சிறப்புக் களம்

காஞ்சிபுரம்: நீர்த்தேக்கம் கட்ட ஏரியின் கரையை உடைத்த அதிகாரிகள்; எதிர்க்கும் விவசாயிகள்

காஞ்சிபுரம்: நீர்த்தேக்கம் கட்ட ஏரியின் கரையை உடைத்த அதிகாரிகள்; எதிர்க்கும் விவசாயிகள்

நிவேதா ஜெகராஜா

12 அடி உயரம் கொண்ட ஏரிக்கரையை, இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு வெட்டிய நிலையில், கரை இல்லாத காரணத்தினால் மழைக் காலத்தில் ஏரியில் இருந்து நீர் வழிந்தோடி சுமார் 100 ஏக்கர் விவசாய நிலம் முழுவதும் அழிந்து போகக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஒரத்தூர் பகுதியில் வெள்ளத்தடுப்பு பணியின் கீழ் ரூ 55.85 கோடி மதிப்பீட்டில், ஒரத்தூர் ஏரி, ஆரம்பாக்கம் ஏரி மற்றும் ஒரத்தூர் கிளையாற்றில் உள்ள தரிசு நிலங்களை இணைத்து சுமார் 760  ஏக்கர் பரப்பளவில் புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இந்த புதிய நீர்தேக்கத்தில் சுமார் 750 மில்லியன் கன அடி வெள்ளநீர் சேரிக்கப்பட உள்ளது.

இதன்மூலம் கிடைக்கும் நீர்தேக்கத்தை அம்மணம்பாக்கம், மற்றும் படப்பை ஏரிகளின் வழியாக மணிமங்கலம் ஏரியுடன் இணைத்து, உள்படுகை நீர்மாற்று கால்வாயும் அமைக்கப்பட உள்ளது.  இந்த திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு மணிமங்கலம் ஏரியில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் சென்னை மாநகர் மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த வழிவகை ஏற்படும். முதற்கட்டமாக, நீர்த்தேக்கத்துக்கு கரை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. அதேபோல ரூ.4 கோடியில் செக் டேம், நீர்த்தேக்கம், மதகு போன்றவையும் அமைக்கப்பட உள்ளன.

இந்த ஏரியில் இருந்து அம்மணம்பாக்கம் மற்றும் படப்பை ஏரிக்கு 280 மீட்டர் நீளத்தில் உயர்மட்ட கால்வாய் அமைத்து தண்ணீரை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் பணி நடைபெற்றுக் கொண்டிருக்க, தோராயமாக இரண்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு பழங்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 12 அடி உயரம் கொண்ட ஒரத்தூர் ஏரியின் கரை முழுவதுமாக அகற்றப்பட்டு, அந்த கரையின் மண்ணை கொண்டு கட்டுமான பணிக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஏனென்றால் கடுமையான மழை பெய்யும்போது ஒரே நாளில் ஒரத்தூர் ஏரி நிரம்பி விடும். தற்போது இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏரிக்கரை முழுவதுமாக அகற்றப்பட்டு இருப்பதனால், ஏரி நீரானது ஏரியின் உள் தேங்கி நிற்காமல் அடையாறு ஆற்றில் வீணாக சென்று கலக்கும். தற்போது அடையாறு ஆற்றில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர் மழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அடையாறு ஆற்றில் தற்போது கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிக்கும் பெருத்த சேதம் ஏற்படும் சூழல் ஏற்படும்

‘இரண்டு ஏரியை இணைக்கும் பணிக்கு உண்டான கரையை முதலில் அமைத்து விட்டு, அதன் பிறகு ஒரு ஏரியில் இருக்கக்கூடிய கரையை அப்புறப்படுத்தி இருந்தால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது’ என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். தற்போது இப்பணி முழுமை அடைவதற்கு 38 ஹெக்டேர் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பொதுப்பணித்துறை கையகப்படுத்த வேண்டும். அந்தப் பணியும் தற்போது மந்தமான நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு கரைவெட்டி எடுக்கப்பட்ட காரணத்தினால் மழை நீரானது தேங்கி நிற்காமல் விவசாயிகளுடைய விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால் விளைநிலங்கள் அனைத்தும் ஏரியாக மாறிவிடும். அப்படி நடந்தால், விவசாயிகளின் நிலம் அனைத்தும் அழிந்துபோகக்கூடிய அபாயம் ஏற்படுமென விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த விவசாயியான வெங்கட்ராமன் நம்மிடம் பேசுகையில், “15 அடி உயரம் கொண்ட கரையை இரண்டு அடி வரை கரைத்து விட்டார்கள். தொடர் மழை பெய்தால், ஒரே நாளில் கரை இல்லாத காரணத்தினால் வெள்ளநீர் விவசாய நிலத்தில் வழிந்து ஓடிவிடும். மழைக்காலங்களில் ஏழு ஏரிகளின் நீர் நிரம்பி, இந்த ஏரிக்கு வரும். அதனால் ஒரே நாளில் இந்த ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி விடும். மழை நீரினால், விவசாயம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தற்சமயம் யாரும் விவசாயம் செய்யாமல் இருக்கிறோம். எங்களுடைய வாழ்வாதாரமே இந்த விவசாயத்தை நம்பியே தான் உள்ளது. ஆகவே விவசாய நிலம் எந்த வகையிலும் பாதிக்காத வண்ணம் உரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகத்தை தொடர்பு கொண்டு கேட்கும்போது, "2 ஏரிகளின் கரையை இணைப்பதற்கு அங்குள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரிரு வாரங்களில் வருவாய்த்துறை மூலம் விவசாய நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைக் காலத்திற்குள் ஏரியின் கரையை இணைப்பதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எதுவாய் இருப்பினும் விவசாய நிலத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார். மேலும் மழை நீரை தேக்கி வைக்க தேவைப்படும் பட்சத்தில் புதிய திட்டத்தைத் அமல்படுத்தவும் தாங்கள் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

- பிரசன்னா