப்புக் களம்

இதுவல்லவா பாசம்! நீதிமன்றம் சென்று போராடி தந்தைக்கு கல்லீரல் தானம் செய்த 17 வயது சிறுமி!

இதுவல்லவா பாசம்! நீதிமன்றம் சென்று போராடி தந்தைக்கு கல்லீரல் தானம் செய்த 17 வயது சிறுமி!

webteam

கேரளாவைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தன் தந்தைக்கு கல்லீரலைத் தானமாக வழங்கி, அவருடைய உயிரைக் காப்பாற்றியிருப்பது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்கிய மகள்

மகள்கள் எப்போதும் தந்தைக்கு தேவதைகளாகவும், தந்தையர் எப்போதும் மகள்களுக்கு தெய்வமாகவும் மதிக்கப்படுகின்றனர். பெற்ற மகன்களே இந்த காலத்தில் பெற்றோரைக் கைவிடும் நிலையில், பெண் பிள்ளைகள் பலர் இன்று தன் பெற்றோரைப் பேணிக்காத்து வருகின்றனர். அதிலும், அப்பாவுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடோடிப் போய் நிற்கின்றனர். ஆம், அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர், தன் தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்கியிருப்பதுதான் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. தவிர, அந்த சிறுமி நாட்டிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

கல்லீரல் பாதிக்கப்பட்ட தந்தை!

கேரளம் மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பிஜி பிரதீஷ். 48 வயதான இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவில் உள்ள ராஜகிரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அத்துடன் அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும்; இல்லையென்றால் அவர் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து, குடும்பத்தினரும், மருத்துவ நிர்வாகமும் கல்லீரல் தானம் குறித்து விசாரித்து வந்தனர். ஆனால், கிடைக்கவில்லை.

மகளின் விருப்பத்தை மறுத்த மருத்துவர்கள்!

அப்படி, ஒன்று இரண்டு கிடைத்த கல்லீரல்களும் அவருக்குப் பொருந்திப் போகவில்லை. இந்தச் சூழலில் தன்னுடைய கல்லீரை தானமாகக் கொடுக்க முன்வந்தார், பிரதீஷின் 17 வயது மகளான தேவானந்தா. ஆனால், அவருடைய தானத்தை மருத்துவர்கள் ஏற்க முன்வரவில்லை. காரணம், இந்தியாவில் மனித உறுப்பு மற்றும் திசு மாற்றுச் சட்டம் 1994இன்படி கல்லீரல் தானம் தரும் ஒருவர், 18 வயதை நிரம்பி இருக்க வேண்டும் என்பதால் தேவானந்தாவின் கல்லீரல் தானத்தை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

கேரள உயர்நீதிமன்றத்தை நாடிய சிறுமி

இருப்பினும், தனது தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்த தேவானந்தா, உடல் உறுப்பு சட்டத்தில் இருந்து விலக்குக் கோரி கேரள நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், “எனது தந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. நான் கல்லீரல் தானத்தைச் செய்ய தயாராக இருக்கிறேன். எனக்கு உறுப்புத் தானம் செய்வதில் மருத்துவத் தடைகள் எதுவுமில்லை. இருப்பினும் உறுப்பு மற்றும் திசு மாற்று விதிகள் 2014இன்படி தானம் செய்பவரின் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும். ஆனால், எனக்கு தற்போது 17 வயதுதான் ஆகிறது. ஆகவே, என் தந்தையின் உயிர்மீது கவனம்கொண்டு, இந்த வயது வரம்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

தானம் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்

இந்த மனு கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி.ஜி.அருண் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “இந்த விவகாரம் தொடர்பாக மாநில சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களைப் பெற்று விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து நவம்பர் 21ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு அவரது மகள் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அவரைப் பாராட்டவும் செய்தது.

சிறுமியைப் பாராட்டிய நீதிமன்றம்

“தேவானந்தா நடத்திய இடைவிடாத போராட்டம் வெற்றியடைந்துள்ளது. தந்தையின் உயிரைக் காப்பாற்ற துடிக்கும் அவருடைய போராட்டத்தை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது” என நீதிமன்றம் கூறியது. மேலும் நீதிபதி வி.ஜி.அருண், தேவானந்தாவுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். “தேவானந்தாவைப் போன்ற குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள்” எனத் தெரிவித்தார்.

வெற்றிகரமாக செய்யப்பட்ட அறுவைச்சிகிச்சை

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி பிரதீஷ்க்கு கல்லீரல் உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. மகள் தேவானந்தாவின் கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து அவரது தந்தைக்கு மருத்துவர்கள் பொருத்தினர். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தந்தையும் மகளும் நலமுடன் இருப்பதாகவும், தேவானந்தா கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்கியதால் அவருக்கு எந்தப் பாதிப்பு ஏற்படாது எனவும், அடுத்த 6 முதல் 8 வாரங்களில் அவரது உடலில் கல்லீரல் வளர்ந்துவிடும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கட்டணத்தைத் தள்ளுபடி செய்த மருத்துவமனை

மேலும், தேவானந்தாவின் இந்தச் செயலைப் பாராட்டி அறுவைச்சிகிச்சை செலவுக்கான கட்டணத்தையும் மருத்துவமனை நிர்வாகம் தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம், 17 வயது சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, நாட்டிலேயே மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

லாலுவிற்கு மகள் அளித்த சிறுநீரக தானம்

அப்பாவின் உயிரைக் காப்பாற்ற சிறுமி நடத்திய சட்டப் போராட்டத்திற்காகவும், கல்லீரலை தானமாக வழங்கியதற்காகவும் பலரும் தேவானந்தாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். தேவானந்தாவைப்போலவே, பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கும் அவருடைய மூத்த மகளான ரோகினி ஆச்சார்யா, சிறுநீரகம் தானம் தந்து அவரைக் காப்பாற்றினார். லாலுவுக்கு சிறுநீரக அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என சிங்கப்பூர் மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், ரோகினி ஆச்சார்யா தன் தந்தைக்கு சிறுநீரகம் தானம் வழங்கி ஆச்சர்யமளித்தார். அவர் அளித்த சிறுநீரகம் தானம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி லாலுவுக்கு வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. அதற்குப் பிறகு இருவரும் நலமுடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உறுப்பு தானம் கிடைக்காமல் மரணமெய்திய நடிகை மீனாவின் கணவர்

இந்தியாவில் உடலுறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சைக்கும் உறுப்புகளைத் தானமாய் வழங்குவதற்கும் பல விதிகள் இருக்கின்றன. பொதுவாக, நோயாளிக்குப் பொருந்திப் போகிற அளவுக்கு உடனே உறுப்புத் தானங்கள் கிடைப்பதில்லை. அப்படி பொருந்திப்போயும் உறவினர்கள் யாரும் உறுப்புகளைத் தானமாய் வழங்காவிட்டால், பிறருடைய உறுப்புக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்கு உதாரணமாய், நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணத்தைக் கூறலாம். கடுமையான நுரையீரல் பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டருடன் சிகிச்சை பெற்று அவருக்கு, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைதான் ஒரே தீர்வு என்ற நிலையில் அதற்காகப் பதிவு செய்யப்பட்டது.

உறுப்புத் தானம் செய்த நடிகை மீனா

ஆனால், பல நாட்கள் காத்திருந்தும் அவருக்கான மாற்று உறுப்பு தானம் கிடைக்காமல் அவர் மரணத்தைத் தழுவினார். இது, மீனாவின் குடும்பத்தை மட்டுமல்ல, இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள, மீனாவுக்கு நீண்ட நாட்கள் ஆனபோதும், அவர் துணிச்சலாய் எடுத்த முடிவு எல்லோரையும் பேச வைத்தது. கடந்த ஆண்டு உடல் உறுப்பு தினமான ஆகஸ்ட் 13ஆம் தேதி, தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், ”உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும். அன்று என் கணவருக்குத் தேவையான உடல் உறுப்புகள் தானமாகக் கிடைத்திருந்தால், என் வாழ்வே மாறியிருக்கும். உயிரைக் காப்பற்றுவதைவிட பெரிய நன்மை எதுவுமில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

உறுப்பு தானம் செய்வதில் பெண்களே அதிகம்

உடல் உறுப்பு தானத்துக்கு பதிவு செய்தும், அது கிடைக்காமல் மரணம் எய்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போனாலும், உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் பெண்களே பெரும்பங்கு வகிக்கின்றனர். இந்தியாவில் 78 சதவிகித பெண்கள் தங்களுடைய குடும்பத்தினருக்கும், நெருங்கிய உறவுகளுக்கும் உடல் உறுப்பு தானம் வழங்குவதாக தேசிய உறுப்பு - திசு மாற்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

- ஜெ.பிரகாஷ்