சிறப்புக் களம்

கொரோனா உயிரிழப்புகளில் எத்தனை சதவிதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்? -ரிப்போர்ட்

கொரோனா உயிரிழப்புகளில் எத்தனை சதவிதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்? -ரிப்போர்ட்

நிவேதா ஜெகராஜா

மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால், இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசுகையில், “இந்தியாவில் 2022ம் ஆண்டு கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளில், 92% உயிரிழப்பு கொரோனா தடுப்பூசி போடாதவர்களால்தான் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், கொரோனா பெருந்தொற்று நோய் இந்தியாவில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதற்கு தடுப்பூசி மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிகழ்வின்போது ஐ.சி.எம்.ஆர். இயக்குநர் பல்ராம் பார்கவா பேசுகையில், கொரோனா இறப்பு விகிதம் சரிந்ததற்கும் கொரோனா தடுப்பூசி மிகமுக்கிய பங்காற்றியுள்ளாக தெரிவித்துள்ளார்.

லாவ் அகர்வால் பேசுகையில், “இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று விகிதத்தை வார அடிப்படையில் பார்க்கையில், 11,000 பேருக்கு தொற்று பதிவாகிறது. இதைவைத்து பார்க்கையில், கொரோனா உறுதியாவோர் விகிதம், வெகுவாக இந்தியாவில் குறைந்திருப்பதை உணர முடியும். உலகளவில் 0.7 % தான், இந்தியாவில் பதிவாகிறது. அதேபோல இந்தியாவில் கொரோனாவால் இறப்பவர்கள் விகிதம் பிப்ரவரி 2 முதல் 8 வரை சராசரியாக 615 என்றுள்ளது. இதுவே கடந்த வாரத்தில் 144 என்று பதிவாகியுள்ளது. ஆக, கொரோனா இரப்பு எண்ணிக்கை 76.6% குறைந்திருக்கிறது.

தற்போது வார அடிப்படையில் கொரோனா உறுதியாவோர் விகிதம் 0.99% என்றுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா சிகிச்சையிலிருப்போர் எண்ணிக்கை 77,000 என்றுள்ளது. இவர்களில் சரிபாதிபேர் கேரளா, மகாராஷ்ட்ரா, மிசோரமை சேர்ந்தவர்களாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,561 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது” என்றுள்ளார்.

இவரைத்தொடர்ந்து பேசிய பல்ராம் பார்கவா, “தடுப்பூசி விநியோகம் அதிகரித்த காரணத்தால், கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. எந்தளவுக்கு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதென்பதை அறிய, அரசுதரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி கொரோனா முதல் டோஸ் மூலமாக நோயின் தீவிரத்தன்மை 98.9% குறைக்கப்படுவது தெரியவந்துள்ளது. இரு டோஸூம் எடுத்துக்கொண்டால், 99.3% குறைந்துள்ளது.

இந்தியாவில் 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில், 92% பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதாவர்கள்தான். தடுப்பூசி செலுத்திக்கொள்வோரை கண்காணிக்க உதவும் ட்ராக்கர் கொண்ட உலகின் இரண்டாவது நாடு, இந்தியாதான். அதனாலேயே அனைத்தையும் கண்டறிந்துள்ளோம்” என்றுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பெற தகுதியுடையோரில் 97% பேர் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதை 100% என்று உயர்த்த, இந்திய அரசு முழு முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.