சிறப்புக் களம்

‘காத்துல கூட ஊழல் நடக்குதா!’ 2ஜி Vs 5ஜி! லாபமா.. நஷ்டமா? யார் சொல்வது உண்மை? - ஓர் அலசல்

ச. முத்துகிருஷ்ணன்

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்ற நான்கு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களே! இந்த ஏலத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் பங்கேற்கவில்லை. ஆனால், இதுவரை தொலைத் தொடர்புத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானி குழுமம், இந்த ஏலத்தில் கலந்துகொண்டு அலைக்கற்றையைப் பெற்றிருப்பது விவாதத்திற்கு தீனி போட்டிருப்பதை மறுக்கவியலாது.

2ஜி என்பது என்ன?

2ஜி என்பது இரண்டாம் தலைமுறை வயர்லெஸ் டெலிபோன் தொழில்நுட்பம் ஆகும். ஜிபிஆர்எஸ் (General Pocket Radio Service) சேவையில் அதிகபட்சமாக 5 kbps வேகத்தையும் EDGE ( Enhanced Data Rates for GSM Evolution) சேவையில் அதிகப்பட்சமாக 40 kbps வேகத்தையும் 2ஜியால் வழங்க இயலும். இரண்டாம் தலைமுறை (2ஜி) செல்லுலார் டெலிகாம் நெட்வொர்க்குகள் 1991 இல் பின்லாந்தில் ஜிஎஸ்எம் தரநிலையில் முதன்முதலாக தொடங்கப்பட்டது. ஆனால் இந்த 2ஜி சேவைகள் இந்தியாவில் 2007க்கு பின்னர்தான் அறிமுகமானது.

எப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டது 2ஜி?

2008 ஆம் ஆண்டு ஆ.ராசா தொலைதொடர்பு அமைச்சராக இருந்தபோது தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றது. 122 புதிய 2ஜி ஒருங்கிணைந்த அணுகல் சேவை (UAS - Unified Access Service) உரிமங்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை (First Cum - First Serve) என்ற அடிப்படையில் வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு அலைக்கற்றைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைதான் 2ஜி அலைக்கற்றைகள் ஒதுக்கீட்டிற்கான அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த 2ஜி ஒதுக்கீட்டில் 18 நிறுவனங்களுக்கு மேல் பங்கேற்ற போதிலும், உரிமங்களை பெற்ற பின்னர் அவை கூட்டு நிறுவனங்களாக மாறி மொத்தம் 8 நிறுவனங்களாக இயங்கின. யூனினார், வீடியோகான், எம்டிஎஸ், ஐடியா, டாடா டோகோமோ ஆகியவை இந்த ஒதுக்கீட்டில் பங்கேற்ற முக்கிய நிறுவனங்கள் ஆகும்.

புகார் எழுந்ததன் காரணம் என்ன?

1. இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG) வினோத் ராய் தாக்கல் செய்த அறிக்கையில் 2ஜி ஒதுக்கீடு உரிமங்கள் சில தகுதியற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார். தொலைதொடர்பு துறையில் அனுபவம் இல்லாத யூனினார், எம்டிஎஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

2. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் 2ஜி அலைக்கற்றையை வெளிப்படையாக வழங்குமாறும், உரிமக்கட்டணத்தை திருத்துமாறும் 2007 நவம்பரில் எழுதிய கடிதத்தில் இருந்த பல பரிந்துரைகளை அமைச்சர் ராசா நிராகரித்ததாக புகார் எழுந்தது.

3. தொலைதொடர்பு அமைச்சகம் தனது இணையதளத்தில் 2007 செப்டம்பர் 25 அன்று மதியம் 3.30 முதல் 4.30 மணி வரை தாக்கல் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு உரிமம் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆவணங்களை சமர்பிப்பதற்கும் பணம் செலுத்துவதற்கும் சில மணி நேரம் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு முன்கூட்டியே இந்த தகவலை அமைச்சர் ராசா பகிர்ந்து இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

4. அமைச்சர் ராசா பல அரசு அதிகாரிகள், தொலைதொடர்பு நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கைகோர்த்து சதி செய்ததாகவும், ஸ்வான் (எம்டிஎஸ்) மற்றும் யூனிடெக் நிறுவனங்கள் உரிமம் பெறுவதை உறுதி செய்வதற்காக முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையை தன்னிச்சையாக செம்மைப்படுத்தியதாகவும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது.

5. 2ஜி அலைக்கற்றையை வெளிப்படையாக ஏலம் விடுவதற்குப் பதிலாக, அமைச்சர் ராசா அதை 2001 ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலையில் விற்றதால் அரசாங்கத்திற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG) வினோத் ராய் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். 2.4 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டிய அலைக்கற்றைகளை, 65 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் இந்த இழப்பு நேரிட்டு இருப்பதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

வழக்கின் பாதை:

2010 ஆம் ஆண்டு நவம்பரில் அமைச்சர் பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்த நிலையில், 2011 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 அன்று ஆ.ராசா காலத்தில் வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் “சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது” எனக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மறு ஏலம் நடத்தி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. யுனிடெக் வயர்லெஸ், ஸ்வான் டெலிகாம் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்களுக்கு ரூ. 5 கோடி அபராதமும் அன்றைய தினம் விதிக்கப்பட்டது. அதே ஆண்டு மே 9 அன்று ஜாமின் கோரி விண்ணப்பித்த ஆ.ராசாவுக்கு, மே 15 அன்று ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.

ஆ.ராசா அளித்த விளக்கம்:

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிரான 2ஜி அலைகற்றை முறைகேட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகி வாதாடியது வேறு யாருமல்ல! கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அதே ஆ.ராசாதான்! 1.76 லட்சம் கோடி ரூபாயை தலைமை தணிக்கை அதிகாரி எப்படி தருவித்தார் என்பதை நீதிமன்றத்தில் கேள்வியாக எழுப்பினார். “யூகத்தின் அடிப்படையில் கூறப்பட்ட விலையில் இலாபம் நஷ்டம் கணக்கிடுவது எப்படி சரி? அதிக நிறுவனங்களை அனுமதிக்கவும், போட்டிச் சூழல் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சேவை வழங்கும் நோக்கில்தான் புதிய நிறுவனங்களுக்கும் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. (அப்போதைய) பிரதமர் மன்மோகன் சிங்கும், இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு உண்மை என்று நம்பி, பல முரண்பட்ட தகவல்களை தெரிவித்து குழப்பத்தை பூதாகரமாக்கிவிட்டார். ஏலம் எப்படி நடைபெற வேண்டும் என்பதை நான் முடிவு செய்யவில்லை. தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையில் அடிப்படையில்தான் 2ஜி ஒதுக்கீடு நடைபெற்றது” என்று தெரிவித்தார் ஆ.ராசா.

இதுஒருபுறம் இருக்க.. ‘2ஜி- அவிழும் உண்மைகள்’ என்ற புத்தகத்தையும் ஆ.ராசா எழுதி இருந்தார். தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற வழக்கு எடுத்துச் செல்லப்பட்ட முறை, நடைபெற்ற முறை, வேண்டுமென்றே உண்மைகள் மறைக்கப்பட்ட முறை இவற்றைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த நூலை அவர் எழுதியிருந்தார்.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

2017 ஆம் ஆண்டு டிசம்பரில் புதுடெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்த நீதிமன்றம், “இவ்வழக்கில் அடிப்படை ஆதாரம் கூட இல்லை” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. “சிலர் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உண்மைகளை கலைநயத்துடன் ஒழுங்காக வடிவமைத்து ஒரு மோசடியை உருவாக்கி வானளவுக்கு, அடையாளம் காண முடியாத அளவுக்கு விஷயங்களை மிகைப்படுத்தி இருக்கின்றனர்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 2018 மார்ச்சில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி என்பது என்ன?

5ஜி என்பது ஐந்தாம் தலைமுறை வயர்லெஸ் டெலிபோன் தொழில்நுட்பம் ஆகும். முந்தைய வெர்ஷனான 4ஜியை விட 20 மடங்கு அதிவேகத்தில் 5ஜி சேவையாற்றும் என்று கூறப்படுகிறது. 4ஜி தரவிறக்கும் வேகம் 150 mbps ஆக இருக்கும் நிலையில், 5ஜி ஆனது 10Gbps அளவிற்கு வேகத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. பதிவேற்ற வேகத்தை பொறுத்தவரை 4ஜி பதிவேற்றும் வேகம் 50 mbps ஆக இருக்கும் நிலையில், 5ஜி ஆனது 1 Gbps அளவிற்கு வேகத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

எப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டது 5ஜி?

2022 ஆம் ஆண்டு (இந்தாண்டு) 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடைபெற்றது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா, அதானியின் நிறுவனம் ஆகிய நான்கு நிறுவனங்கள் மட்டுமே இந்த ஒதுக்கீட்டில் பங்கேற்றன. ஏல அடிப்படையில் அதிக தொகைக்கு கேட்பவருக்கு ஒதுக்கீடு செய்யும் முறை இம்முறை பின்பற்றப்பட்டது. ஏலத்தின் முதல் நாள் அன்றே ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அலைக்கற்றைகள் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏலம் மந்த நிலையாக சென்றது. இதனால், ஒவ்வொரு நாளும் ஏலத்தை மத்திய அரசு நீட்டித்து வந்தது. இந்நிலையில், மொத்தமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் விடுக்கப்பட்டிருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏலம் எடுத்தது யார் யார்? எவ்வளவு தொகைக்கு?

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னணியில் உள்ளது. மொத்தமாக 88,078 கோடி ரூபாய்க்கு ஜியோ ஏலம் எடுத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பார்தி ஏர்டெல் நிறுவனம் 43,084 கோடி ரூபாய்க்கும், வோடாஃபோன் ஐடியா நிறுவனம் 18,799 கோடி ரூபாய்க்கும் 5 ஜி அலைக்கற்றையை ஏலம் மூலம் வாங்கியுள்ளன. அதானியின் நிறுவனம் 212 கோடி ரூபாய்க்கும் 5ஜி அலைக்கற்றை உரிமங்களை வாங்கியுள்ளது. இந்த ஆண்டு மொத்தமாக 72 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் சுமார் 4.3 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

5ஜி ஒதுக்கீட்டில் முறைகேடு - ஆ.ராசா:

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். “கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே 30 மெகா ஹெர்ட்ஸ் 2ஜி அலைக்கற்றையை தாங்கள் ஏலம் விட்டோம். ஆனால் அந்த ஏலத்தால் நாட்டிற்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அப்போது இந்திய தலைமைக் கணக்காயராக இருந்த வினோத் ராய் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது 5 ஜி அலைக்கற்றை சேவையில் 51 ஜிகா ஹெர்ட்ஸ் ஏலம் விடப்பட்டபோதும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்தான் மத்திய அரசுக்கு வருமானம் வந்துள்ளது.

சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வரை விலைபோக வேண்டிய 5ஜி அலைக்கற்றை ஏலம், மிகக்குறைவாக சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை மட்டுமே ஏலம் போயிருப்பதன் பின்னணி என்ன? இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். 5ஜி அலைக்கற்றை சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஏலம்போகும் என மத்திய அரசு தரப்பிலேயே கூறப்பட்ட நிலையில் மீதிப்பணம் எங்கே?” என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

5ஜி முணுமுணுப்புகள்:

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்ற ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களே! இந்த ஏலத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் பங்கேற்கவில்லை. ஆனால், இதுவரை தொலைத் தொடர்புத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானி குழுமம், இந்த ஏலத்தில் கலந்துகொண்டு அலைக்கற்றையைப் பெற்றிருப்பது விவாதத்திற்கு தீனி போட்டிருப்பதை மறுக்கவியலாது.

மத்திய அமைச்சர் என்ன சொன்னார்?

“5ஜிக்கு ஒதுக்கப்பட்ட 72.098 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளில், கிட்டத்தட்ட 71 சதவீதம் அதாவது 51.236 ஜிகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் நான்கு நிறுவனங்களால் ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம் போயுள்ளது. இது நாடு முழுவதற்கும் 5ஜி சேவை போதுமானதாகும். அரசுக்கு இந்த ஏலம் லாபகரமாகவே அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார் மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

யார் சொல்வது உண்மை?

2009-14 கால கட்டத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக பா.ஜ.க-வுக்கு 2ஜி விவகாரம் கிடைத்தது. அதேபோல, தற்போது 5ஜி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்க வாய்ப்பு இருக்கிறது. பொதுவெளியில் நேரடியாக குற்றச்சாட்டு எழுந்துவிட்ட பிறகு, 5ஜி ஏலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மக்களுக்கு மத்திய அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும். அப்போது காங்கிரஸ் கட்சியிடம் இதை வலியுறுத்திய பாஜக, தான் ஆளுங்கட்சியாக இருக்கும்போது விளக்கம் அளிப்பது அறமான செயலாக இருக்கும். அதே வேளையில் 2ஜி முறைகேடு விவகாரத்தின் மேல்முறையீடு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதன் போக்கு எப்படி இருக்கும்? இறுதித் தீர்ப்பு எப்படி வரும்? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.