கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இயக்குநர் ஷங்கர் இதனை இயக்கி இருந்தார். ஊழலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இதன் திரைக்கதை இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க செய்தது. இந்தப் படம் 1996 மே9 தமிழில் வெளியானது. இன்றுடன் இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதனை கமல்ஹாசனின் ரசிகர்கள் மிக உற்சாகமாக சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் 22 ஆண்டு கொண்டாடத்தையொட்டி இப்படத்தை பற்றிய அரிதான ஐந்து தகவல்களை அறிந்து கொள்வோமா?
‘இந்தியன்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் இந்தியன் தாத்தா கமல்ஹாசன் தன் மகனை கொலை செய்வதற்காக ஏர்போர்டிற்கு புகுந்துவிடுவார். தப்பித்து செல்லும் இளம் கமலை விரட்டி சென்று கத்தியால் குத்துவார். இறுதியில் இந்தியன் தாத்தா கமல் சென்ற ஜீப் பெட்ரோல் டேங்கர் லாரியில் மோதி விபத்துக்குள்ளாகும். அந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்யும் அதிகாரி, தாத்தா கமல் விபத்தில் சாகவில்லை. அவர் தப்பித்துவிட்டார் என கண்டறிவார். அந்தக் காட்சி அப்படியே இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ஜப்பானில் ஏற்பட்ட விமான விபத்தில் போஸ் சிக்கி இறந்துவிட்டதாக அன்றைய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் சாகவில்லை. உயிருடன்தான் இருக்கிறார் என்றும் நம்பப்பட்டது. அந்தக் கதையை பின்புலமாகக் கொண்டே ‘இந்தியன்’ க்ளைமேக்ஸை ஷங்கர் வடிவமைத்திருந்தார்.
இந்தப் படத்தில் தாத்தா கமல்ஹாசனுக்கு ஜோடியாக சுகன்யா நடித்திருந்தார். மேலும் இளம் கமலுக்கு ஊர்மிளாவும், மனிஷா கொய்ராலாவும் ஜோடியாக நடித்திருந்தனர். ஆனால் இயக்குநர் ஷங்கர் முதலில் சுகன்யாவின் கதாப்பாத்திரத்திற்கு ராதிகாவைதான் அணுகினார். ஆனால் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மும்முரமாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. ஆகவே சுகன்யாவை அந்த கேரட்டரில் நடிக்க வைத்தார் ஷங்கர். அதேபோல் ஷில்பா ஷெட்டியை ஊர்மிளாவின் கேரக்டரிலும் ஐஸ்வர்யா ராயை மணிஷா கொய்ராலாவின் கேரக்டரிலும் நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. அவர்கள் இருவரும் வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருந்ததால் நேரம் ஒதுக்க முடியவில்லை. எனவே மணிஷாவும், ஊர்மிளாவும் உள்ளே வந்தார்கள்.
‘இந்தியன்’படம் 1996ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பட்டது. ஆனால் தேர்வாகவில்லை. அதேபோல் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்காக அகாதெமி அவார்டுக்கு அனுப்புவதாக இருந்தது. ஆனால் அனுப்பப்படவில்லை. அதனால் என்ன? இப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. நடிகர் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான விருதினை வென்றார். சிறந்த கலை இயக்கத்திற்காக தோட்டா தரணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. பெஸ்ட் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸூக்காகவும் விருது கிடைத்தது.
இதன் ஒரினினல் தலைப்பையே நடிகர் கமல்ஹாசன் ஹிந்தியில் பயன்படுத்த வேண்டினார். ஆனால் அந்தத் தலைப்பு கிடைக்கவில்லை. அந்தத் தலைப்புக்கான உரிமை சன்னி தியோல் இடம் இருந்தது. ஆகவே இந்தியில் ‘ஹிந்துஸ்தானி’ எனும் தலைப்பில் இப்படம் டப் செய்யப்பட்டது.
கமல்ஹாசனின் திரை வாழ்வில் மிக முக்கியமான கதாப்பாத்திரமாக இந்தியன் தாத்தா கதாப்பாத்திரம் அமைந்தது. அந்தக் கதாப்பாத்திரத்திற்காக ஹாலிவுட் தரத்தில் அவருக்கு மேக் அப் போடப்பட்டது. கிராஃபிக் டிசைனைர் வென்கி தான் வேலை செய்த படங்களிலேயே மிக சிரமான திரைப்படம் இந்தியன் என்று கூறியிருந்தார். சுபாஷ் சந்திரபோஸை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் பாத்திரத்திற்காக நிறைய தரவுகளை ஆவணக்காப்பகத்தில் இருந்து திரட்டியதாக தெரிவித்திருந்தார்.