சிறப்புக் களம்

‘ஹேராம்’ 22 ஆண்டுகள் நிறைவு: சாகேத் ராமின் உலகம் குறித்த மீள்பார்வை!

‘ஹேராம்’ 22 ஆண்டுகள் நிறைவு: சாகேத் ராமின் உலகம் குறித்த மீள்பார்வை!

EllusamyKarthik

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன். நடிப்பு மட்டுமல்லாது கலைத்துறை சார்ந்த பல்வேறு பணிகளில் எப்போதும் மும்முரமாக உழைத்துக் கொண்டே இருப்பவர் அவர். தனது திரைப்படங்கள் மூலம் நுட்பமாக அரசியல் பேசி வந்த கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் அரசியல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். 

21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவரது நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம்தான் ‘ஹேராம்’. இந்த படத்தை படைத்த பிரம்மாவும் அவரேதான். இந்த படத்தின் கதையை எழுதி, இயக்கியதும் அவரே. தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாகி இருந்தது. நடிகர் ஷாருக்கான் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இதே நாளில் கடந்த 2000-மாவது ஆண்டு இந்த படம் வெளியாகி இருந்தது. வரலாற்றை பின்புலமாக கொண்ட திரைப்படம் இது. படம் வெளியான போது பார்வையாளர்களின் வரவேற்பை பெற தவறியிருந்தாலும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. அதோடு இந்திய திரைப்பட கூட்டமைப்பு இந்த படத்தை ஆஸ்கருக்கு அனுப்பியிருந்தது. இருந்தாலும் படம் அந்த முறை விருதுக்கான பரிந்துரையில் இடம் பெறவில்லை. படத்தில் கமல்ஹாசன் ‘சாகேத் ராம்’ என்ற பாத்திரத்தில் (Protagonist) நடித்திருந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைவாதம் மற்றும் காந்தியின் படுகொலையை ஒட்டிய சாகேத் ராமின் வாழ்க்கையை குறித்ததுதான் கதைகளம். இந்த படம் பேசிய சித்தாந்தம் 22 ஆண்டுகள் கடந்த பின்பும் சமகால சூழலுக்கு பொருந்தி செல்வதுதான் விந்தையாக உள்ளது. அதனால்தான் கட்டுரையின் தொடக்கத்தில் கமல்ஹாசனை பிரம்மா என சொல்ல வேண்டி இருந்தது. வாருங்கள் சாகேத் ராமின் உலகத்திற்கு பயணிப்போம்.

ஆளுக்கொரு சாமி வேணும்னு நினைக்குற மனித நாகரிகம் இல்ல... 

‘ஹேராம்’ திரைப்படம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு படுக்கையில் வீற்றிருக்கிறார் வயது முதிர்ந்த பிராமணரான சாகேத் ராம். அவரது பார்வையிலிருந்து கதை பின்னோக்கி நகர்கிறது. மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சி தளத்தில் நண்பர்கள் இருவர் கூட்டாக அகழ்வு பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் சாகேத் ராம், மற்றொருவர் அவரது நண்பர் அம்ஜத் அலி கான் (ஷாருக்கான்). அப்போது வெள்ளையர் ஒருவர் அந்த இடத்திற்கு வந்து பணியை நிறுத்துமாறு சொல்கிறார். அதற்கான காரணம் பாகிஸ்தான் எனவும் சொல்கிறார். நாட்டின் வரலாற்றை மாற்றி அமைத்த கதையை கருவாக கொண்டது திரைக்கதை என்பது இங்கிருந்து ஆரம்பமாகிறது. 

“என்ன சிவிலைசேஷன் (மனித நாகரிகம்). பெரியவங்க விளையாட ஆளுக்கொரு சாமி வேணும்னு நினைக்குற சிவிலைசேஷன் இல்ல” என வசனம் பேசுகிறார் அம்ஜத். அடுத்த சில நிமிடங்களில் இந்தியாதான் என் நாடு. நான் ஏன் பாகிஸ்தான் போக வேண்டுமெனவும் அம்ஜத் சொல்கிறார். கூடவே ஆம்பூரை சேர்ந்த தமிழ் பேசும் அவரது மனைவியும் இருக்கிறார். 

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிவை விரும்பும் மக்கள். அதனால் கொல்கத்தாவில் ஏற்படும் கலவரம் என நகர்கிறது அடுத்த காட்சி. அந்த கலவரத்தில் சாகேத் ராமின் மனைவி உயிரிழக்கிறார். அந்த ஆத்திரத்தில் தன் மனைவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை துப்பாக்கியால் உக்கிரமாக சுட்டு தள்ளுகிறார் சாகேத் ராம். அந்த இடத்தில் ஒரு வசனம் வருகிறது. அது இந்துத்வாவை லேசாக அசைத்துப் பார்க்கிறது. “நான் ஒரு கொலைகாரன். கோவத்துல கொலை செய்யும் போது வந்த தைரியம் தற்கொலைக்கு வர மாட்டேங்குறது. நீங்களாம் ஏதாவது காரணம் சொல்லிக்கிறீங்க. கடவுள்.. கொள்கைன்னு” என ஸ்ரீராம் அப்யங்கரிடம் பேசுகிறார் சாகேத் ராம். அப்போது இதற்கெல்லாம் காரணம் காந்தி என்கிறார் அப்யங்கர். 

டெல்லியில பெரிய விவாகரத்து நடந்துகிட்டு இருக்கு!

மனைவியை இழந்த சாகேத் தமிழ்நாட்டில் உள்ள தனது பூர்வீக வீட்டிற்கு திரும்புகிறார். அங்கு அவர் வீட்டு பெரியவர்கள் வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். தாலியில் பூசப்பட்ட மஞ்சளின் ஈரம் காய்வதற்குள் ஒரு வசனம் பேசுவார் சாகேத். அது இந்த தேசத்தின் மீது அவர் வைத்திருக்கும் நேசத்தின் வெளிப்படும். “இங்க சாவகாசமா எண் கல்யாணம் நடந்துகிட்டு இருக்கு. டெல்லியில் பெரிய விவாகரத்து நடந்துகிட்டு இருக்கு. World’s Biggest Political Divorce” என சொல்வார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் எல்லையை பிரித்த Cyril Radcliffe பெயர் கூட சுட்டிக் காட்டப்படுகிறது. 

அடுத்த காட்சியில் “நாம பட்டினி கிடந்தா மயக்கம்தான் வரும். ஆனா மகாத்மா பட்டினி கிடந்தா சுதந்திரம் வரும்” என ஒரு வசனம் வரும். படத்தில் காந்தியை போற்றிப் பாடும் முதல் வசனம் இது.

ஜனங்களுக்கு ஞாபக சக்தியே கிடையாது! 

“ஜனங்களுக்கு ஞாபக சக்தியே கிடையாது. உனக்கும் எனக்கும் மட்டும்தான் அந்த வியாதி. பிரக்ஞை இல்லாத இந்த ஆட்டுமந்தை, ஆட்டுப்பால் குடிக்கிற இந்தத் தாத்தா பின்னாடி போய்க்கிட்டிருக்கு. தாத்தா பக்ரீத் கொண்டாட போய்க்கிட்டிருக்கார் எனத் தெரியாது இந்த மட மந்தைக்கு. பிரஜைகள் நாட்டு நடப்பை நாடகமா பார்க்கிறாங்க. இந்த நாடகம் பாக்குறதுக்கு விமர்சகர்களுக்கு அனுமதி கிடையாது” என மதவாதத்தை தீவிரமாக பின்பற்றும் அப்யங்கர் பேசுவார். 

ஒரு காட்சியில் பழிக்குப்பழியாக இல்லை என்றாலும் அடையாள சின்னமாக அகிம்சையை போற்றும் மகாத்மாவை கொல்ல திட்டமிடப்படுகிறது. அப்போது மதவாதம் பிடித்தவர்களால் முதல் மனைவியின் இழப்பு, நண்பனுக்கு ஏற்பட்ட இழப்பு மாதிரியானவற்றை சொல்லி மூளை சலவை செய்யப்படுகிறார் சாகேத் ராம். 

நண்பனின் மரணம் காரணமாக காந்தியை கொல்லும் அசைன்மென்ட் சாகேத் கைகளுக்கு வருகிறது. 

அகிம்சையால் ஈர்க்கப்படும் சாகேத் ராம்!

காந்தியை கொல்ல டெல்லிக்கு செல்லும் சாகேத் அங்கே காந்தியின் அகிம்சையால் ஈர்க்கப்படுகிறார். இந்துத்வாவை தூக்கிப்பிடிக்கும் சாகேத் ராம். மனிதத்துவத்தை தூக்கிப்பிடிக்கும் அம்ஜத். “இந்தியாதான் என் நாடு. நான் விதேசி நானா நீ சுதேசி. நாங்க யுத்தம் செய்யல. எங்கள தற்காத்துக் கொள்கிறோம். நான் அந்த மிருகத்த பார்த்தது இல்லை. எனக்கு என் அண்ணன் றம் மட்டும்தான் தெரியும்” என உயிர் விடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பேசுகிறார் அம்ஜத்.

யார் மகாத்மா?  

அஜ்மத்தின் மரணத்திற்குப் பின்னர் யார் மகாத்மா? என காந்தி, சாகேத் ராமுடன் பேசி விவாதிக்கிறார். அகிம்சையின் பால் ஈர்க்கப்படும் சாகேத் ராம் காந்தியிடம் தான் எதற்காக வந்துள்ளேன் என்பதை சொல்ல முயல்கிறார். இருந்தாலும் அதற்குள் காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக் கொல்கிறார். பின்னர் காந்தியத்தின் பால் ஈர்க்கப்படுகிறார் சாகேத் ராம். காந்தியின் கண் கண்ணாடி மற்றும் காலணியையும் தன்னுடன் அவரது நினைவாக வைத்திருக்கிறார் ராம். 

படத்தின் நிறைவின் போது “காந்தியை சுட்டுக்கொன்றது இஸ்லாமியர் அல்ல” என சொல்லப்படுகிறது. படம் நிறைவு பெறுகிறது. 

இந்த படம் பேசிய அரசியல் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் உண்டு. படம் இந்துத்வாவிற்கு ஆதரவு என்று ஒரு சாராரும், இல்லை என்று ஒரு சார்பினரும் சொல்வதுண்டு.