இந்திய அளவில் ‘பாகுபலி 2’ ஏற்படுத்திய சாதனையை ‘2.0’ திரைப்படம் முறியடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
பெரிய எதிர்பார்ப்புகளோடு இந்த வாரம் வெளியாக உள்ளது ‘2.0’. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ வெற்றியை தொடர்ந்து மிக பிரம்மாண்டாக தயாராகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏறகுறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் படத்தின் வருகைக்காக ரஜினியின் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.
ஏன்? இந்திய சினிமா உலகமே ‘2.0’வின் வருகையை எதிர்பார்த்தே உள்ளது எனலாம். ஏனெனில் இந்தியா போன்ற ஒரு நாட்டில் இவ்வளவு பொருட்செலவுடன் தயாராகும் படத்தின் வசூல் என்பது வெளியாகும் குறிப்பிட்ட படத்துடன் முடிந்து போகப் போவதில்லை. அதன் வியாபாரம் இந்திய சினிமா மார்கெட்டை பற்றிய ஒரு புரிதலை உருவாக்க உதவக்கூடும். அதை வைத்தே பல நிறுவனங்கள் மேலும் பணத்தை முதலீடு செய்ய முன் வருவார்கள். ஆகவே அந்தளவில் ரஜினியின் ‘2.0’ திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்.
இந்தப் படம் இந்திய மதிப்பில் 500 கோடி பட்ஜெட் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது உலக வர்த்தக சந்தையில் 75 மில்லியன் டாலர். கூடவே ஒரு ரோபோட் சினிமா. ஒலி அமைப்பிலும் காட்சி அமைப்பிலும் இந்திய திரை ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய ஒரு அனுபவத்தை வழங்க உள்ள சினிமா என்பது கூடுதல் சிறப்பு.
லைகா நிறுவனம் எதிர்பார்த்ததை போலவே வெற்றிகரமான வியாபாரத்தை முடித்திருக்கிறது. அவர்கள் எதிர்பார்த்த எல்லா ஏரியாக்களும் நல்ல விலையில் விற்பனையாகியுள்ளதாக செய்திகள் அடிப்படுகின்றன.
வெளியாகியுள்ள நம்பத்தகுந்த செய்திகளின் படி ‘2.0’ இந்தியா முழுமைக்கு 6600ல் இருந்து 6800 வரையான திரைகளில் திரையிடப்பட உள்ளது. அதில் மட்டும் 17 ஐமாஸ் தியேட்டர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது இந்திய அளவில் இவ்வளவு திரைகளில் வேறு எந்தப் படமும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன் ‘பாகுபலி 2’ திரைப்படம் 6500 திரைகளில் திரையிடப்பட்டிருந்ததே பெரிய சாதனையாக கூறப்படுகிறது. ஆக, ‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை ‘2.0’ விரைவில் முறியடிக்க உள்ளது.
படம் வெளியாகவுள்ள திரைகளின் எண்ணிக்கை:
வடமாநிலங்களில் மட்டும்: 4000 முதல் 4100 வரை
ஆந்திரா மற்றும் தெலங்கானா: 1200 முதல் 1250 வரை
தமிழ்நாடு: 600 முதல் 625 வரை
கேரளா: 500 முதல் 525 வரை
கர்நாடகா: 300
ஆக, மொத்தம் 6600 முதல் 6800 வரை தோராயமாக திரையிடப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த ‘2.0’ படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. அதாவது இந்தப் படத்தின் மொத்த நேரம் 2 மணிநேரம் 28 நிமிடங்கள். படத்தின் முதல் பகுதி மட்டும் 69 நிமிடங்கள். அதாவது 1 மணிநேரம் 9 நிமிடங்கள் ஆகும். அதேசயம் இரண்டாம் பகுதி 79 நிமிடங்கள் மட்டுமே ஆகும். அதாவது 1 மணிநேரம் 19 நிமிடங்கள் ஆகும்.
‘2.0’ படத்தை பொருத்தவரை இந்தியா முழுவதும் 32 ஆயிரம் முதல் 33 ஆயிரம் வரை காட்சிகள் திரையிடப்பட உள்ளன. அந்தளவுக்கு இந்தப் படத்தின் காட்சிகள் வெளியானால் ‘பாகுபலி 2’ படத்தின் சாதனையை தட்டிப்பறிக்கும். ஏனெனில் இந்தியா முழுமைக்கு ‘பாகுபலி 2’ 31 ஆயிரம் காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் ‘2.0’ இந்திய அளவில் முதல் வசூல் மட்டும் 100 கோடியை சம்பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் மட்டும் ஒருநாள் வசூல் 35 கோடியை எட்டலாம் என்கிறார்கள். இதற்கு முன் வெளியான ‘பாகுபலி 2’ இந்திய அளவில் முதல் நாள் மட்டும் 125 கோடியை வசூலித்தது. ஆக, ‘2.0’ வேறுவிதமான அனுபவம். அது திரையில் ஏற்படுத்த உள்ள மேஜிக் மூலம் முன்பே கணித்திருக்கும் 100 கோடியை தாண்டலாம். அதே சமயம் அதிக திரையிடம் என்பதால் நிச்சயம் வசூல் பட்டையைக் கிளப்பலாம். ஆக, ‘பாகுபலி 2’வின் சாதனை சரித்திரம் பின்னுக்கு தள்ளப்படாலம் என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.