உலகின் 100 மாசுப்பட்ட இடங்களில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக உலக காற்று தர அறிக்கை (World Air Quality Report) தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டு இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லியை எடுத்துக்கொண்டால், தொடர்ந்து 4 ஆண்டுகளாக அதிகமாக காற்று மாசடைந்த தலைநகரமாக மாறியிருக்கிறது. கடந்த ஆண்டை விட 15 சதவீதம் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் பாதுகாப்பு வரம்பை விட, 20 மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.
சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த IQAIR என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் அடிப்படையில் உலக அளவில் காற்று மாசுபாட்ட நகரங்களில் ராஜஸ்தானின் பிவாடி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் டெல்லியின் கிழக்கு எல்லையான உத்தரபிரதேசத்தின் காசியபாத் உள்ளது. நான்காவது இடத்தில் தலைநகர் டெல்லி இடம்பெற்றுள்ளது. முதல் 15 நகரங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து 10 நகரங்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நகரங்கள் அனைத்துமே டெல்லியைச் சுற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் 100 நகரங்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் 63 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவையே. இதில் பாதி ஹர்யானா மற்றும் உத்தரபிரதேசத்தைச்சுற்றியே இருக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் காற்று தர நிர்ணயத்தை பின்பற்றினால், டெல்லி, லக்னோவைச் சேர்ந்தவர்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிக்கக் கூடும் என சிகாகோ பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் வாகன பயன்பாடுகள் காற்று மாசுபாடுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தவிர, நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைக் கழிவுகள், சமையல் மற்றும் கட்டுமானத் துறைக்கான கழிவுகள் இதற்கு காரணமாக அமைகின்றன. உண்மையில், கடந்த ஆண்டு நவம்பரில், கடுமையான காற்று மாசுபாடு காரணமாக டெல்லியைச் சுற்றியுள்ள பல பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பல தொழிற்சாலைகள் முதல் முறையாக மூடப்பட்டன.
இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள் உள்ளிட்ட பல கடுமையான உடல்நல பாதிப்புகள் தவிர, காற்று மாசுபாட்டால் ஒவ்வொரு நிமிடமும் 3பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு சென்னையைத்தவிர்த்து 6 மெட்ரோ நகரங்களில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
2021ம் ஆண்டு டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்ததை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. டெல்லியில் 21 சதவிகிதம் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2020ம் ஆண்டு இந்தியாவின் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது குறித்து வெளியிடப்பட்ட காற்றுத்தர அறிக்கை குறித்து கேட்டபோது, அதை மத்திய அரசு மறுத்தது. ''இந்த அறிக்கை சேட்டிலைட்டை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. கள நிலவரத்தை துல்லியமாக பதிவு செய்யப்படாத இரண்டாம் ரக தரவு இது'' என மத்திய அரசு கூறியிருந்தது.
இதற்கு பதிலளித்த IQAir நிறுவனம் "பிரத்தியேகமாக" தரை உணரிகளை அடிப்படையாகக் கொண்டு தான் அறிக்கை தயாரிக்கப்படுகிறது. உலகளவில் கிட்டத்தட்ட பாதி அரசு நிறுவனங்கள் இந்த க்ரவுண்ட் சென்சாரையே பயன்படுத்துவதாக நிறுவனம் கூறியிருந்தது.
நெல் அறுவடைக்குப் பிறகு பயிர் எரிப்பதால் ஏற்படும் புகை குறித்தும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கு அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. பயிர்களை எரிப்பதால் வரும் புகை டெல்லியின் 45 சதவீத காற்று மாசுபாட்டுக்கு காரணமாக அமைகிறது. விவசாயிகள் அறுவடைக்கும் அடுத்த பயிர் விதைப்பதற்கும் இடையே குறுகிய கால இடைவெளி இருப்பதால், தழைகளை அகற்றுவதற்காக இதைச் செய்கிறார்கள்.
2014-15 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் டெல்லி என்றுஉலக சுகாதார நிறுவனம் அறிவித்த பிறகு, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய இரண்டையும் ஒரே கட்சியான ஆம் ஆத்மி ஆட்சி செய்ய உள்ளது. இந்த ஆண்டு முதல் காற்று மாசுபாட்டைக் குறைக்க ஆம் ஆத்மி என்ன செய்கிறது என்பதை உற்றுநோக்க வேண்டியிருக்கிறது. டெல்லி துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியா, ''விவசாயிகளை சொத்தாக கருத வேண்டும் என்று கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.