சிறப்புக் களம்

“மொதல்ல அந்தப் பெரியவரை இங்கிருந்து வெளியே அனுப்புங்க” - கொரோனா வார்டின் கலாட்டா அனுபவம்!!

“மொதல்ல அந்தப் பெரியவரை இங்கிருந்து வெளியே அனுப்புங்க” - கொரோனா வார்டின் கலாட்டா அனுபவம்!!

webteam

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தனது நண்பர் பார்த்தசாரதிக்கு ஏற்பட்ட கொரோனா சிகிச்சை அனுபவத்தை அவர் சொல்லக் கேட்டு, ஒரு நகைச்சுவை கதையைப்போல ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் பத்திரிகையாளர் ந.பா. சேதுராமன். அதை நீங்களும் படித்து ரசியுங்கள்…

அய்யா, டிராஃபிக் ராமசாமிபோல தோன்றும் அண்ணன் பெயர் பார்த்தசாரதி. அரசு அதிகாரியாக இருந்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பணி ஓய்வு பெற்றவர். காக்கி பேண்ட், வெள்ளைச் சட்டைதான், அவரது டிரேட் மார்க். சில நாள்கள் முன்னர்தான் கொரோனா வார்டிலிருந்து ரிலீஸ் ஆகி வெளியில் வந்திருக்கிறார், அண்ணன் பார்த்தசாரதி. அதை என்னுடன் இப்படி பகிர்ந்து கொண்டார்.

லேசா இருமலும் தும்மலும் இருந்தது சேதுராமா, கார்ப்பரேசன் ஆளுங்க 108 ஆம்புலன்ஸ்ல வந்து இருமல் தும்மலுக்கு மருந்து கொடுக்கறாங்கன்னு நம்ம பசங்க சொன்னான்க. கார்ப்பரேசன் மருந்துனாலே, கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கும், நமக்கும் சுளுவா குணமாயிடும்னு வண்டியை எதிர்பார்த்து நின்னுட்டிருந்தேன், வண்டியும் வந்துச்சு. கிட்டே போயி விஷயத்த சொன்னேன்...’ ஒங்க அட்ரசை குடுங்க பெரியவரே, நாங்க வீட்டுக்கே வந்துடறோம்னு சொன்னாங்க. பாசக்கார புள்ளைங்களா இருக்காங்களேனு போன் நம்பரையும் சேர்த்துக் குடுத்துட்டு வீட்டுக்குப் போயிட்டேன்.

கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும், வீட்டுக்குள்ள திபுதிபுன்னு பத்துபேரு நுழைஞ்சானுங்க, என்ன ஏதுன்னு என்னை கேட்கக்கூட விடலை. “உங்களுக்கு கொரோனா வந்துருக்கு, கன்பார்ம்னு” சொல்லிட்டு என்னைப் பிடிச்சுத் தூக்கப் பாத்தாங்க. நான் நேரா வீட்டு மொட்டை மாடிக்கு ஓடிட்டேன். “யாராவது கிட்ட வந்தீங்கன்னா, கீழே குதிச்சுடுவேன், ஒரு போன் நம்பர் கொடுத்ததுக்காடா, எனக்கு கொரோனா வந்துடுச்சுனு” சத்தம் போட ஆரம்பிச்சுட்டேன்...

“நீ வரலேன்னா, வீட்ல இருக்கவங்களை தூக்கிட்டுப் போயிடுவோம், வர்றீயா இல்லே பயர் சர்வீஸை கூப்பிட்டு உன்னை புடிக்கட்டுமானு” பயம் காட்டுனானுங்க... நம்மளால வீட்ல இருக்கவங்களுக்கு ஏன் கஷ்டம்னு நானே வண்டில வந்து ஏறிக்கினேன்... “ஏண்டா தம்பிங்களா, சமூக இடைவெளிங்கறாங்களே, ஒரே வண்டில இத்தனை பேரு வந்திருக்கீங்களே, அந்த கொரோனா சட்டம் உங்களுக்குப் பொருந்தாதானு” கேட்டேன்.

“நீ ரொம்பப் பேசற, வா, உனக்கு ஏத்த மாதிரி ஒரு வார்டு இருக்குன்னு” சொல்லிக் கிட்டே, ஆம்புலன்ஸ் கதவை சாத்துனானுங்க... நம்ம வீட்ல இருக்கறவங்களுக்கு அடுத்து என்ன நடக்கப்போவுதுன்னு நல்லாவே தெரியும், அதனால சிரிச்சுக்கிட்டே எனக்கு டாட்டா காட்னாங்க. வண்டி நேரா ஸ்டான்லிக்குப் போச்சு. பெரிய டாக்டரு வந்தாரு.

“ஏற்கெனவே அடுத்தடுத்து, ‘ஹைடெக்ல ரெண்டு டெஸ்ட் எடுத்து அது நெகடிவ்னு வந்திருக்கு, பிபி, சுகர், சால்ட்டுன்னு எந்தக் கோளாறும் இல்ல, இப்பக்கூட இந்த ரூம்ல இருக்கறவங்களை என் கூட அனுப்பிவெச்சீங்கன்னா, அவங்க போறதுக்கு முன்னாடி தண்டையார்பேட்டைக்கு நான் போய்ச் சேர்ந்துடுவேன், அதுவும் மூச்சு வாங்காமன்னு” சொன்னேன்.

டோண்ட் லூஸ் டாக்னு என்னைத் தூக்க வந்தவங்க சொன்னா மாதிரியே அந்த டாக்டரும் சொன்னாரு. சொல்லிக்கிட்டே, அந்த பெரிய டாக்டரு என் மூக்குல கொண்டாந்து ’கப்பு’ வெச்சாரு. வெச்ச வேகத்துலயே அந்த கப்ப புடுங்கி எடுத்துட்டேன், “மிஸ்டர் டாக்டர், எனக்கு மூச்சு வாங்குது, ஏன் மூக்கை மூடறீங்க, நான் சாவறதுக்கானு” கோபமா கேட்டேன். “திரும்பிப்பாருங்க, பெரியவரே, எல்லாருக்கும் இங்கே வெண்டிலேட்டர் வெச்சுதான் ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு, கவலைப்படாதீங்க, காப்பாத்திருவோம்னாரு…”

திரும்பிப்பார்த்தா, எல்லாரும் அந்த வெண்டிலேட்டரு கப்ப மூக்குல வெச்சிக்கிட்டு படுத்துக்கிட்டிருந்தானுங்க.

என்னைப் பாத்து கட்டை விரலை மடிச்சு ‘தம்ப்’ காட்டி, பாராட்டுறானுங்க, அதுல ஒருத்தன் திடீர்னு ’தலைவா, இனிமே நீங்கதான் எங்களை வழிநடத்தனும்னு கத்த ஆரம்பிச்சுட்டான். ‘உங்களுக்கு என்னடா பிரச்னைனு கேட்டா, இவங்க தூக்கிட்டு வந்ததுதான் பிரச்னை, எதுத்துக் கேட்டா, ஏதாவது ஏடாகூடம் ஆயிடுமோன்னு பயந்து அப்படியே படுத்துக்கிட்டு இருக்கோம்ன்னு கதற ஆரம்பிச்சுட்டானுங்க...

அதுக்குள்ள அந்தப் பெரிய டாக்டரு, ரூமை விட்டுப் போயிட்டாரு, அதுவரைக்கும் என்னை எவனும் எந்த செக்கப்பும் பண்ணலை. ஒரு நர்சம்மா, வந்து பக்கத்துல நின்னுது, ’பிபி இருக்கா, சுகர் இருக்கானு விசாரிச்சுது. எதுவும் இல்லேங்கற கரண்ட் மெடிக்கல் ரிப்போர்ட்டை எடுத்து நீட்னேன். அது போயிட்டு இன்னொரு டாக்டர் தம்பியை கூட்டிட்டு வந்துடுச்சு. இப்ப நான் பேசல, ஏற்கெனவே படுத்துட்டிருந்த வெண்டிலேட்டர் பசங்களே நம்ம சார்பா பேச ஆரம்பிச்சுட்டாங்க...

நான் ஆஸ்பிடல் வந்து மொத்தம் ஒருமணி நேரம் கூட ஆகலே, அதுக்குள்ள பக்கத்து பெட்ல இருந்த மொத்த பேரும் போராளிகளா மாறிட்டாங்க. ஓவரா சத்தம் கேட்டதால, மொதல்ல நம்மள அட்டென் பண்ண பெரிய டாக்டரே மறுபடிபடியும் வந்தாரு... “மொதல்ல, இங்கிருந்து அந்தப் பெரியவரை வெளியே அனுப்புங்க, அவரால எல்லா பேஷண்டுக்கும் சிக்கல்னு” சொல்லிட்டு அங்கயிருந்து கிளம்பப் பாத்தாரு. நான் அவரை விடலே, “கையோட இந்த ஸ்டான்லி ஆஸ்பிடல் போலீஸ் இன்ஸ்பெக்டரையும் கூட்டிக்கிட்டு வந்து, நாங்க தான் அவரை அனுப்பி வைக்கிறோம்னு, எண்ட்ரி போட்டுக் கொடுத்தாதான் வெளியே போவேன்னு” கறாரா சொன்னேன்.

“என் மேல நம்பிக்கை இல்லையா பெரியவரே, யாரும் உங்களை இனிமேல் தொல்லை கொடுக்கமாட்டாங்கன்னாரு”, அந்த டாக்டரு! பாக்க பாவமாத்தான் இருந்தது, இருந்தாலும் லீகலா நாம வெளியே போனாதானே நமக்கு சேஃப்டி... ‘அப்ப ஒன்னு பண்ணுங்க, ரிட்டன்ல எழுதிக் கொடுங்கனு கேட்டேன். டாக்டர் போயிட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டரை கூட்டிக்கிட்டு வந்துட்டாரு. இன்ஸ்பெக்டரு பக்காவா, எண்ட்ரி போட்டுக் கொடுத்தாரு.

ஆஸ்பிடல்ல இருந்து தப்பிச்சுப் போயிட்டேன்னு நாளைக்கு இன்னொரு டீம் தேடி வரக்கூடாதுன்னு தான் எழுதி வாங்குனேன்னு அவர்கிட்ட சொன்னேன்... என்ன நினைச்சாரோ தெரியலே, எந்த டிபார்ட்மெண்ட்ல இருந்தீங்க பெரியவரேனு கேட்டாரு, சொன்னேன். ஒரு கும்புடு போட்டுட்டுப் போயிட்டாரு... கிளம்பும்போது பக்கத்து பெட்டு காரங்களைப் பாத்து டாட்டா காட்னேன், “பெரியவரே ஒவ்வொருத்தரா, உன் பின்னாடியே நாங்க வந்துடறோம், போங்கன்னு” கோரஸா சொல்லி வழி அனுப்பிவெச்சாங்க...

“வீட்டுக்கு வந்து மூணு நாளு ஆகுது, கார்ப்ப்பரேசன் காரங்க வர்ற வண்டிகளைத்தான் இப்பத் தேடிட்டிருக்கேன்... நம்மள போட்டோ புடிச்சு மொத்தமா குடுத்துட்டாங்களானு தெரியலே, எந்த வண்டியும், நம்மள பாத்தா நிக்கவே மாட்டேங்குது”

“சான்ஸே இல்லேண்ணே, செம... சரி, நாளைக்கு எங்க பாக்கலாம், நம்ம பாய்ண்ட்டுக்கு வந்துடறீங்களா?”

“நாளைக்கு முழு அடைப்புப்பா, நாம சட்டத்தை கண்டிப்பா மதிக்கணும், மண்டே மீட் பண்ணுவோம், பத்திரமா போயிட்டு வாங்க” - என்றார், அண்ணன் பார்த்தசாரதி.