“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
நாம் இப்போது சுற்றிப்பார்க்கப் போவது ‘கேரளாவின் ஊட்டி’ என செல்லமாக அழைக்கப்படும் வயநாடு. பசுமையான மலைகள், வயல்வெளிகள், பாரம்பரியமிக்க இடங்கள் என வயநாட்டில் பார்க்க வேண்டியதை சொல்லிக் கொண்டே போகலாம். சுற்றுலாவை சந்தோஷமாகக் கழிக்க கேரளாவில் பல இடங்கள் உள்ளன. அதில் வயநாடு கொஞ்சம் ஸ்பெஷல் ஆனது.
மசாலா மற்றும் நறுமண தோட்டங்களுக்கும் வன உயிரினங்களுக்கும் பிரசித்தி பெற்ற வயநாட்டைச் சுற்றிலும் காடுகள் சூழ்ந்துள்ளது. தமிழ்நாட்டின் முதுமலை சரணாலயமும் கர்நாடகாவின் பந்திபூர் சரணாலயமும் வயநாட்டில் தான் சந்திக்கின்றன. இதன் காரணமாக வன விலங்குகள் எந்த தொந்தரவுமின்றி நிம்மதியாக காட்டில் வலம் வருகின்றன. தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்துள்ள வயநாடு இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது.
“இந்தியாவின் நறுமணத் தோட்டம்” என வயநாடு அழைக்கப்படுகிறது. இங்கு ஏலக்காய், மிளகு, கிராம்பு, வெந்தயம், சீரகம் என பல்வேறு வகையான தோட்டங்கள் அதிகளவில் இருக்கின்றன. காஃபி, பழத்தோட்டங்களும் மிகுதியாக உள்ளன. இவற்றின் நறுமணம் ஒட்டுமொத்த வயநாட்டையே ரம்மியமாக்குகின்றன.
வயநாட்டின் நிலப்பரப்பு சாகச விளையாட்டுகளுக்கு பெயர் பெற்றது. டிரெக்கிங் செல்ல ஆசைபடுபவர்கள் தாராளமாக இங்கு வரலாம். இங்குதான் இந்தியாவின் மிகப்பெரியதும், ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய மண் அணையான பானாசுரா சாகர் அணை இருக்கிறது.
1. வயநாடு வன உயிரின சரணாலயம்
இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வன உயிரின சரணாலயம் ஆகும். 1973ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சரணாலயம், புலிகள் மற்றும் யானைகளை பார்ப்பதற்கு புகழ்பெற்ற ஒன்று. மலை ஏறுவதற்கும், இயற்கை நடை செல்வதற்கும், பல்வேறு வகையான பறவைகளை பார்ப்பதற்கும் சரணாலயத்தின் உள்ளேயே குறிப்பிட்ட பகுதிகள் உள்ளது.
2. பக்ஷிபத்தலம்
பல்வேறு வகையான பறவைகள், காட்டு மாடுகள், மலபார் அணில்கள், அரிய வகையான மரங்கள் ஆகியவற்றிற்கு பக்ஷிபத்தலம் குகைகள் வாழ்விடமாக இருக்கிறது. இக்குகைகள் காட்டின் உள்ளே இருக்கும் பிரம்மகிரி மலையில் 1,700மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்குச் செல்ல வேண்டுமானால் காட்டின் உள்ளே 7 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் வனத்துறை அலுவலகத்தில் முன் அனுமதி வாங்கியிருக்க வேண்டும்.
3. எடக்கல் குகைகள்
நீங்கள் கடந்த காலத்திற்கு செல்ல ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால் எடக்கல் குகைக்கு வாருங்கள். சுல்தான் பத்தேரியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இக்குகையில், இயற்கையிலேயே அமைந்த இரு பாறைகள் உள்ளது. இப்பாறையில் தான் கற்கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை கி.மு. 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் கற்காலம் தொட்டே இப்பகுதியில் மனிதர்கள் வசித்து வந்தது உறுதியாகியுள்ளது.
இத்தனை சிறப்பு வாய்ந்த எடக்கல் குகையை பார்க்க வேண்டுமானால் நீங்கள் அம்புகுத்தி மலை மேல் ஏற வேண்டும். இந்த மலையைச் சுற்றிலும் காபி தோட்டங்கள் அதிகமாக இருப்பதால், காபியின் நறுமணத்தை முகர்ந்து கொண்டே மலை ஏறலாம்.
4. பானாசுரா சாகர் அணை
இது இந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகும். கபினி ஆற்றின் கிளை நதியான கரமனாத்தோடு ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. பாசன வசதிக்காகவும் குடிதண்ணீருக்காகவும் 1979ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. இப்பகுதிக்கு ஏன் இப்படியொரு பெயர் வந்தது என்று கேட்டால் சுவாரஸ்யமான கதையை கூறுகிறார்கள். பாகுபலியின் மகனும் அசுரகுல ராஜாவுமான பானாசுரன் இப்பகுதியை ஆட்சி புரிந்துள்ளார். அதனாலேயே இப்பெயர் வந்துள்ளது.
5. செம்பரா மலையுச்சி
இப்பகுதி மலையேற்ற வாசிகளின் சொர்க்கபுரி எனக் கூறினால் மிகையாகாது. இங்குதான் மிகப் பிரபலமான இதய வடிவிலான செம்பரா ஏரி அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2,100 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்திலிருந்து பனி போர்த்திய பள்ளத்தாக்கின் அழகை காணலாம். இந்த ஏரியின் அருகிலேயே முகாம் அமைத்தும் தங்கலாம்.
6. சூச்சிபாரா அருவி
மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த அருவியின் முழு அழகையும் காண வேண்டுமென்றால் மழைக் காலத்தில் வர வேண்டும். பல அடி உயரத்தில் இருந்து விழும் அருவி, தரையில் சிறு குளத்தை உருவாக்குகிறது. அந்தக் குளத்தைச் சுற்றிலும் பாறைகள் காணப்படுகின்றன. சுற்றுலாவாசிகளுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? இந்த அருவியைச் சுற்றிலும் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடிய அழகான தேயிலை தோட்டங்கள் உள்ளன.
7. பூக்கோடு ஏரி
இந்த நன்னீர் ஏரி கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. காட்டின் நடுவே அவ்வுளவு சீக்கிரத்தில் யார் கண்ணிலும் படாமல் தன் அழகை ஒளித்து வைத்திருக்கிறது இந்த ஏரி. படகு சவாரிக்கு ஏற்ற இடம்.
8. நீலிமலா வீவ் பாய்ண்ட்
இங்கிருந்து மீன்முட்டி அருவியின் அழகையும் அதனைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கையும் காணலாம். வீவ் பாய்ண்ட்டைப் பார்க்க மலையேற்றப் பாதையில் செல்லும் போது உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். அதற்கு காரணம் அங்கிருக்கும் காபி, இஞ்சி, பாக்கு மரத் தோட்டங்களில் இருந்து வரும் வாசனையே. இவ்வளவு தூரம் மலையேறி வீவ் பாய்ண்ட்டை சென்றடைந்ததும் அங்கு ஒரு அழகிய காட்சியை காணலாம். ஆமாங்க, மீன்முட்டி அருவியிலிருந்து விழும் பால் போன்ற நீர் பாறையில் மோதி சிதறும் அற்புதக் காட்சி உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
9. மண்டையோட்டு பாறை (ஃபாண்டம் ராக்)
இதை ஒரு தொல்பொருள் அதிசியம் என்றே கூறலாம். இது பிரபலமான சுற்றுலா தளமும் கூட. இப்பாறை பார்ப்பதற்கு மனிதனின் மண்டையோட்டு வடிவத்தில் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இப்பாறையை சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை பரந்து விரிந்து காணப்படுகிறது. ரம்மியமான இடம் மட்டுமல்லாமல் மலையேறுபவர்களுக்கு உகந்த இடம்.
10. வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம்
இந்த அருங்காட்சியகம் அம்பலவாயில் என்ற ஊரில் உள்ளது. இவ்வூர் சுல்தான் பத்தேரியிலிருந்து 12கி.மீ. தொலைவில் உள்ளது. கேரளாவில் இருக்கும் மிகப்பெரிய தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இதுவும் ஒன்று. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என கண்டறியப்பட்ட பல பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. வீரஸ்மிருதி, கோத்ரஸ்மிருதி, தேவஸ்மிருதி, ஜீவனஸ்மிருதி என நான்கு பிரிவுகள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் புதிய கற்காலம் முதல் 17ம் நூற்றாண்டு வரையிலான பொருட்கள் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளன.
வயநாட்டில் சுற்றிப்பார்க்க என்ன இருக்கிறது, எங்கே செல்லலாம் என்ற பட்டியலை நாங்கள் கொடுத்து விட்டோம். ஊர் சுற்றிப்பார்க்க நீங்கள் தயாரா?
இதையும் படிக்கலாமே: ஊட்டி, கொடைக்கானல் போர் அடித்துவிட்டதா? இதோ புதிய சொர்க்கம்! கேரளாவில் ஒரு காஷ்மீர்! - ’பொன்முடி’