சிறப்புக் களம்

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி 10 ஆண்டுகளில் இத்தனை யானைகள் பலியா? - அதிர்ச்சி தகவல்கள்

Veeramani

தமிழகத்தில் 2011 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 79 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 79 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. 2011 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 98 யானை இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 32 யானைகளும். ஆந்திராவில் 14 யானைகளும் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.



இதே காலகட்டத்தில் தமிழகத்தில் எட்டு யானைகளும், கேரளாவில் 20 யானைகள் மற்றும் கர்நாடகாவில் 12 யானைகள்  வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்டுள்ளன. அதே போல தமிழகத்தில் 2011 முதல் 2021 வரை யானைகள் எதுவும் விஷம் வைத்து கொல்லப்படவில்லை. ஆனால் கேரளாவில் 2, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தலா ஒரு யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் மோதி கேரளாவில் 6 யானைகளும், தமிழ்நாட்டில் 5 யானைகளும், கர்நாடகாவில் 4 யானைகளும் கடந்த 10 ஆண்டுகளில்  உயிரிழந்துள்ளன.

சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளெமென்ட் ரூபின் என்பவர் தகவல் அறியும் உரிமை மூலமாக கேட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் இந்தத் தரவை அளித்துள்ளது. காட்டு யானைகளின் இறப்புகளை ரயில் விபத்து, மின்சாரம் தாக்குதல், வேட்டையாடுதல் மற்றும் விஷத்தால் உயிரிழத்தல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் அமைச்சகம் வகைப்படுத்தியுள்ளது.



பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த ஆசிய யானை நிபுணர் ஆர்.சுகுமார் இதுபற்றி கூறுகையில், "தென் மாநிலங்களில் யானைகள் காப்பகத்திற்கு வெளியேதான் காட்டு யானைகள் அதிகளவில் உயிரிழக்கின்றன. உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகள், விவசாயிகளுடன் மோதலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. ஏனென்றால், யானைகள் நம்பியிருக்கும் காடுகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளால் அவை நெல், கரும்பு மற்றும் பிற விளைநிலங்களில் இறங்குகின்றன" என கூறினார்.