சிறப்புக் களம்

பாகிஸ்தானை இந்தியா போர்விளிம்பில் நிறுத்திய நாள் - புல்வாமா தாக்குதலின் 3ம் ஆண்டு!

பாகிஸ்தானை இந்தியா போர்விளிம்பில் நிறுத்திய நாள் - புல்வாமா தாக்குதலின் 3ம் ஆண்டு!

Veeramani

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவையும் பாகிஸ்தானையும் போரின் விளிம்பிற்குக் கொண்டு சென்று, தேசத்தையே அதிர்ச்சியில் உறையவைத்த புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட நாள் இன்று.

புல்வாமாவில் இந்திய பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பிலிருந்து நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலுக்காக ஒவ்வொரு இந்தியனும் கண்ணீர் வடித்த நாள் இன்று.

பதற்றம் கொள்ள வைத்த புல்வாமா:

பிப்ரவரி 14, 2019 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎஃப் கான்வாய் மீது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் பரபரப்பு நிலவியது. இரு நாடுகளின் எல்லைப்பகுதிகளில் போர் மேகம் சூழ கடுமையான பதட்டம் நிலைகொண்டது. இந்திய தனது படைகளை தாக்குதலுக்கு ஆயத்தமாக தயார் நிலையில் வைத்திருந்தது.

நேரம் குறித்து தாக்கிய இந்தியா:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை போர்ச்சூழலுக்குள் தள்ளிய புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதில் அளிக்கும் நேரம், இடம் மற்றும் சூழ்நிலையை தேர்வு செய்ய பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அனுமதி வழங்கினார். அதன் பிறகு, சுமார் இரண்டு வார காலம் எல்லைப்பகுதியில் கடுமையான பரபரப்பு நிலவியது. எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதலை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இரு நாடுகளுக்கு இடையேயேயான போர்ச்சூழல் காரணமாக உலக நாடுகளும் இவ்விவகாரத்தை கவனமாக உற்றுநோக்கின.

இந்த சூழலில்தான் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலையில் ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம் மீது பயங்கரவாத எதிர்ப்பு வான்வழித் தாக்குதலை இந்தியா நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ விமானப்படையின் ஜெட் விமானங்கள், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர்.

தோல்வியில் முடிந்த பாகிஸ்தானின் பதில் தாக்குதல்:

பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய அடுத்த நாள், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானப்படை மேற்கொண்ட முயற்சியை இந்திய விமானப்படை முறியடித்தது. இந்த வான்வழி மோதலில், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் MiG-21 பைசன் விமானத்தை இயக்கி பாகிஸ்தான் விமானப்படையின் F-16 ஜெட்டை சுட்டு வீழ்த்தினார்.


இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானை சிறைப்பிடித்தனர், இதன்பின்னர் இந்திய அரசு கொடுத்த அழுத்தங்கள் காரணமாக அபிநந்தன் பாகிஸ்தானிடமிருந்து விடுவிக்கப்பட்டார்.

புல்வாமா தாக்குதலின் பங்களிப்பை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்:

இரு நாடுகளையும் போரின் விளிம்பிற்குக் கொண்டு சென்ற புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என்று 2020 ஆம் ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தான் மூத்த அமைச்சர் ஒருவர் ஒப்புக்கொண்டார். “நாங்கள் அவர்களின் சொந்த இடத்திற்கு சென்று இந்தியாவை தாக்கினோம். புல்வாமாவில் எங்களின் வெற்றி, இம்ரான் கான் தலைமையில் இந்த தேசத்தின் வெற்றியாகும், நீங்களும் நாங்களும் அந்த வெற்றியின் ஒரு பகுதி" என்று பாகிஸ்தான் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி நாடாளுமன்ற விவாதத்தின் போது கூறினார்.

40 வீரர்கள் வீரச்சாவு அடைந்து இந்திய தேசத்தின் எல்லைகளில் கடும் பதற்றத்தை உருவாக்கியதுடன் , 2019 நாடாளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உருவாக்கிய புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட நாள் இன்று.